Published : 25 Jun 2020 07:20 PM
Last Updated : 25 Jun 2020 07:20 PM

டிக் டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி

புதுடெல்லி

டிக் டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற இளம்பெண், புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதை அவரது மேலாளர் உறுதி செய்துள்ளார்.

திரைப்படம், தொலைக்காட்சி மூலம் பிரபலங்களான காலம் போய், இணையம், சமூக ஊடகங்கள் மூலமாகப் பிரபலமடைபவர்களின் காலம் இது. அப்படி டிக் டாக் தளம் மூலம் பல்வேறு இளைஞர்கள், தங்களின் தனித்திறமைகளால் பிரபலமாகி வருகின்றனர். அப்படி தனது நடனத்தின் மூலம் பிரபலமானவர் டெல்லியைச் சேர்ந்த சியா கக்கர். இவரை டிக் டாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தொடர்கின்றனர்.

இவரது மரணம் குறித்துப் பகிர்ந்துள்ள புகைப்படக் கலைஞர் விரல் பாயானி, "இனிமையான டிக்டாக் கலைஞர் சியா கக்கர் தற்கொலை செய்து கொண்டார் என்ற வருத்தமான செய்தி கிடைத்தது. அதைப் பதிவிடும் முன், அவரது மேலாளர் அர்ஜுன் சரீனிடம் பேசினேன். அவர், முந்தைய இரவு ஒரு பாடல் தொடர்பாகப் பேசியதாகவும், நல்ல மனநிலையில் அவர் பேசியதாகவும் கூறினார். சியா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது அவருக்கும் தெரியவில்லை. இந்தப் பாதையை சியா தேர்ந்தெடுத்தது உண்மையில் வருத்தமே. உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் சியாவின் மேலாளர் அர்ஜுன், "இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையினால் இருக்கலாம். வேலையைப் பொறுத்தவரை அவர் நன்றாகவே இருந்தார். சியா ஒரு பிரகாசமான திறமை" என்று கூறியுள்ளார்.

டிக் டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் சியா இயங்கி வந்தார். சமூக வலைதளத்தில் சியாவைப் பின்தொடர்ந்து வரும் பல ரசிகர்கள் அவரது தற்கொலை குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 14-ம் தேதி அன்று, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டது நினைவுகூரத்தக்கது. சுஷாந்தின் மரணத்துக்கு அவரது மன அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x