Published : 03 Sep 2019 01:10 PM
Last Updated : 03 Sep 2019 01:10 PM
இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பசீத் நடிகரின் படத்தைப் ரீட்வீட் செய்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தவறான படத்தைப் பகிர்ந்த அவரை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
பசீத் பகிர்ந்த ட்வீட்டில், "அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் பெல்லட் குண்டால் கண் பார்வை இழந்தார். குரல் கொடுங்கள்" என பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரே இது தவறானது என்பதை ட்விட்டரில் போட்டுடைத்தார்.
நைலா இனாயத் என்ற அந்த பத்திரிகையாளர் அப்துல் பசீத்தின் ட்வீட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்ததோடு அதன் கீழ், முன்னாள் தூதர் அப்துல் பசீத் நடிகை ஜானி சின்ஸை பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர் எனத் தவறாகப் புரிந்து கொண்டு இதனைப் பதிவிட்டுள்ளார் எனக் கூறியிருக்கிறார்.
இந்த உண்மை அம்பலமானதும் அப்துல் பசீத் தனது ட்வீட்டை நீக்கிவிட்டார். இருந்தாலும் அவரை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் இதுபோன்ற போலியான தகவல்களைப் பகிர்வது இது முதன்முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மஹிலா லோதி என்ற பாகிஸ்தானின் உயரதிகாரி ஒருவர் காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகள் எனக் கூறி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். ஆனால் அது உண்மையில் பாலஸ்தீனத்தில் எடுக்கப்பட்டது.
தற்போது முன்னாள் தூதரே இவ்வாறாக தவறான தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் இப்போது பகிர்ந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் வயது வந்தோருக்கான படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்ற நபராவார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் இருந்து இதுபோன்ற போலி செய்திகள் உலாவருவதாகவும் எனவே இத்தகைய உணர்வுப்பூர்வமான செய்திகளைப் பகிரும் முன் அதன் உறுதித்தன்மையை ஆராய வேண்டும் என சைபர் குற்றவியல் துறை எச்சரிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT