Published : 30 Jul 2019 01:20 PM
Last Updated : 30 Jul 2019 01:20 PM
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டிக்கு டூடுல் வெளியிட்டு கவுரவித்துள்ளது கூகுள் நிறுவனம்.
தமிழகத்தில் பிறந்த மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டிக்கு இன்று 133-வது பிறந்த நாள். அதை நினைவுகூரும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் 'மருத்துவமனை தினமாகக்' கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முத்துலட்சுமி ரெட்டியின் வரலாறு:
முத்துலட்சுமி ரெட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்தார். பெண் கல்வி எதிர்ப்புகளை சமாளித்து கல்வி கற்றவர். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சையியல் துறையில் இந்திய அளவிலேயே இணைந்த முதல் பெண் மாணவி என்ற பெருமையைப் பெற்றவர். 1
912-ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரானார். அதே ஆண்டு சென்னை மகப்பேறு மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவராக இணைந்தார்.
1918-ல் வுமன்ஸ் இந்தியா அசோஷியேசனை நிறுவினார். 1925-ம் ஆண்டு சட்ட மேலவை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாக தடைச்சட்டம் போன்ற சட்டங்களை நிறைவேற்ற பாடுபட்டார்.
1954-ல் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் நிறுவப்பட்டது. தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சேரும். 1956-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 1968-ம் ஆண்டு தனது 81-வது வயதில் அவர் இயற்கை எய்தினார்.
இன்றைய டூடுலை வடிவமைத்தவர் பெங்களூருவைச் சேர்ந்த ஓவியர் அர்ச்சனா ஸ்ரீநிவாசன். இது, மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பெண்கள், சிறுமிகளுக்கு வழிகாட்டுவது போல் வடிவமைகப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT