Published : 10 Feb 2020 04:55 PM
Last Updated : 10 Feb 2020 04:55 PM
திண்டுக்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செவ்வந்திப்பூக்கள் அதிக விளைச்சல் கண்டுள்ளதால் அறுவடை நடைபெற்றுவருகிறது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாசி மாதம் கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதால் தேவை அதிகரித்து விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான சின்னாளபட்டி அருகேயுள்ள நடுப்பட்டி, கேத்தையன்கவுண்டன்பட்டி, முருகன்பட்டி, ரெங்கசாமிபுரம், ஜாதிக்கவுண்டன்பட்டி, பெருமாள்கோயில்பட்டி உள்ளிட்ட கிராமப்புறங்களில் அதிகபரப்பில் செவ்வந்திப்பூ பயிரிடப்பட்டுள்ளது.
நடவு செய்து மூன்று மாதங்களில் தற்போது விளைச்சல் கண்டுள்ளது. இதனால் செவ்வந்தி பூ நடவுசெய்யப்பட்ட பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக ரம்மியமாக காட்சியளிக்கின்றன. பூ மார்க்கெட்டிற்கு கொண்டுசெல்ல ஏதுவாக அதிகாலையிலேயே தொழிலாளர்கள் பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு இவை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவிற்கு வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.
செவ்வந்திப்பூ பயிரிட்டுள்ள பெருமாள்கோயில்பட்டியைச் சேர்ந்த விவசாயி சண்முகம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் செவ்வந்திபூக்கள் மண்ணின் தன்மையால் அடர்ந்த மஞ்சள் நிறத்தைத் தருகிறது. இதனால் திண்டுக்கல் செவ்வந்தி பூக்களுக்கு மார்க்கெட்டில் நல்லவரவேற்பு உள்ளது. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். தற்போது ஒரு கிலோ ரூ.40 வரை விற்பனையாகிறது. மாசி மாதம் தொடக்கம் முதல் கிராமப்புறங்களில் கோயில் விசேஷங்கள் அதிகம் இருக்கும் என்பதால் தேவை அதிகரித்து செவ்வந்திப்பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதே செவ்வந்தி பயிரிட்ட விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைத்துவருகிறது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT