மலக்குழியில் இறங்க நிர்பந்திக்கப்பட்டு உயிரிழந்த தன் மகனின் மரணத்திற்கு நியாயம் கேட்க அதிகாரத்தை எதிர்க்கும் தாயின் போராட்டம்தான் ‘விட்னஸ்’.
தூய்மைப் பணியாளரான இந்திராணி (ரோஹினி) தனது மகன் பார்த்திபனுடன் வாழ்ந்து வருகிறார். கட்டாயப்படுத்தப்பட்டு மலக்குழியில் இறக்கி விடப்பட்ட மகன் பார்த்திபன் உயிரிழப்பது தெரிய வர, உடைந்து போகிறார் இந்திராணி. இதற்கு காரணமானவர்களை தண்டிக்க சட்டத்தின் துணை கொண்டு அதிகாரத்தை எதிர்க்கத் துணியும் அவரது போராட்டம் இறுதியில் வென்றதா? இல்லையா? - இதுதான் படத்தின் திரைக்கதை. தீபக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு முத்துவேல், ஜே.பி சாணக்யா திரைக்கதை எழுதியுள்ளனர்.
நடக்கும் நிகழ்வுகளை பக்கத்தில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுகளை கட்டியெழுப்பி கூர்மையான உரையாடலை யதார்த்தமான காட்சிகளின் வழியே பேச முனைந்திருக்கிறார் இயக்குநர் தீபக். அவர் பேச எத்தனிக்கும் அந்த உரையாடல் பிரசாரத்தன்மையற்று, ஆவணப்படுத்திற்கான சாரத்திலிருந்து விலகி காட்சிப் படிமமாக தேங்கியிருப்பது தேர்ந்த திரைக்கதை வடிவம். வகுப்பெடுக்கும் வசனங்களற்று, ‘மீட்பர்’ இல்லாத கதாபாத்திரங்கள், திரைசமரசத்திற்காக வைக்கப்படும் பொய்யான வெற்றி என இதிலேதும் சிக்காத திரைக்கதை புதுமை.
வசனங்களின் வழி வலியை கடத்தி அயற்சியைத் தூண்டாமல், அதற்கு மாற்றாக கதாபாத்திரங்களின் நடிப்பை முதலீடாக்கி காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது பார்வையாளர்களுக்கு இயக்குநர் கடத்த நினைக்கும் உணர்வுகளுக்கான கச்சிதமான மொழி. குறிப்பாக மலக்குழிக்குள் கட்டாயப்படுத்தப்பட்டு இறக்கப்படும் பார்த்திபன் தேர்ந்த நீச்சல் வீரன். அதன் வழி நீருக்குள் மூச்சை அடக்கும் திறன்கொண்ட ஒருவரால் கூட மலக்குழியில் தாக்குப்பிடிக்க முடியாததை, சாமானியன் ஒருவரின் நிலையுடன் மறைமுகமாக ஒப்பிட்டது நுணுக்கம்.
அதேபோல, எங்கேஜிங் திரைக்கதையில் படம் நிகழ்த்த முயலும் உரையாடல் அழுத்தமானது. படத்தின் சங்கிலி இறுதியாய் ஒரு கட்சியுடன் சென்று முடியாமல், அதிகார அடுக்குகளுக்கும் அதற்கு காரணமாக இருக்கும் சாதியையும் எதிர்த்து கேள்வி கேட்கிறது. செம்மஞ்சேரியில் குற்றவாளிகள் இருப்பதாக சித்தரிக்கும் காவல் துறையின் போக்கு, தூய்மைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, மேலிடத்தில் அவர்களுக்கு கொடுப்படும் அழுத்தம், கம்யூனிஸ்ட்டுகளின் களப் போராட்டங்கள், சென்னையிலிருந்து புறநகர்களுக்கு தூக்கியடிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிற்சங்கமாக ஒன்றிணைவதன் முக்கியத்துவம் என படம் பேசும் அரசியல் முக்கியமானது.
தவிர, மறைமுகமாக சென்னையை ஒரு கதாபாத்திரமாக்கியிருப்பதும், பெண்கள் சார்ந்து கதை நகர்வதும், வர்க்க நிலை ஒருபோதும் சாதியின் கோரத்திலிருந்து விடுபட வைக்காது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்கிறது படம்.
‘உன் கை நீளலாம்; என் வாய் நீளக்கூடாதா’, ‘கொடுக்குற காசு கூரைய பிச்சி கொட்டுது லீவு போட’ என வசனங்களில் சீறும் ரோஹினி மிகையில்லாத யதார்த்தமான நடிப்பில் ஈர்க்கிறார். மகனை இழந்து வாடும் காட்சிகளை வசனங்களின்றி கடத்த இயக்குநருக்கு நம்பிக்கையளித்திருக்கிறது அவரது நடிப்பு. அத்தனை சோகம் அந்த முகத்தில்!
ஸ்ரத்தா ஸ்ரீநாத் குறைந்த நேரம் வந்தாலும் அதற்கு நியாயம் சேர்க்கும் நடிப்பை பதிவு செய்கிறார். நிஜ களப்போராளியான ஜி.செல்வா திரையிலும் நடிப்பால் களமாடி கவனம் பெறுகிறார். தவிர சண்முக ராஜா, அழகம் பெருமாள், சுபத்ரா ராபர்ட், ராஜீவ் ஆனந்த் உள்ளிட்டோர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
சமூகத்தின் முன்னே ஒரு கண்ணாடியை நிறுத்தி, அதில் நடக்கும் சம்பவங்களை பிரதிபலிக்கும் வகையிலான படத்தின் ஒளிப்பதிவும், அதற்கேற்ற ரமேஷ் தமிழ் மணியின் பின்னணி இசையும், கதையோட்டதுடன் கலக்கும் பாடல்களும் முழுமையான காட்சி அனுபவத்திற்கு உதவுகின்றன.
மலக்குழி மரணங்கள், அதன் மீதான அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு, அதற்கு காரணமாகவும் சாதிய வேர், சுவாரஸ்யமான நீதிமன்ற உரையாடல்கள், எதிர்பாராத க்ளைமாக்ஸ் என அழுத்தமான திரைக்கதையால் சாதிய மலக்குழி மரணங்களை நிகழ்த்தும் அதிகார வர்க்கத்திற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது ‘விட்னஸ்’. சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
WRITE A COMMENT