'த்ரிஷ்யம்' சீரிஸ் படங்களின் தொடர் வெற்றி மற்றும் '12th Man' படத்தை அடுத்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘கூமன்’ (Kooman). படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.ஆர்.கிருஷ்ணகுமார் எழுதியிருக்கிறார். ஜீத்து ஜோசப்பிற்கு உரிய களமான க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெற்றியை மீண்டும் தன்வசப்படுத்தியிருக்கிறார். நாயகன் எவ்வளவு புத்திக்கூர்மையான போலீஸ் என்பதை படத்தின் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களுக்கு விவரித்திருக்கும் இடம் அருமை. இயக்குநரின் சிக்னேச்சர் பிராப்பர்ட்டீஸ்களான மலைக் கிராமம், போலீஸ் ஸ்டேசன், டீக்கடை இம்முறை வெவ்வேறு கதைமாந்தர்களுடன் நிகழ்கால கேரள - தமிழக எல்லைப் பகுதியில் நிகழும் குற்றச் சம்பவங்களைப் பேசியிருக்கிறது.
முதல் பாதியில் குடும்பக்கதை போல ஆற அமர செல்லும் கதையின் போக்கு திடீர் திருப்பத்தில் வேகமெடுக்க இடைவேளையில் இளைப்பாற்றி இரண்டாம் பாதியில் பார்வையாளர்களை பரபரப்பாக்கி பரவசமடையச் செய்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். ஏற்கெனவே இந்த ஜானரில் ‘அஞ்சாம் பாதிரா’ (Anjaam Pathiraa) திரைப்படம் வந்துள்ளதை பார்வையாளர்களின் மூளை நினைவுபடுத்தினாலும், இது வேறு என்பதே நிதர்சனம். காரணம் கேரளாவில் அண்மையில் நடந்தேறிய ஒரு கொலைப்பாதக செயல், ஜீத்து ஜோசப்பின் இந்த 'கூமன்’ திரைப்படத்தை உண்மைக்குப் பக்கத்தில் வைக்க ஒப்பிட்டுப் பார்க்க செய்திருக்கிறது.
கேரள - தமிழ்நாடு எல்லையோரத்தில் அமைந்துள்ளது அந்த நெடும்பாரா காவல் நிலையம். அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் கிரி ஷங்கரின் (ஆசீஃப் அலி) நுட்பமான புத்திக் கூர்மையும், துப்பறியும் திறனும் பல வழக்குகளுக்கு எளிதில் தீர்வு காண உதவுகிறது. இது கிரி ஷங்கருக்கு அக்காவல் நிலையத்தின் உயர் அதிகாரிகளின் பாராட்டையும், அன்பையும் பெற்றுத் தருகிறது. குறிப்பாக, அந்த ஸ்டேசனின் சர்க்கிள் இன்ஸ்பெக்டரான சோமசேகரன் பிள்ளையின் (ரெஞ்சி பனிக்கர்) அன்பும் வழிகாட்டுதலும், கிரி ஷங்கருக்கு பெருமையைப் பெற்றுத் தரும் அதேநேரத்தில் பொறுமையையும் கற்றுத் தருகிறது. இது அங்கு பணியாற்றும் சில காவலர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்தச் சூழலில் சோமசேகரன் பிள்ளை பணி ஓய்வு பெறுகிறார். அந்த ஸ்டேசனுக்கு புதிய சர்க்கிள் இன்ஸ்பெக்டராக வருகிறார் ஹரி லால் (பாபு ராஜ்). இதனைத் தொடர்ந்து அந்த காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால் பாதிக்கப்படும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவலர்களை நிர்பந்திக்கின்றனர். மக்கள் சந்திக்கும் இந்தத் தொடர் குற்றச் சம்பவங்களுக்கு அந்த போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் உள்ளடி அரசியலும், கதை நாயகனின் உருமாற்றமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
ஸ்டேசனுக்கு வரும் அந்த பிரச்சினைகள் என்ன? கதை நாயகனின் மாற்றத்திற்கு என்ன காரணம்? அவனுக்கு அந்த யோசனையை சொல்லித் தந்தது யார்? அதிலிருந்து மீண்டாரா? இல்லையா? இந்த விசாரணைகளின் போது கதை நாயகன் கண்டுபிடிக்கும் புதிய பிரச்சினை என்ன? அதற்கு யார் காரணம்? அதை எப்படி துப்பறிந்து வெற்றி கொள்கிறார் என்பதே படத்தின் திரைக்கதை.
மதிநுட்பம், அப்பாவித்தனம் பழிவாங்கும் எண்ணம் இப்படி முப்பரிமாணத்தை வெளிப்படுத்தும் பாத்திரத்தில் ஆசீஃப் அலி தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எதிர்மறை சிந்தனைத் தூண்டலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் காட்சிகள், தன்னை காயப்படுத்தியவர்களை பழிவாங்கி, அவர்கள் பாதிக்கப்படும் போது ஏற்படும் அளவில்லா மகிழ்ச்சியை அளவான மென் சிரிப்பில் வெளிக்காட்டுத் தருணங்களில் ஸ்கோர் செய்கிறார். தன்னை பாராட்டும்போது பெருமையும், கடிந்து கொள்ளும்போது கோபத்தையும் வெளிப்படுத்துவது எல்லா மனிதர்களின் இயல்பான குணாதிசயம்தான். இதில் ஏதாவது ஒன்று அதிகமானால் அந்த மனிதன் எந்த எல்லை வரை செல்வான் என்பதை தனது இயல்பான உடல்மொழியால் ஆடியன்ஸுக்கு கடத்தியிருக்கும் ஆசீஃப் அலி நடிப்பு அபாரம்.
இந்தப் படத்தின் மற்றொரு முக்கியமான பாத்திரப் படைப்பு மணியன் கதாப்பாத்திரத்தில் ஜாஃபர் இடுக்கி. களவுத் தொழிலுக்கான நடமாடும் என்சைக்ளோபீடியாவாக இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே திருட்டை மட்டும் பேசாமல் அதை செய்வதற்கு தேவையான அறிவாற்றலை அனுபவ ரீதியாக கதை நாயகனுக்கு கற்பிக்கும் இடங்கள் கவனிக்க வைக்கின்றன. இதுபோல படத்தில் வரும் ஊர்காரர்கள், போலீஸார், ஆசீஃப் அலியின் அம்மா, பக்கத்து வீட்டுப் பெண் லெட்சுமியென அனைவருமே தங்களது பங்களிப்பை நிறைவாகவே செய்துள்ளனர்.
சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானரான இந்தப் படத்திற்கு சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவும், விஷ்ணு ஷ்யாமின் இசையமைப்பும் பலம் சேர்க்கின்றன. பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் நடப்பதால் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் ஆசீஃப் அலி புலனாய்வு செய்யும் தொடர் க்ரைம் வழக்குகளுக்கான சேஸிங் காட்சிகளுக்கான பின்னணி இசைக்கோர்ப்பு அருமை.
நாம் வாழும் எந்த ஊரிலும் எப்போது வேண்டுமானாலும் ஆபத்தானதாக மாறக்கூடிய இடங்களில் டீ கடைக்கும், ஒயின் ஷாப்பிற்கும் முக்கியப் பங்கு உண்டு. மொராக்கோ அணியின் புஃட்பால் வெற்றி குறித்த உலகச் செய்தி தொடங்கி, மூன்றாவது தெருவின் முட்டுச் சந்து வீட்டு சொல்லுங்க மாமாகுட்டி செல்போன் உரையாடல் குறித்த உள்ளூர் செய்தி வரை இங்கு பேசப்படாத விஷயங்களே இருக்காது.
அந்த வகையில் இந்த இரண்டு இடங்களும் ஒரு அறிவுச் செறிந்த நெடும்பாரா ஸ்டேஷன் கான்ஸ்டபிளின் வாழ்க்கையில் நிகழ்த்தும் பிளாக் மேஜிக்தான் இந்த 'கூமன்' திரைப்படம். இந்தப் படம் பார்த்துவிட்டு டீக்கடைக்கு போகும்போது அங்கு ஏதாவது பேசிக் கொண்டிருப்பவர்களை உங்களோடு சேர்ந்து 'கூமனும்' கவனித்துக் கொண்டே இருக்கலாம். நவம்பர் மாதம் திரையரங்களைத் தொட்ட இத்திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது.
WRITE A COMMENT