நந்திதா (நதியா) 'சுமனா' என்கின்ற மகப்பேறுக் காலத்திற்கு முன்பான (prenatal class) வகுப்புகளை நடத்தி வருகிறார். நோரா ஜோசப் (நித்யா மேனன்), மினி (பார்வதி), வேணி (பத்ம ப்ரியா), சாயா (சயோனாரா), க்ரேஸி (அர்ச்சனா), ஜெயா (அம்ருதா சுபாஷ்) ஆகிய 6 கர்ப்பிணிகளும் அந்த வகுப்பில் இணைகின்றனர். தனிப்பட்ட பிரச்சினைகளை சுமந்து வரும், வெவ்வேறு மொழிகளையுமுடைய 6 பேரும் ஓரிடத்தில் சங்கமிக்கும்போது, அவர்களிடையே நடக்கும் உரையாடல், மனமாற்றம், மகப்பேறு குறித்த புரிதல் என பல்வேறு விஷயங்களை ஒரு ஃபீல்குட் டிராமாவாக சொல்லியிருக்கும் படம்தான் ‘ஒண்டர் உமன்’ (Wonder Women). படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘பெங்களூரு டேஸ்’, ‘கூடே’ என ஃபீல்குட் படங்களை தனது அடையாளமாக மாற்றி வெற்றிக்கண்ட அஞ்சலி மேனன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வெறும் 1 மணிநேரம் 20 நிமிடத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அதில், நதியா உள்ளிட்ட 7 கதாபாத்திரங்களுக்கான கதைகளை உருவாக்கி கோர்த்திருக்கும் திரை ஆக்கம் ஈர்க்கிறது. குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய தேவையை ஏற்படுத்தாமல், நடிகைகள் அனைவரும் அவர்களுக்கான கதாபாத்திரத்தன்மையுடன் இழைவது எமோஷனல் காட்சிகளுக்கு பலம். குறிப்பாக பார்வதி - நித்யாமேனன் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது.
பல்வேறு மொழிகளை பேசும் 6 பேரும் சங்கமிக்கும் இடத்தில் மொழிப் பிரச்சினை வர, ஆங்கிலம் பொது மொழியாக்கப்படுகிறது. அதிலும், வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் இந்தியில் பேச, சுத்தியிருப்பவர்கள் முழிக்கும் காட்சியில், ‘ராஷ்ட்ரா பாஷா’ அதாவது இந்தியாவின் தேசிய மொழி இந்திய தெரியாதா? என கேட்கிறார் அந்தப் பெண். உடனே ‘ராஷ்ட்ரா பாஷாலாம் ஒண்ணும் கிடையாது’ என சொல்வதும், ‘மதராஸி’ என அதேபெண் விளிக்கும் காட்சியில் அதற்கு எதிரான பதிவும், ‘சௌத் இந்தியாவும் இந்தியாவுல தான் இருக்கு’ என அந்த ஒட்டுமொத்த காட்சியும் அரசியல் டச். அது எந்த விதத்திலும் கதையிலிருந்து விலகாமல் கதையோடு ஒன்றுவது சுவாரஸ்யம்.
சிங்கிள் மதர், கணவரின் அதீத அக்கறையால் அசூசை கொள்ளும் பெண், குழந்தைக்காக கனவுக்கோட்டை கட்டும் தம்பதி, குறிப்பிட்ட வயதைத் தாண்டி கர்ப்பம் தரிக்கும் பெண் என ஒவ்வொருவருக்குமான பின்கதைகளும், அவர்களுக்கான பிரச்சினைகளும் அதை கோர்த்திருந்த விதம் காட்சிகளுக்கு அடர்த்தி. பார்வதிக்கான பின்கதை தெளிவில்லையோ என உணரும்போது, தனிமையில் அமர்ந்து உணவகத்தில் அவர் உண்ணும் காட்சியின் க்ளோசப் ஷாட் அவரின் மனநிலையை பிரதியெடுக்கிறது. தனது நடிப்பின் மூலம் உணர்வை கடத்தும் அந்தக் காட்சி க்ளாஸ்!
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கணவர்களுடன் அமர்ந்து பேசும் காட்சியில் வசனம், எமோஷன் ஓகே என்றாலும் கூட, அது ஓர் உரையாடலை யூடியூப்பில் கேட்பது போன்ற உணர்வைத்தருகிறது. தவிர, சில கதாபாத்திரங்கள் உடனே மாற்றம் கொள்வது, அதன் குணாதிசயங்கள் வானிலைப்போல திடீரென மாறுவது இயல்பிலிருந்து தள்ளி நிற்பதை உள்வாங்க முடியவில்லை. க்ளைமாக்ஸ் காட்சிகளில் தானே எல்லோரும் நல்லவர்களாக மாறுவார்கள்?!
கர்ப்பிணிகளுக்கான பயம், மனநிலை, குழப்பங்கள், மூட் ஸ்விங்கை சுற்றியே படம் நகர்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையும், மகேஷ் மாதவன் ஒளிப்பதிவும் இதம். வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை தன் படங்களில் அதிகம் விதைக்கும் அஞ்சலி மேனன் தன் திரைக்கதையால் ஒருவித ஃபீல்குட் உணர்வைத்தருகிறார்.
இருப்பினும் கர்ப்பக் காலம், குழந்தை, கணவன் - மனைவி உறவு என பேசும் படம் கர்ப்பிணி பெண்கள் என 6 கர்ப்பிணிக் கதாபாத்திரங்கள் மூலம் ஓர் உணர்வுபூர்வ அனுபவத்தைத் தருகிறது இந்த சினிமா. ஆனால், இந்த சப்ஜெக்டில் தொடர்பில்லாத மற்றவர்களுக்கு எந்த அளவில் கனெக்ட் ஆகும் என்பது சந்தேகமே. அஞ்சலி மேனனின் மற்ற படங்களைப் போல எதிர்ப்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றம் கூட மிஞ்சலாம்!
WRITE A COMMENT