அனல் மேலே பனித்துளி Review: பாலியல் வன்கொடுமையும் சமூகமும் - தவறவிடக் கூடாத அழுத்தமான படைப்பு


அனல் மேலே பனித்துளி Review: பாலியல் வன்கொடுமையும் சமூகமும் - தவறவிடக் கூடாத அழுத்தமான படைப்பு

தன்னுடைய உடலை தனக்கெதிரான ஆயுதமாக பயன்படுத்தும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் பெண்ணின் சீற்றமே ‘அனல் மேலே பனித்துளி’.

தன்னுடன் பணியாற்றும் பெண்ணின் திருமணத்திற்காக சென்னையிலிருந்து புறப்பட்டு கொடைக்கானல் செல்கிறார் மதி (ஆன்ட்ரியா). திருமணம் முடிந்து அந்த பகுதியைச் சுற்றிபார்க்கச் செல்லும் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். அடையாளம் தெரியாத அந்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர அவர் நடத்தும் அகம் - புறம் சார்ந்த போராட்டமே படத்தின் திரைக்கதை. படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் தயாரித்திருக்கும் இப்படத்தை கெய்சர் ஆனந்த் இயக்கியிருக்கிறார். விறுவிறுப்பு குறையாமல் பாலியல் வல்லுறவுக்குப் பிறகான ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை கச்சிதமாக திரைக்கதையாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அதற்கான முகமாக ஆன்ட்ரியாவின் நடிப்பு யதார்த்தின் நெருக்கத்தை கூட்டுவதால், நம்மால் எளிதில் திரைக்குள் அகப்பட முடிகிறது.

ஆன்ட்ரியா முகத்தில் தோன்றும் பதற்றமும், பயமும், அவர் எதிர்கொள்ளும் சவாலுக்கான மனநிலையின் தாக்கமும் நம்மையும் தொற்றி அகல மறுக்கிறது. மொத்தக் கதையின் ஆன்மாவாக உணர்ச்சிகளின் வழியே தன்னிலையை சிறப்பாக கடத்தியிருக்கிறார் ஆன்ட்ரியா. அவரைத் தாண்டி அழகம் பெருமாள், இளவரசு இருவரின் நடிப்பு கதாபாத்திரத்தன்மையை மெருகேற்றுகிறது. அழுத்தமான நடிப்பால் சீனியர் நடிகர்கள் என்பதை உணர்த்துகின்றனர். ஆன்ட்ரியாவின் காதலனாக வரும் ஆதவ் கண்ணன் கதாபாத்திர குணாதிசயங்கள் யதார்த்த உலகில் நம்மை பொருத்திப் பார்க்கத் தூண்டுகிறது.

படம் அழுத்தமான பல கேள்விகளை எழுப்பி விடை காணச் சொல்கிறது. ‘ஆண்கள் என்றாலே அதிகாரம்தான். அதுவும் அதிகாரத்துல இருந்தா?’, ‘நம்மூர் பொண்ணுங்க துப்பாக்கி காட்னா கூட நெஞ்ச நிமிர்த்தி நிப்பாங்க. துணிய அவுத்துட்டா ஒதுங்கி ஒடுங்கி போயிடுவாங்க’, ‘மானம்ங்குறது நம்ம வாழ்ற வாழ்க்கையில இருக்கு’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. ஒரு பெண்ணை ஒடுக்க அவளது உடலையே ஆயுதமாக்குவது, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குவது, எது மானம்? அது அவமானம்? பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கான லூப்ஹோல் என பல விஷயங்களை பேசும் விதம் படத்தை கூர்மையாக்குகிறது.

வெறும் சட்டப் போராட்டம் என்ற புள்ளியில் நீர்த்துப் போகாமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அகம் சார்ந்த உளவியல் ரீதியான பதற்றத்தையும், போராட்டத்தையும், சிக்கலையும் பேசியிருப்பது, மெதுவாக நகரும் திரைக்கதையின் தொந்தரவில்லாத காட்சியமைப்பை கட்டியெழுப்புகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உமா தேவியின் வரிகளில் ‘நான் இங்கே’ பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிக்க வைக்கின்றன. வேல்ராஜ் ஒளிப்பதிவு காவல் நிலைய காட்சிகளின் இருள் தன்மையின் அடர்த்தியையும், அதுக்கே உண்டான மனநிலையையும் உருவாக்கித்தருகின்றன. காட்சிகளுடன் பிண்ணனி இசை ஒன்றியிருப்பது கூடுதல் பலம்.

ஆடைக் கட்டுப்பாடு குறித்த கேள்வியும், பெண்ணுடலை அவர்களுக்கு எதிரான ஆயுதமாக்கும் போக்கு குறித்தும் பிரசாரமில்லாத திரைக்கதையாக்கியிருக்கும் படத்தில் இறுதிக்காட்சியின் உரையாடல் வகுப்பெடுக்கும் உணர்வை தருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிகளுக்கு அருகிலேயே காவல் துறை அதிகாரி விட்டுச்செல்வது தர்க்க ரீதியான நெருடல். டப்பிங் ஆங்காங்கே பிசிரு தட்டுவது காட்டிக் கொடுக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி, ‘லவ் டுடே’ போன்ற படங்கள் கொண்டாடப்படக்கூடிய இதே சூழலில், காட்சியிலும், கன்டென்டிலும் செறிவுகொண்ட ‘அனல் மேலே பனித்துளி’ தவறவிடக் கூடாது படைப்பு.

FOLLOW US

WRITE A COMMENT

x