ஓடிடி திரை அலசல் | Rorschach - தீரா பகைமை... அச்சுறுத்தப்படும் பேய்... அட்டகாச அனுபவம்!


ஓடிடி திரை அலசல் | Rorschach - தீரா பகைமை... அச்சுறுத்தப்படும் பேய்... அட்டகாச அனுபவம்!

தனக்கு ஏற்பட்ட பெருங்கொடுமையால் பழிவாங்கும் எண்ணம் உடலெங்கும் ஊறிப்போன ஒருவனின் தீரா பழிவேட்டையே ‘ரோர்சாக்’ (Rorschach). லூக் ஆண்டனி (மம்முட்டி) காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளிக்கிறார். அதில், கர்ப்பிணியான தனது மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, விபத்து நிகழ்ந்தாகவும், கண் விழித்து பார்க்கும்போது மனைவியை காணவில்லை என்றும் புகாரில் குறிப்பிடுகிறார். விபத்து நடக்கும் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தும் காவல்துறை, அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என இறுதில் கைவிரித்துவிடுகிறது. அதை ஏற்றுக்கொள்ளாத லூக் ஆண்டனி அடர்ந்த காடுகளை ஒட்டிய கிராமத்தில் முகாமிட்டு தனது மனைவியை தேடும் படலத்தை தொடர, அங்கே நிகழும் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கும் சைக்கலாஜிக்கல் ஹாரர் - த்ரில்லர் படம்தான் ‘ ‘ரோர்சாச்’ (Rorschach).

சாதாரணக் கதை என்றாலும், அதனை நான் லீனியர் முறையில் சைக்காலஜிக்கல் த்ரில்லராக திரைக்கதையாக்கிய விதம் பார்வையாளர்களை கவர்கிறது. ‘கெட்டியோலானு எந்தன் மாலாக்கா’ படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சமீர் அப்துலின் சுவாரஸ்யமான திரைக்கதை படத்தின் தரத்தை மெருக்கேற்றியிருக்கிறது. 1950களின் முற்பகுதியில் ‘ஹெர்மன் ரோர்சாக்’ என்ற சைகார்டிஸ்ட், மனிதர்களின் ஆளுமைப் பண்புகளைக் கண்டறிவதற்காக ஆய்வுகளை நடத்தியவர். அவரது பேரைக்கொண்டு படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

மனித உறவுகளுக்குள்ளான உளவியல் சிக்கல்கள், அதன் பல்வேறு அடுக்குகள், பேராசை, அன்பு, காதல், பழிவாங்கும் உணர்ச்சி என மனித மனங்களை குறுக்குவெட்டுத் தோற்றமிடும் படம் எந்தவித இடையூறுமில்லாமல், விறுவிறுப்பாக பயணிக்கிறது. மொத்தப் படத்திற்கும் கணிக்க முடியாத தனது மன ஓட்டத்தின் மூலம் வெளிச்சம் பாய்ச்சுகிறார் மம்முட்டி. வார்த்தைகளில் கஞ்சத்தனத்தை கடைபிடிக்கும் அவரது கதாபாத்திரம் உணர்ச்சிகள் வழி உணர்வுகளை புரிய வைக்கிறது. மெச்சும் நடிப்பில் ஈர்க்கும் மம்முட்டி கதாபாத்திரம் ஒருவித மர்மத்துடனேயே இருப்பது சுவாரஸ்யம். படம் முடிந்த பின்பும் அந்த கதாபாத்திரத்தின் மீதான கேள்விகள் தொடர்கின்றன. தூக்கமின்மை, தனிமை, விரோதத்தை சுமந்துகொண்டிருக்கும் மனம், தனது மனைவி அருகிலிருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கிகொள்வது என வித்தியாசமான கதாபாத்திர வார்ப்பு கவனம் பெறுகிறது.

அவருக்கு இணையான நடிப்பு பிந்து பனிக்கருடையது. அந்தக் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும், அதற்கு அவர் தன் நடிப்பால் உயிர்கொடுத்திருக்கும் விதமும் அட்டகாசம். கிரேஸ் ஆண்டனி, ஆசீஃப் அலி உள்ளிட்டோரும் தனக்கான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருந்தனர்.

திரையுலகில் பேய் படங்களுக்கென்று ஒரு டெம்பிளேட் இருக்கும். இந்தப் படம் அந்த வரையறைகளுக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல், பார்வையாளர்களுக்கு வித்தியாசமான வெளியை திறந்திருக்கிறது. பொதுவாக பேய் கதையை மையப்படுத்திய திரைப்படங்கள் என்றால், இறந்தது பெண்ணாக இருந்தால், தனது மரணத்துக்கு காரணமானவர்களை சாதாரண பெண் போல் சென்று மயக்கி பழிவாங்கும். இறந்து ஆண் பேயாக இருந்தால், தனது மரணத்துக்குப் பின் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளை வேறு யாராவது உடலில் புகுந்து வில்லன்களை துவம்சம் செய்து காப்பாற்றும். 2K கிட்ஸ்களின் காலத்து திரைப்படங்களில் வரும் பேய் கதாப்பாத்திரங்கள் கிளுகிளுப்பை ஏற்படுத்தும் பேய்களாக சித்தரிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில், தனது வாழ்க்கையே கேள்விக்குறியாக காரணமான பேய் மற்றும் அதன் சந்தோஷங்களைத் தேடிச் சென்று அடித்து விரட்டுகிறார் லூக் ஆன்டனி. குறிப்பாக என்ன செய்தால் பேய் தன்னை தாக்க வரும் என்று தெரிந்துகொண்டு, அவற்றின் மூலம் பேயை வெறுப்பேற்றி வம்பிற்கு இழுக்கும் காட்சிகள் ஆடியன்ஸ்களின் வரவேற்பை அள்ளுகின்றன.

கட்டிமுடித்து முழுமைப் பெறாத பேய் வீட்டை வாங்குதல், பேயின் காதல் மனைவியை லூக் ஆன்டனி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பேயின் வீட்டிற்கு குடிபுகுதல், பேயின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமான தொழிற்சாலையை பூட்டி சீல் வைப்பது. பேயின் தம்பி, அம்மாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துதல் என இத்தனை கொடூரமானவான மனிதன் என்றுணர்ந்து பேயே தெரித்தோடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்கள், அந்த ஆசை நிறைவேறும் வரை பூமியில்தான் உலவுவார்கள் என்று பேய்களின் உலகம் குறித்து பொதுப்புத்தியில் மாட்டப்பட்டிருக்கும் கற்பிதங்களை கையில் எடுத்துக் கொண்டு கச்சிதமாக களமாடியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தை ஒருவேளை நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோன பேய்கள் பார்த்திருந்தால், இனி அந்த பேய்களின் சொந்த ஊர்களில் சுற்றித்திரிவது கஷ்டம்தான்.

படம் அதன் திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் நாயகன் லூக் ஆண்டனியின் உலகிற்குள் நம்மை இழுத்துவிடுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் நகரும் விதமும், அதில் கூட்டியிருக்கும் சுவாரஸ்யமும், நான் லீனியர் முறையில் கதை சொல்லும் பாணியும் நம்மை கூர்ந்து கவனிக்கச் சொல்கிறது. கிரண் தாஸின் படத்தொகுப்பில் காட்சிகள் வெட்டி இணையும் இடங்கள், கதை சொல்லல் பாணியை புதுமையாக்குகின்றன. சட்டென சில இடங்களில் குழப்பங்கள் தோன்றினாலும், பெரியதாக துருத்தவில்லை.

நிமிஷா ரவியின் கனகச்சிதமான ஒளிப்பதிவும், மிதுன் முகுந்தனின் பிண்ணனி இசையும் கதையின் கனத்தை அப்படியே தாங்கி நிற்கிறது. ஆங்கிலத்தில் வரும் பாடல்கள் புதுமையான அனுபவத்தை கொடுக்கின்றன. சில காட்சிகளை நறுக்கி இன்னும் நேரத்தை குறைத்திருக்கலாம் என தோன்றுகிறது. படத்தின் க்ளைமாக்ஸை எப்படி முடிப்பது என தெரியாமல் தடுமாறியிருப்பதை உணர முடிகிறது.

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான சைக்காலஜிகள் - சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக ஸ்லோவாக படம் நகர்ந்தாலும் புதுமையான அனுபவத்தை கொடுக்க ‘ரோர்சார்க்’ தவறவில்லை. படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x