ஓடிடி திரை அலசல் | Ammu - ‘அபார’ ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும், குடும்ப வன்முறையின் வடுக்களும்!


ஓடிடி திரை அலசல் | Ammu - ‘அபார’ ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும், குடும்ப வன்முறையின் வடுக்களும்!

இயக்குநர் சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியுள்ள தெலுங்கு திரைப்படம் 'அம்மு'. இத்திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும், அம்மு, ரவீந்திரநாத் மற்றும் பிரபு இந்த 3 பேரின் பாத்திரப் படைப்புகள் நேர்த்தியாக உள்ளன. இவர்கள் மூவருமே அந்தந்த கதாப்பாத்திரத்தின் தேவையை அறிந்து இயல்பாக தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

2021-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 என்ற எண்ணிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 32 சதவீத குற்றங்கள், பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் கணவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

குடும்ப வன்முறையை பின்னணியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள திரைப்படம்தான் இந்த 'அம்மு' . மஹாராணிபள்ளியின் புதிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவியும், அவரது மனைவி அம்முவும் புதுமணத் தம்பதிகள். நொடிதோறும் குலோப் ஜாமூனும், ஜீராவாகவும் தித்திக்கும் அம்முவின் திருமண வாழ்க்கை, நாட்கள் செல்ல செல்ல எப்படி
ரணங்களின் களமாகிறது என்பது குறித்தும், இந்த தீரா துயரிலிருந்து அம்மு எப்படி மீண்டாள் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களாக இருந்தாலும், காதல் திருமணங்களாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையில் விதிவிலக்கு இல்லை. ஆணாதிக்க சிந்தனையின் உடைமை மனோபாவம், மனைவியின் மீது அனைத்து விதமான உரிமைகளையும் எடுத்துக் கொள்கிறது. வசைபாடுதலில் தொடங்கி ரத்தம் சொட்ட சொட்ட அடித்து காயப்படுத்துவது வரை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுவது வாடிக்கையாக உள்ளது.

இப்படத்தில் அம்மு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தனது அபாரமான, அடத்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கணவராக நடித்துள்ள நவீன் சந்திராவும் மிரட்டியிருக்கிறார். கொஞ்ச நேரம் வந்தாலும் கதையின் திருப்பத்தை தன்பக்கம் நோக்கி நகர்த்தியிருக்கும் பாபி சிம்ஹா தனக்கே உரிய பாணியில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோன்ற ஸ்லோ பர்னிங் திரைப்படங்களுக்கே உரிய முறையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும், ஒளிப்பதிவும் வலுசேர்த்திருக்கின்றன.

படம் பார்க்கும் பார்வையாளர்கள் பலருக்கும் தெரிந்த வழக்கமான ஒரு கதையை சின்னச் சின்ன சஸ்பென்ஸ்களுடன் நகர்த்தி படம் முடியும் வரை பார்வையாளர்களை இயக்குநர் பேச வேண்டிய கருத்தை நறுக்கென பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் வரும் பல வசனங்கள் கவனிக்கத்தக்கவை.

கணவன் தன்னை அடிப்பதை அம்மாவிடம் அம்மு சொல்லி அழும்போது, அதற்கு அவளது அம்மா கதாப்பாத்திரம் "நான் உன் அப்பாவிடம் அடி வாங்கிவிட்டு எங்க அம்மாவிடம் சொன்னேன். அப்போது அவர் எனக்கு சொன்னதை நான் உனக்கு சொல்கிறேன். ஆண்கள் மனைவியை அடிப்பார்கள். அப்படி அடி வாங்கும் முதல் பெண்ணும் நீயில்லை, கடைசி பெண்ணும் நீயில்லை" என்ற வசனம் காலங்காலமாக பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறையின் வடுக்கள்.

படத்தின் இறுதிக்காட்சிக்கு முன்புவரும் அம்மு - ரவிக்குமான உரையாடலும், கணவன் - மனைவி சண்டையின் உச்சக்கட்ட நிஜங்கள். சாப்பாட்டு தட்டை தூக்கி முகத்தில் அடிப்பதில் தொடங்கி, படுக்கறைகளில் பெல்ட்டால் அடிபடும் அம்முக்களுக்கு எதிரான வன்முறைகள் வீட்டின் முகம் பார்க்கும் கண்ணாடிகளில் ஆணாதிக்க முகங்களைப் பார்த்து பல்லிளிக்கிறது. படித்தவர், படிக்காதவர், வசதியானவர், ஏழை, அரசியல்வாதி, அரசு அதிகாரி, காவலர், வயதானவர், வயது குறைந்தவர் என்ற எந்த பாகுபாடு இல்லாமல் எல்லா வகையான ஆண்களின் ஆதிக்கச் சிந்தனையில் விழுந்த அறைதான் இந்த 'அம்மு'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x