ஓடிடி திரை அலசல் | Palthu Janwar - பசுவுக்காக மடிப் பால் சுரந்த மனித மனங்களின் கதை


ஓடிடி திரை அலசல் | Palthu Janwar - பசுவுக்காக மடிப் பால் சுரந்த மனித மனங்களின் கதை

வினய் தாமஸ் மற்றும் அனீஷ் அஞ்சலி எழுதி, அறிமுக இயக்குநர் சங்கீத் பி.ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மலையாளத் திரைப்படம் ‘பால்து ஜன்வர்’ (Palthu Janwar). கேரள மாநிலத்தின் திருவாங்கூர் பகுதியில் இருந்து 1930 மற்றும் 1970 ஆகிய காலக்கட்டத்தில் சிரியன் கிறிஸ்தவர்கள் பலர் மலபார் பகுதியின் விவசாய பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்தனர். அவ்வாறு அவர்கள் சென்ற நேரத்தில் பல்வேறு விதமான தொற்று நோய்களுக்கும், வன விலங்குகளின் தொந்தரவுகளாலும் பாதிக்கப்பட்டனர்.

மலைப்பாங்கான பகுதிகள் அவ்வாறு இடம்பெயர்ந்த மக்களின் கடின உழைப்பால் பொன் விளையும் பூமியாக மாற்றியதோடு, அவர்கள் தங்களுக்கே உரிய கலாசாரம், இறை வழிபாடு மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புலம்பெயர்ந்த சிரியன் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கண்ணூர் மாவட்டத்தின் இருட்டி என்ற பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியல் பின்னணியை அடிப்படையாக கொண்டு வீட்டு விலங்கு என்று பொருள்படும் 'பால்து ஜன்வர்' திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

அனிமேஷன் துறையின் தொழில்முனைவோரான பிரசூன் (பெசில் ஜோசப்) குடும்பத்தினர் வற்புறுத்தலின் காரணமாக கால்நடை ஆய்வாளர் பணியில் சேர்கிறார். இந்தப் பணி அவரது தந்தை இறந்த காரணத்தால், வாரிசுரிமை அடிப்படையில் கிடைக்கிறது. அவ்வாறு சென்ற இடத்தில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? அந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்? - இதுதான் திரைக்கதை.

இந்திரன், ஷமி திலகன், திலீஷ் போத்தன், ஜானி ஆன்டனி, ஸ்டெஃபி சன்னி, உன்னிமயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் ஒரு நகைச்சுவை மெலோ டிராமாதான் என்றாலும், படத்தின் பேசுபொருள் வலிமையானது. இந்த உலகம் நமக்கு மட்டுமே ஆனது என்ற மமதையில் வாழும் மனிதர்கள் சமகாலத்தில் வாழும் சக உயிரினங்களிடம் காட்ட வேண்டிய பாசம், பரிவு குறித்து பேசுகிறது இந்தப் படம். படத்தில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களும் அவரவர் பணிகளை சிறப்பாகவே செய்துள்ளனர். படத்தின் இசையமைப்பும், ஒளிப்பதிவும் வழக்கம்போல், மெலோ டிராமா கதைகளுக்கே உரிய வகையில் அழகு சேர்த்திருக்கின்றன. குறிப்பாக இறுதிக் காட்சியில் இந்த பூமியில் கால் பதிக்கும் கன்றுக்குட்டிக்காக வரும் தாலாட்டுப் பாடல் அருமை.

படம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக விலங்கினங்களும், அவை சார்ந்த உரையாடல்கள் வந்துபோனாலும், படத்தின் இறுதியில் வரும் ஒற்றைக் காட்சியில் ஆடியன்ஸ்களின் அப்ளாஸ்களை அள்ளியிருக்கிறார் இயக்குநர். ஆடுகள், மாடுகள், பன்றிகள், புறாக்கள், பூனைகள், கோழிகள், நாய்கள் என எத்தனை வகையான வீட்டு விலங்குகளில் இருந்து நவநாகரீக உலக ஆக்கிரமிப்பில் நாம் அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதையும், பல நேரங்களில் அவற்றை அற்பமாக நினைக்கிற மனோபாவத்தையும் இயல்பாக பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

கடவுளின் தேசத்தின் புல்வெளிகள், மலைக்குன்றுகள், மரங்கள், மலைமுகடுகள், காடுகள், பழமை மாறாக பழக்கவழக்கங்கள், பசுமை சுமக்கும் வீடுகள், தோட்டங்கள், கடற்கரைகள், எதார்த்தம் மாறாத மனிதர்களைக் கொண்டு இன்னும் எத்தனை கதையைத்தான் வைத்துள்ளார்களோ சேட்டன்கள் என்று நாம் யோசிப்பதற்கு நேரம் கொடுக்காமல், அழகாக காட்சிகளை கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படம் பார்த்த பிறகு, நீங்கள் எப்போதோ பார்த்த ஒரு மாடோ, அதன் அசைபோடும் வாயோ, மூக்கணாங்கயிறோ, அவற்றின் சத்தமோ, இலை தழைகளோ, குளம்புடன்கூடிய காலடித்தடமோ, சீம்பாலோ, பால் வாசனையோ, கன்றுக்குட்டியோ நினைவுக்கு வராமல் இருப்பதற்கு இல்லை. கடந்த செப்டம்பரில் வெளியான இந்தத் திரைப்படம் தற்போது
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x