இயக்குநர் ஆதித்ய விக்ரம் சென்குப்தா எழுதி இயக்கி கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த வங்க மொழி திரைப்படம்தான் இந்த Asha Jaoar Majhe (Labour of Love). 62-வது தேசிய திரைப்பட விருது விழாவில் இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. தொழிலாளர் வர்க்கத்து கணவன் - மனைவியின் வாழ்வியல் உணர்வுகளை புரிந்துக் கொள்வதற்கு மொழி தடையே இல்லை என்பதை நிரூபித்திருக்கு அற்புதமான படைப்பு. இந்தப் படத்தில் வசனங்களே இல்லை என்பதால், படம் பார்ப்பவர்களுக்கு மொழி பிரச்சினை ஒரு தடையாகவும் இருக்காது.
வேலைக்குச் செல்லும் நடுத்தர தொழிலாளர் வர்க்கத்து கணவன், மனைவியின் ஒருநாள் வாழ்க்கைதான் இந்த மொத்தப் படமும். நாயகி பஸ்ப்தத்தா சட்டர்ஜியும், நாயகன் ரித்விக் சக்ரபர்தியும் கணவன் - மனைவியாக என்பதை தாண்டி, இயல்பான மனிதர்களாக வெளிப்படுத்தியிருக்கு மிகையில்லா நடிப்புதான் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.
ஒவ்வொரு வீட்டின் ரகசியங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டு யாரிடமும் சொல்லமுடியாமல் தங்களுக்குள்ளே புதைத்துக் கொண்ட சுவர்கள், கடிகாரம், அடுப்படி, தட்டு,காபி டம்ளர், பிஃரிட்ஜ், கட்டில், துவைத்த துணிகள், ஈரத்துண்டு, கழிவறை, சோப்பு, தண்ணீர் குழாய், ஈரத்துணிகள், துணி காயப்போடும் கயிறு, வீட்டைச் சுற்றி வரும் பூனை, சப்தமிட்டேக் கொண்டிருக்கும் மின்விசிறி, சைக்கிள், அடர்த்தி மிகுந்த மார்க்கெட், பேருந்து நிறுத்தம், ட்ராம், மீன் குழம்பு, சப்பாத்தி, அலாரம், இப்படி நாம் அன்றாட வாழ்க்கையில், சட்டையே செய்யாமல் இருக்கும் அத்தனை பொருட்களுக்கும் உயிரூட்டி எடுக்கப்பட்டிருக்கும் உன்னதமான கலைப் படைப்புதான் இந்தத் திரைப்படம்.
வேலைக்குச் செல்ல ட்ராமின் கடைசி இருக்கையில் அமர்ந்து காலை உணவாக ஒரு கேக்கை சாப்பிடும் நாயகி மீது ஜன்னல் இடைவெளியில் சூரிய ஒளிபடும், அப்போது மிக மிக லேசாக நாயகி உதிர்க்கும் சிரிப்புதான் ட்ராம்களின் இழுவைத் திறனுக்கு காரணமோ என்ற எண்ணத் தோன்றும் அளவுக்கு அழகாக இருக்கிறார் நாயகி பஸ்ப்தத்தா சட்டர்ஜி.
அதேபோல், வேலை முடித்து களைப்பில் வீட்டில் வந்து உறங்கும்போதும், அலாரம் ஒலி கேட்டு எழும்போதும் அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் இயக்குநர். அதேபோல், வேலைக்குச் செல்லும் எல்லா பெண்களும் பேருந்து பயணத்தின்போது வாங்கு டிக்கெட்டுகளை தங்களது கைக்கடிகாரத்தின் வாரில் செருகி வைத்திருப்பர். இயக்குநர் அதையும் கூட விட்டுவைக்காமல் காட்சிபடுத்தியருப்பார்.
கண்ணாடியில் பொட்டை ஒட்டிவைப்பது, மனைவியின் கவனத்தை ஈர்க்க வீட்டின் நுழையும் இடத்தில் கிழிந்த பேண்டை தொங்க விடுவது, மிகவும் சன்னமான பழைய சோப்பை, பெரிய புதிய சோப்பின் பின்பக்கத்தில் ஒட்டிவைப்பது, வேஸ்டான மீன் முட்களை பூனைக்கு வீசுவது, தெருவோர வியாபாரியின் சப்தத்தில் இருந்து தப்பிக்க ஜன்னலை பூட்டிக் கொள்வது, ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் ஃபேனின் வேகத்தை குறைத்து வைப்பது சராசரியாக ஒரு வீட்டில் அன்றாடம் நடக்கும் அத்தனையும் படத்தில் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.
மிகவும் எதார்த்தமான இந்த வாழ்வியலில் ஒளிப்பதிவும், இசையும் பின்னிப் பிணைந்திருக்கும். குறிப்பாக டைட்டில் கார்டு மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் அந்த செனாய் இசைக்கருவியின் ஓசை, படம் பார்ப்பவர்களின் மனதுக்குள் ஏதோ ஒன்று செய்துவிடும். உங்களிடம் 1 மணி நேரம் 22 நிமிடம் 55 விநாடிகளும், கொஞ்சம் பொறுமையும் இருந்தால் போதும். இந்த அற்புதமான கலைப் படைப்பை ரசித்து விடமுடியும். இந்தப் படம் யூடியூபில் தற்போது காணக் கிடைக்கிறது.
WRITE A COMMENT