இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் வந்ததைக்கூட இருமிக் கொண்டே இன்ஸ்டாகிராமில் பதிவிடும் இளமைப் பட்டாளங்களின் கலர்ஃபுல் வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை பேசியிருக்கும் neo-noir வகை மலையாள திரைப்படம்தான் இந்த தள்ளுமாலா (Thallumaala).
நாயகன் வசிமின் திருமணம் நடக்கப்போவதற்கு முன் சில நிமிடங்களுக்கு முன் அங்கு நடக்கும் சண்டையால் திருமணம் நின்றுபோகிறது. இந்த சண்டைக்கு காரணம் என்ன? நாயகனை சண்டைக்கு தூண்டிய அந்த நபர் யார்? நாயகனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சண்டையிடும் அந்த நபர்களின் பின்னணி என்ன? எதற்காக இப்படி ரத்தம் சொட்ட சொட்ட ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர்? இந்த சண்டைகளுக்குப் பின் நாயகனின் திருமணம் நடந்ததா? இல்லையா? - இப்படி பல கேள்விகளுக்கான பதில்தான் இந்தப் படத்தின் மீதிக்கதை.
நாயகன் டொவினோ தாமஸ், கேட்கவா வேண்டும். மனுஷன் இப்பத்தான் மின்னல் முரளியில் 90-ஸ் கிட்ஸாக நடித்து மாஸ் காட்டியிருந்தார். அந்த பிரமிப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், இந்தப் படத்தில், rugged 2k-கிட்ஸ் ஆக மிரட்டியிருக்கிறார். மொத்தமாக 9 சேப்டர் படத்தில் வருகிறது. எல்லா சேப்டர்களிலும் டொவினோ தாமஸ் தனி முத்திரைப் பதித்திருக்கிறார்.
குறிப்பாக 2k-கிட்ஸ்களுக்கே உரிய ஸ்டைல், டிரஸ், ஹேர்ஸ்டைல், rugged இளைஞனுக்கான உடல்மொழியென கெத்து காட்டியிருக்கிறார். அவரது நண்பர்களாக வருபவர்களும் ஆடியன்ஸ்களின் அப்ளாஸ்களை மறக்காமல் ஸ்கோர் செய்துள்ளனர். குறிப்பாக ஜம்ஸியாக வரும் லுக்மன் அட்டகாசம்.
இந்தப் பக்கம் இப்படியென்றால், அந்தப் பக்கம் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது நண்பர்கள். இந்த இரண்டு டீம்களுக்கு இடையிலான அடிதடி பஞ்சாயத்தையும், சமாதானத்தையும் கொஞ்சமும் போரடிக்காமல் அழகாக நகர்த்தி கதை சொல்லியிருக்கும் இயக்குநர் கலீத் ரஹ்மானின் யுக்தி பாராட்டுக்குரியது.
படத்தின் நாயகியான கல்யாணி பிரியதர்ஷனுக்கு, பார்த்துப் பார்த்து பாத்து (செல்லப்பெயர்) என்ற கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அவ்வளவுதானா... இதுதான் கதையா என்று நினைக்கும் நேரத்தில், மலையாளத் திரையுலகின் மற்றொரு பிரமாண்டம் செம்பன் வினோத்தை களமிறக்கி களேபரம் செய்திருக்கிறார் இயக்குநர்.
#Manavaalan wazim என்று டிரெண்டிங் ஆகும் டொவினோ தாமஸின் திருமண சண்டைக்காட்சியை படத்தின் தொடக்கக் காட்சியாக வைத்து படத்தை தொடங்கியிருக்கும் இயக்குநர் கலீத் ரஹ்மான், இன்றைய இன்ஸ்டாகிராமிங் இளைய தலைமுறையினரின் பல்ஸை பிடித்துக்கொண்டு இறுதிக்காட்சி வரை, நம்மை டிராவல் செய்ய வைத்திருக்கிறார்.
இன்ஸ்டா பேஜில் ஹார்ட்டின் போட்டு லைக்கி விட்டு, பாஃலோ செய்ய ரெக்வஸ்ட் கொடுத்து ஈகோவில் முட்டிக்கொள்ளும் காதல் தொடங்கி, த்ரில் அனுபவத்திற்காக வீடியோ பதிவிடுவது என்பது உள்பட இன்றைய ஹேஷ்டேக் தலைமுறையின் இன்றியமையாத அத்தியாவசியங்கள் நிறைந்த உலகத்திற்குள் சென்றுவந்த அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கிறது.
முக்கியமாக இதுபோன்ற படங்களுக்கு இசை பல நேரங்களில் கைகொடுக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் பட்டையைக் கிளப்புகிறார். குறிப்பாக "தூபாத்து" பாடல் பல மில்லியன் கணக்கான வியூஸ்களை அள்ளியிருக்கிறது. அதேபோல், தேவையான இடங்களில் பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக தியேட்டர் சண்டைக்காட்சியில், ‘விக்ரம் வேதா’ பின்னணி இசை சரியாக அமைந்திருக்கிறது. அதேபோல், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியிலும் ரீரெக்கார்டிங் அருமையாக உள்ளது.
ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் அறிமுகத்தையும் கூர்ந்து கவனிக்க வைக்கும் இயக்குநர், அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற ஆவலை நமக்குள் அணையாமல் தூண்டிக்கொண்டே இருக்கிறார். இந்தப் படத்தில் வரும் சோஷியல் மீடியா தலைமுறைகளின் வாழ்வியல், பார்வையாளர்களை நிச்சயம் கவரும். படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் முரட்டுத்தனமாக இருப்பதால், குழந்தைகளுடன் காண்பதை தவிர்ப்பது நல்லது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது.
WRITE A COMMENT