ஓடிடி திரை அலசல் | Nna thaan case kodu - சாதாரண மனிதனின் அசாதாரண சட்டப் போராட்டம்


ஓடிடி திரை அலசல் | Nna thaan case kodu - சாதாரண மனிதனின் அசாதாரண சட்டப் போராட்டம்

குஞ்சாக்கோ போபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‘ன்னா தான் கேஸ் கொடு’ (Nna thaan case kodu). ‘என் மேல் வழக்கு தொடு’ என்பதுதான் இந்தப் படத் தலைப்பின் பொருத்தமான அர்த்தமாக இருக்கும். "நீங்கள் சோகமாக இருந்தால் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள், பயத்துடன் இருந்தால் எதிர்காலத்தில் வாழ்கிறீர்கள், சந்தோஷமாக இருந்தால் நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள்" என்ற பொன்மொழி மலையாளத் திரையுலகத்துக்கு மீண்டும் ஒருமுறை பொருந்திப் போயிருக்கிறது.

தென்னிந்தியாவின் பிற மாநிலங்கள் கடந்த கால, எதிர்கால கதைகள் குறித்த திரைப்படங்களை பிரமாண்டமாக எடுத்துவரும் சூழலில், மலையாளத் திரையுலகம் மட்டும் தொடர்ந்து சாமானிய மக்களின் கதைகளை மையப்படுத்திய திரைப்படங்களை எடுத்து வெற்றி பெற்று வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக ‘ன்னா தான் கேஸ் கொடு’என்ற படத்தையும் கூறலாம்.

இந்தப் படத்தின் கதை: திருட்டுத் தொழிலை விட்டுத் திருந்தி வாழ்ந்து வருபவர் குஞ்சாக்கோ போபன். ஒருநாள் இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்கிய அவர்மீது திடீரென ஆட்டோ மோத வருகிறது. அந்த விபத்தில் இருந்து தப்ப நினைத்து அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை தாவி குதித்து விடுகிறார். அந்த வீட்டில் உள்ள இரண்டு நாய்கள், குஞ்சாக்கோ கோபனை ‘உட்காரும்’ இடத்தில் வெறித்தனமாக கடித்து விடுகின்றன.

இதையடுத்து இந்த விபத்திற்கு காரணமானவருக்கு எதிராக வழக்கு தொடர்கிறார். இந்த வழக்கில் அவர் வென்றாரா, இல்லையா என்பது படத்தின் கதை. முழு நீள ஒரு கோர்ட் ரூம் டிராமா வகையான கதையை நகைச்சுவை கலந்து எடுத்திருக்கிறார் இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன்.

திரைப்படங்களில் அரசியல் பேச இன்னும் அச்சப்பட வேண்டிய சூழல் நிலவி வரும் இன்றைய சூழலில், இந்தப் படத்தில் சமகால அரசியல் சார்ந்த நிகழ்வுகளை இயக்குநர் கையாண்டிருக்கும் விதம், படம் பார்ப்பவர்களை ரசிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. உதாரணத்துக்கு, படம் தொடங்கும்போது , காட்சிகளினூடே, பெட்ரோல் விலை 72 ரூபாய் என்ற தகவலை பதிவு செய்யும் இயக்குநர், படத்தின் இறுதியில் பெட்ரோல் விலை ரூ.100 என்ற வாசகத்தை இடம்பெறச் செய்வதன் மூலம் பெட்ரோல் விலை உயர்வு குறித்த தகவலை பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார்.

இதுபோல படத்தில் வரும் சின்னச் சின்ன வசனங்கள் மூலமாகவும் நிகழ்கால அரசியல் நடப்புகளை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். மேலும், கீழமை நீதிமன்றங்களுக்கான அதிகாரம் வலிமை இந்தப் படத்தில் விரிவாக பேசப்படுகிறது. அங்கு நடைபெறும் வாதங்கள், குறுக்கிடும் சவால்களை தத்ரூபமாக பதிவு செய்திருப்பது சிறப்பு.

Party in Person என்றொரு பதம் நீதிமன்ற கலைச்சொற்களில் உண்டு. இது, வழக்குத் தொடர்ந்த மனுதாரரே, அவருக்காக நேரில் ஆஜராகி வாதிடுதலைக் குறிக்கும். இந்தப் படத்திலும், குஞ்சாக்கோ போபன் தன் வழக்கிற்காக வாதிடுகிறார். இப்படி தங்களது வழக்கில் தாங்களே ஆஜராகி வாதிடுபவர்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து படத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு காட்சியில் பத்திரிகையாளர்கள், நீதிமன்றம் வரும் குஞ்சாக்கோ கோபனிடம், அமைச்சரை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறீர்களே, வெற்றி பெறுவீர்களா? என்று கேட்பர். அப்போது குஞ்சாக்கோ கோபனின் மனைவியான காயத்ரி, பத்திரிகையாளர்களைப் பார்த்து," நீங்க மைக்கை தூக்கிட்டு வந்ததே, நாங்க ஜெயிச்ச மாதிரிதான்... ஒருவேளை தோற்றுப்போனால் நாங்கள் வீட்டில் உட்கார்ந்து கொள்கிறோம்... நீங்கள் பயப்பட வேண்டாம்" எனக் கூறுவார்.

இப்படித்தான் இயக்குநர் இந்தப் படம் முழுக்க, அதிகாரத்தின் மீது, தனது கதாப்பாத்திரங்களின் வலிமைக்கேற்ப சிறு சிறு கற்களைத் தூக்கியெறிந்து, ஜனநாயக நாட்டில் சாமானிய மக்களின் கடைசி புகலிடம் நீதிமன்றங்கள் என்பதை நிறுவியிருக்கிறார் இயக்குநர்.

ஒவ்வொரு காட்சியையும் எங்கேஜிங்காக நகர்த்தியிருக்கும் இயக்குநர், சமகால அரசியலையும் சமூகத்தையும் நையாண்டி செய்திருக்கும் விதம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும். படத்தைப் பார்த்து முடித்த பின் உங்கள் பகுதியில் சாலையில் நீங்கள் செல்லும்போது, வழியில் பள்ளம் தென்பட்டால் புன்சிரிப்போடு இந்தப் படம் உங்களுக்கு நினைவில் வரலாம். ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x