ஜீவி 2 Review: பார்வையாளர்கள் ஜீவிப்பார்களா?


ஜீவி 2 Review: பார்வையாளர்கள் ஜீவிப்பார்களா?

தொடர்பியல் விதியும், முக்கோண விதியும் விடாது கருப்பாக தொடர்ந்து ஒருவன் வாழ்க்கையில் ஆடும் ஆட்டம் தான் 'ஜீவி 2'.

ஜீவி முதல் பாகத்தை ரீவைண்ட் செய்தபடி தொடங்குகிறது கதை. திருமணம் முடித்து மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் சரவணன் (வெற்றி). எந்த அளவுக்கு மகிழ்ச்சி என்றால் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தவர் கார் வாங்குகிறார், நண்பன் மணிக்கு (கருணாகரன்) டீக்கடை வைத்து தருகிறார். மனைவிக்கு கண் ஆப்ரேஷன் செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.

எல்லாமே நன்றாக சென்றுகொண்டிருக்கும்போது, தொடர்பியல் விதி தன் ஆட்டத்தை தொடங்க, சிக்கலும் கூடவே வந்து சேர்கிறது. பண நெருக்கடி, குடும்பம், வேலை என சிக்கல்கள் அடுக்க மீண்டும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். இப்படியாக தொடரும் சிக்கல்களை எப்படி சமாளிக்கிறார், தொடர்பியல் விதியின் கோரத்தாண்டவத்திலிருந்து எப்படி மீண்டார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை. ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது ஜீவி-2.

படத்தின் முதல் பாகத்தை இயக்கிய கோபிநாத் தான் இரண்டாவது பாகத்தையும் இயக்கியிருக்கிறார். முதல் பாகத்தின் விறுவிறுப்பை இதிலும் கொண்டுவர முயற்சித்திருக்கிறார். அது சில இடங்களில் கைகூடினாலும், பல இடங்களில் கைவிட்டிருக்கிறது. வழக்கம்போல சில சம்பிரதாய சண்டைக் காட்சிகளும், ரொமான்ஸ் பாடலும் டெம்பளேட்டாக இதிலும் நீள்வது அயற்சி. தொடக்கத்தில் கதை ஓட்டம் நம்மையும் சேர்ந்து இழுத்து கொண்டுபோகிறது.

ஆரம்பத்திலிருக்கும் விறுவிறுப்பும் சஸ்பென்ஸும் படம் போக போக கூடுவதற்கு பதிலாக குறைந்துவிடுகிறது. இடையில் வரும் தொடர்பியல் விதி, முக்கோண விதி, மையப்புள்ளி என்ற தியரிக்கள் திரையில் நாயகன் அவ்வப்போது முழிப்பதை போல நம்மையும் முழிக்க வைக்கிறது. இதே தான் முதல் பாகத்திலேயே சொல்லிட்டீங்களே பாஸ்!

நாயகன் வெற்றி படத்திற்கு மெனக்கெட்டிருக்கிறார். அவர் கோபப்படும் இடங்களில் செயற்கைத்தன்மை ஒட்டிக்கொண்டு அகல மறுக்கிறது. சில இடங்களில் நடிப்புக்கான தேவையிருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஓகே என சொல்ல வைக்கிறார். முதல் பாகத்திலிருந்த நடிப்பை இரண்டாம் பாக்கத்திலும் சிதைக்காமல் கடத்தியிருப்பதில் கவனம் பெறுகிறார் கருணாகரன். தவிர அஷ்வினி சந்திரசேகர், ரோகினி, மைம் கோபி தங்களுக்கான கதாபாத்திரங்களில் நடிப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். போலீஸ் அதிகாரியாக வரும் புதுமுக நடிகரின் நடிப்பும், அந்த கதாபாத்திரத்திற்கான அவரது தேர்வும் பொருந்தவில்லை.

பிரவீன்குமார் ஒளிப்பதிவு பாரமாக இருக்கும் காட்சிகளை லேசாக்குகின்றன. கதையை இன்னும் இழுக்காமல் 1 மணி நேரம் 49 நிமிடத்தில் முடித்ததில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு முக்கிய பங்கு வகித்திருக்கிறது. சுந்தரமூர்த்தி இசையில் பாடல்கள் எந்த வகையில் ஈர்க்கவில்லை.

'பொண்ணுங்களுக்கு மட்டும் ஏன்டா இப்டி நடக்குது..?', 'ஏன்னா அவங்க பொண்ணுங்க' மற்றும் பணம் குறித்து நாயகன் வெற்றி பேசும் வசனமும் கவனிக்க வைக்கிறது.

சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து கதைக்களத்தில் வித்தியாசத்தை காட்டியிருந்தால் 'ஜீவி-2' பார்வையாளர்கள் மத்தியில் இன்னும் கூட ஜீவித்திருந்திருக்கும்.

FOLLOW US

WRITE A COMMENT

x