ஒரே கருப்பொருளை மையமாக வைத்து நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்டு ஆந்தாலஜி வகைமையில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது 'விக்டிம்'. ஒவ்வொரு குறும்படமும் 30 முதல் 35 நிமிடம் நீளம் கொண்டவை. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக ஓடும் இந்த 'விக்டிம்' ஆந்தாலஜியை இயக்குநர்கள் பா.ரஞ்சித், எம்.ராஜேஷ், சிம்புதேவன், வெங்கட்பிரபு ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ‘விக்டிம்’ ஆந்தாலஜி எப்படியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
பா.ரஞ்சித்தின் 'தம்மம்' - ஆதிக்க மனோபாவம் கொண்ட பண்ணையாரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு ஆளாகிறார் என்பதுதான் படத்தின் கதை. நுணுக்கமான அரசியல் காட்சிகளை கோத்து அழுத்தமான வசனங்களால் தம்மத்தை இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். எந்த அளவுக்கு அழுத்தமான வசனம் என்றால், குரு சோமசுந்தரம் புத்தர் சிலையில் ஏறி நிற்கும் தன் மகள் பேபி தாரணியிடம் 'சாமி சிலையில ஏறி நிக்காத' என கூறுவார். அதற்கு, 'சாமியே இல்லன்னு புத்தர் சொல்லிருக்காரு. அவர போய் சாமின்னு சொல்ற' என மறுமொழி உதிர்க்கும் இடத்தில் அத்தனை கனம்.
குருசோம சுந்தரம், கலையரசன், ஹரி கிருஷ்ணன், பேபி தாரணி, அர்ஜீன் என குறைந்த கதாபாத்திரங்களால், ஒரு வயல் வெளியில் நடக்கும் 2 மணி நேர சம்பவங்களை அழகான குறுங்கதை வடிவில் கொடுத்திருக்கிறார் ரஞ்சித். எல்லாவற்றையும் விட, பேபி தாரணி கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் சிலாகிக்க வைக்கிறது. இங்கே பேபி தாரணி அடுத்த தலைமுறைக்கான பிரதிநிதியாக காட்டப்படுகிறார். அவரிடமிருந்து ஒலிக்கும் ஆதிக்கத்துக்கு எதிரான குரலில் எந்த சமரசமும் இல்லை. வெடித்து சிதறுகிறார். தன் தந்தைப்போல முந்தையை தலைமுறையினரிடமிருந்து பயம் அவரிடம் கொஞ்சம் கூட இல்லை.
'நீ கீழ இறங்கி போ' என சொல்லும் காட்சியில் மிரட்டுகிறார். ஒத்த வயதுடைய இரண்டு தலைமுறைகள். ஆனால், அவர்களின் செயல்களால் பிரித்து காட்டியிருக்கும் விதம் ஈர்க்கிறது. முக்கியமான அரசியலை குறும்படத்தின் மூலம் கடத்தியிருக்கும் முயற்சி பாராட்டதக்கது. படத்தின் கதை மட்டும் பலம் சேர்க்கவில்லை. மாறாக, அதன் தொழில்நுட்ப குழு இறங்கி வேலை செய்திருக்கிறது. சிறுமி மீன் பிடிக்கும் காட்சி, ஏரியல் ஷாட், சிங்கிள் ஷாட் என அட்டாகாசமான ஒளிப்பதிவு ஈர்க்கிறது. தென்மாவின் இசை தேவையான இடங்களில் மட்டும் ஒலிப்பது பெரும் பலம்.
சிம்பு தேவனின் 'கொட்டைபாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்' - கரோனா ஊரடங்கு காலத்தில் தனது வேலையை காப்பாற்றிக்கொள்ள ஒரு சப்-எடிட்டர் மேற்கொள்ளும் முயற்சிகள் இறுதியில் என்ன ஆனது என்பதை ஃபான்டஸியாக சொல்லும் படம் தான் 'கொட்டைபாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்'. இயக்குநர் சிம்பு தேவன் தனக்கே உரிய பாணியில் அரசியல் பகடியை கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். சொல்லப்போனால், நாசர், தம்பி ராமையா, விக்னேஷ் காந்த் என மூன்றே கதாபாத்திரங்களை வைத்து படத்தை முடித்திருக்கிறார்.
4 க்ளைமாக்ஸ் காட்சிகளை வைத்து படத்தை வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். மெதுவாக நகரும் கதை சற்று அயற்சியைத் தருகிறது. இறுதியில் வரும் படத்தின் திருப்பத்தில் செயற்கைத்தனம் மேலோங்கி இருப்பதால் படம் பார்வையாளர்களை அந்நியப்படுத்தி விடுகிறது.
இடையிடையே வரும் அரசியல் பகடி வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக வெங்காய விலை ஏற்றம் குறித்து பேசும் அரசியல் தலைவர், 'சமையலில் வெங்காயம் சேர்க்காதீங்க' என கூறும் இடம், 'எப்போதும் பேக் அடிப்பது மத்திய நிதி ஒதுக்கீடு', 'பெருசாய் வளர்வது பன்னாட்டு நிறுவனங்கள்' போன்ற வசனங்கள் தைரியமாக அணுகப்பட்டுள்ளன. தம்பி ராமையாவிடம் மிகை நடிப்பு சில இடங்களில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. நாசர் கச்சிதமாக நடித்துக்கொடுத்துள்ளார். பட வரிசையில் பார்க்கும்போது, ஆந்தாலஜியில் இரண்டாம் இடத்தில் வைக்கப்பட்டதற்கான காரணத்திற்கு படம் நியாயம் சேர்க்கிறது.
எம்.ராஜேஷின் 'மிரேஜ்' (Mirrage): பணி நிமித்தமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுக்கு வரும் பெண் ஒருவர், அங்கு நடக்கும் சில அமானுஷ்யமான நிகழ்வுகளால் பாதிக்கப்படுகிறார். அது ஏன்? எதனால்? நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. காமெடிக்கு பெயர் போன எம்.ராஜேஷ் ஹாரர் பக்கம் கரை ஒதுங்கியிருக்கிறார். பிரியா பவானி சங்கர், நட்டி இருவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக நட்டி மிரட்டியிருக்கிறார். தொடக்கத்தில் விறுவிறுப்பாக ஒருவித பயத்தோடு தான் பார்வையாளர்களையும் கதைக்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குநர் ராஜேஷ். கதையில் வெயிட்டாக எதாவது இருக்கும் என நினைக்கும்போது, ட்விஸ்ட்டுடன் சேர்ந்து ஏமாற்றத்தையும் பரிசளித்து விடுகிறார். சென்னையின் வட்டார வழக்கை திணித்து பேசியிருப்பது போன்ற உணர்வு சில இடங்களில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
'பேட்மேன தூக்கி போட்ற' என சில இடங்களில் நகைச்சுவைக்கு முயன்றிருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் என்ற கருவைக்கொண்ட இந்த எபிசோடில் திப்புக்குள்ளாக்கப்பட்டவரை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் நெருடல். அப்படிப் பார்க்கும்போது, படம் வரிசைப்படி படம் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் கடைசி இடத்துக்கான நியாயத்தையே திரைக்கதை சேர்த்துள்ளது.
வெங்கட் பிரபுவின் கன்ஃபெஷன் (Confession): ஒரு அபார்ட்மென்டில் தனியாக வசித்து வரும் அமலாபாலை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார் அவருடன் வேலை பார்க்கும் ஒருவர். அதையொட்டி சில பிரச்னைகளும் நீள்கிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பது தான் படத்தின் கதை. வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இப்படத்தில், அமலாபால், பிரசன்னா இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருவரின் நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது.
பிரச்சினைகளை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் இடம் கவனிக்க வைக்கிறது. அதேசமயம் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக முன்வைக்காமல், வெறும் வரிகளாக மட்டுமே கடத்தியிருப்பது கதையுடன் கலக்க முடியாமல் தடுக்கிறது. படம் முடிந்த பிறகும், முழுமை பெறாத உணர்வு மோலோங்குகிறது.
4 கதைகளில் 3 கதைகள் ட்விஸ்ட் என்ற ஒற்றை சொல்லாடலுக்காக உருவாக்கப்பட்டிருப்பதை அப்பட்டமாக உணர முடிகிறது. பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், கதையிலும் ஆச்சரியத்தை கொண்டு வந்திருக்கலாம்!
WRITE A COMMENT