19(1)(a) Movie Review: விஜய் சேதுபதியை சுற்றி நகரும் இந்த மலையாள படம் ஈர்ப்பது எதில்?


19(1)(a) Movie Review: விஜய் சேதுபதியை சுற்றி நகரும் இந்த மலையாள படம் ஈர்ப்பது எதில்?

சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் வாழும் மக்களுக்கு பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் நிலை குறித்து பேசும் அரசியல் படைப்பு தான் '19(1)(a)'. அப்பா, வீடு, ஜெராக்ஸ் கடை என லூப்பில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் நித்யா மேனன். அவரது கடைக்கு வரும் விஜய் சேதுபதி, இறுதி வடிவம் பெறாத ஒரு நாவலின் கையெழுத்து பிரதிகளை கொடுத்து ஜெராக்ஸ் எடுத்து வைக்கும்படி சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால், அதை வாங்க அவர் திரும்ப வரவேயில்லை.

அவர் யார்? என்ன ஆனார்? எங்கே போனார்? அந்த கையெழுத்து பிரதிகளை நித்யா மேனன் என்ன செய்தார்? - இவற்றுக்கான விடைகளை அரசியல் நெடியுடன் சொல்லியிருக்கும் படம்தான் '19(1)(a)'. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வார புதுவரவாக இப்படம் ரிலீசாகியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு தனி மனிதனுக்கான பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. இதனை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் படத்திற்கு '19(1)(a)'என தலைப்பிட்டிருக்கிறார்கள். இந்து வி.எஸ் இயக்கியிருக்கும் இப்படம் பல்வேறு அரசியல் விவகாரங்களைப் பேசுகிறது. குறிப்பாக படத்தில் வரும் கௌரி ஷங்கர் எழுத்தாளர் கதாபாத்திரம் கௌரி லங்கேஷை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படம் பொறுமையாக ஊர்ந்து செல்வது சில இடங்களில் சோதித்தாலும், கதையுடன் ஒன்றிணையும்போது பழகிவிடுகிறது. கூடவே வசனங்களை குறைத்து கோவிந்த் வசந்தாவின் வயலினை வாசிக்கவிட்டு உணர்வுகளை எளிதாக கடத்திவிடுகிறார்கள். அது திரைமொழிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

இங்கே நித்யா மேனன் என்பது அரசியல் தலையீடு இல்லாத, சமூகப் பிரச்சினைகளில் கலந்துகொள்ளாத பெரும்பாலான ஒருவரின் தோற்றம். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த மௌனமும், அமைதியும் வெடித்துவிடுகிறது. வெளியில் சொல்லியாக வேண்டும், சொன்னால் பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டும் இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையேயான நித்யாமேனனின் தவிப்பும், குற்றவுணர்ச்சியுடன் கூடிய நடிப்பும் அழுத்தமான காட்சிகளுக்கு உருவகம் கொடுக்கிறது. 'சேட்டா ஒரு ப்ளாக் டீ' என விஜய்சேதுபதி சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், அவரைச்சுற்றித்தான் படம் நகர்கிறது.

மலையாள தேசத்திலிருந்து அவருக்கு இது முக்கியமான படம். ஆனால், மலையாள எழுத்தாளரான விஜய் சேதுபதி, மலையாளத்தில் பேச சிரமப்படுவது முரண். அதேபோல அவரது கதாபாத்திரம் இன்னும் நுணுக்கமான பின்னணியுடன் எழுதப்பட்டிருந்தால் கூடுதல் கனம் சேர்த்திருக்கும்.

மௌனத்தை ஒரு கட்டத்தில் உடைக்கவேண்டிய தேவையை உணர்த்தும் படம், தான் பேச வரும் அரசியலை வெடித்து பேசமால் குறியீடு, வசனங்கள் மூலமாக பேசியிருப்பது பார்வையாளர்களுக்கு புரிதலில் சிக்கலை தந்துவிடுகிறது. பெரியார், அம்பேத்கர் புகைப்படங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பேசும் எழுத்தாளர் கதாபாத்திர வடிவமைப்பு கவனம் பெறுகிறது.

கருத்து சுதந்திரம் எதிர்கொள்கின்ற தற்போதைய அச்சுறுத்தல்கள் குறித்து பேசும் படம் கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஆவணப்படத்துக்கான உணர்வை கடத்தியிருக்கும். நித்யாமேனன் தோழி ஒருவரின் கட்டாய திருமணம் குறித்த காட்சியில், 'உனக்கு ஓகேவா' என நித்யாமேனன் கேக்கும்போது, 'மத்தவங்க எல்லாத்துக்கும் ஓகே' என ஷார்ப் வசனம் சட்டென முடிந்தால் அதன் பாதிப்பு என்னமோ நீள்கிறது.

குறிப்பாக 'உங்க இஷ்டம் போல பண்ணிங்கோங்க' என்ற வசனமும் அது ஏற்படுத்தும் தாக்கமும், அது பிணைக்கும் காட்சியமைப்பும் படத்தின் தரத்தையும் பார்வையாளர்களின் உணர்வையும் மேலோங்கச் செய்கிறது. மனேஷ் மாதவன் ஒளிப்பதிவு பொறுமையான காட்சிகளை அயற்சியடையாமல் செய்ய முயல்கிறது.

மொத்ததில் படம் இன்னும் தைரியமாக அரசியலை உடைத்து, வெளிப்படையாக பேசி, ஸ்லோ ஸ்கீரின்ப்ளேவை சுவாரஸ்யமாக்கியிருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். இருப்பினும் படம் பேசும் அரசியலுக்காகவும், அது கொடுக்கும் உணர்வுக்காகவும் படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.

FOLLOW US

WRITE A COMMENT

x