சிஐஏவுக்குள் நடக்கும் தவறுகளும், மோதல்களும், பழிவாங்கலும் தான் 'தி கிரே மேன்' படத்தின் ஒன்லைன்.
சிறையில் இருக்கும் ரையன் கோஸ்லிங், சிஐஏவில் வேலை ஒன்றுக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். அவங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் முடிக்கும் தருவாயில், சில உண்மைகள் வெளிப்படுகின்றன. சிஐஏவுக்குள் நடக்கும் தவறுகள் அடங்கிய ஆதாரம் ஒன்று அவரிடம் கொடுக்கப்படுகிறது. இதையறிந்த கும்பல் ஒன்று ஆதாரத்துடன் சேர்த்து ரையன் கோஸ்லிங்கையும் அழிக்கத் துடிக்கின்றது. அவர்களின் இந்த சதித்திட்டத்திலிருந்து ரையன் எப்படி தப்பிக்கிறார், அவர் கையிலிருக்கும் ஆதாரம் என்னவானது என்பதை சொல்லும் படம் தான் 'தி கிரே மேன்'.
'ஹலோ மை செக்ஸி தமிழ் ஃபிரெண்ட்' என கிறிஸ் எவன்ஸ் கூறும்போது இதுவே திரையரங்காக இருந்தால் விசில் பறந்திருக்கும். டீசன்டான இன்ரோ காட்சியுடன் களமிறங்குகிறார் தனுஷ்.
அவரது உடல் மொழிக்கு வேலை தரும் நடிப்பை அறிந்ததாலோ என்னவோ, ருஸ்ஸோ சகோதரர்கள் அவருக்கு 2 வசனங்களை வைத்துவிட்டு, நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். பின்னணி இசையை கோர்த்து, எதிர்பாராத நேரத்தில் மாஸாக தோன்றுகிறார் தனுஷ். ரையான் கோஸ்லிங்குடன் அவரது சண்டைக்காட்சிகள் தரம். தேர்ந்த சண்டைக்காரனைப்போல அடித்து துவம்சம் செய்கிறார்.
படத்தின் நாயகன் ஓரிடத்தில் தனுஷை 'பொடிப்பையன்' என குறிப்பிடும் காட்சி ரசிக்க வைக்கிறது. உண்மையில் சில காட்சிகளே வந்தாலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.
இரண்டு, மூன்று இடங்களில் 'தமிழ் ஃபிரெண்ட்' என தமிழராகவே தனுஷ் அடையாளப்படுத்தப்படுகிறார். ஹாலிவுட்டில் கால் பதித்திருக்கும் அவருக்கு வாழ்த்துகள்!.
தவிர, ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரையான் கோஸ்லிங் - கிறிஸ் எவன்ஸூக்கும் இடையேயான ஃபேஸ் ஆப் காட்சிகள் மிரட்டுகின்றன.
'கேப்டன் அமெரிக்கா', 'அவெஞ்சர்ஸ்' போன்ற படங்களை இயக்கிய 'ருஸ்ஸோ சகோதரர்கள்' இயக்கத்தில் வெளியான இப்படம் வழக்கமான ஹாலிவுட் டெம்ப்ளேட்டிலிருந்து விடுபடாதது ஏமாற்றம். தமிழ் ரசிகர்களே பார்த்து சலித்துப்போன, நாயகனுக்கு கொடுக்கப்படும் அசைன்மெண்ட், அதையொட்டி நீளும் சண்டை, நல்லவன் கெட்டவன் பாணி என டையடாக்கவிடுகிறார்கள்.
கதையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, ஒளிப்பதிவைப் பார்த்தால் ஸ்டீஃபன் வின்டன் கலக்கியிருக்கிறார்.
சண்டைக்காட்சிகள், ஓடும் காட்சிகள், துப்பாக்கி தோட்டத்தெறிக்க இடையில் கேமிரா புகுந்து வெளிவருவது என திரைவிருந்துக்கு கேரன்டி கொடுக்கலாம். விஎஃப்க்ஸ், சவுண்டு, எடிட்டிங் என தொழில்நுட்பத்தில் ஸ்கோர் செய்யும் படம், துப்பாக்கி, தோட்டா, சண்டை, கொலை, ரத்தம் என சில இடங்களில் அயற்சியைத்தருகிறது.
முதல் 40 நிமிடங்கள் படம் மெதுவாக பயணிக்க, பின்னர் சண்டைக்காட்சிகளால் சூடுபிடிக்கிறது. ரையான் கோஸ்லிங் - கிறிஸ் எவன்ஸூக்கும் இடையேயான மோதல் என்பதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை.
மற்றபடி, எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு, தனுஷின் அழுத்தமான நடிப்புக்காகவும், சண்டைக் காட்சிகளுக்காகவும் படத்தை ஃப்ரீ டைமில் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.
WRITE A COMMENT