‘மொத்த ஷோவையும் வசப்படுத்திய தனுஷ்’ - ‘தி கிரே மேன்’ சிறப்புக் காட்சிக்குப் பின் விமர்சகர்கள் பாராட்டு


‘மொத்த ஷோவையும் வசப்படுத்திய தனுஷ்’ - ‘தி கிரே மேன்’ சிறப்புக் காட்சிக்குப் பின் விமர்சகர்கள் பாராட்டு

நடிகர் தனுஷ் உட்பட பலரும் நடித்துள்ள 'தி கிரே மேன்' திரைப்படம் வரும் 22-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தை சிறப்பு காட்சி (ஸ்பெஷல் ஸ்கிரீனிங்) மூலம் முன்கூட்டியே பார்த்த திரைப்பட விமர்சகர்கள் தனுஷ் தனது நடிப்பால் கவனம் ஈர்ப்பதாக தங்களது விமர்சனங்களில் தெரிவித்துள்ளனர்.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற படங்களை இயக்கியதற்காக பொதுவெளியில் பரவலாக அறியப்படுபவர்கள் அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ. இவர்கள் இருவரும் சகோதரர்கள். 'ருஸ்ஸோ சகோதரர்கள்' என இவர்கள் பிரபலம். கடந்த 2009-இல் வெளியான 'தி கிரே மேன்' நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் ஒரு படம் இயக்கி முடித்துள்ளனர். விரைவில் இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் முதன்மைக் கதாபாத்திரங்களில் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமாக இதில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார்.

தனுஷ் திரைப் பயணம்: இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தமிழ் திரைப்படமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார் தனுஷ். பார்க்க பக்கத்து வீட்டு பையனை போல காட்சி அளிக்கும் அவரது ஒல்லியான தேகமும், ஒட்டிப்போன கண்களும் மக்களிடையே அவரை நெருங்க செய்தது. படிப்படியாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார். ஆடுகளம் அவரது நடிப்பில் ஒரு மைல்கல்லை எட்டியது. அப்படியே மாற்று மொழி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். கூடவே பாட்டு எழுதுவது, பாடுவது, திரைப்படம் இயக்குவது போன்ற பணிகளிலும் கலந்து கட்டி அசத்தினார். பாலிவுட் திரைப்படமான ராஞ்சனாவில் குந்தனாக என்ட்ரி கொடுத்தார். அப்படியே 2018-இல் The Extraordinary Journey of the Fakir படத்தில் நடித்திருந்தார். பின்னர் அசுரன் மூலம் பார்வையாளர்களின் மனதை ஆட்கொண்டார். இப்போது தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார்.

தி கிரே மேன்: இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து தனுஷ், "இந்தப் படம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றதாகும். இதில் ஆக்‌ஷன், டிராமா, வேகம், பெரிய சேஸ் என பலவிதமான அம்சங்கள் உள்ளன. அற்புதமான நடிகர்களும், கலைஞர்களும் நிறைந்த இந்தப் படத்தில் ஒரு அடக்கமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அவிக் சான் (Avik San) எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

வரும் 15-ஆம் தேதி லிமிடெட் ரிலீசாக இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. 22-ஆம் தேதி முதல் இதே தளத்தில் அனைவரும் பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கான புரொமோஷன் பணிகளை படக்குழு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்ட சிறப்பு காட்சி ஸ்கிரீன் செய்யப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் மற்றும் விமர்சகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் தனுஷும் பங்கேற்றுள்ளார். இந்தப் படத்தை குறித்து பெரும்பாலான சினிமா விமர்சகர்கள் பாசிட்டிவான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். குறிப்பாக நடிகர் தனுஷ் தனது நடிப்பால் ஈர்க்கிறார் எனவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு சிறப்புக் காட்சி முடிந்த பின்னர் பார்வையாளர்களுடன் நடைபெற்ற கேள்வி - பதில் உரையாடலில் தனுஷ் தனது பதில்கள் மூலமும் கவர்ந்துள்ளதாக தெரிகிறது.

அவிக் சான் படு ஷார்ப் - விமர்சகர்களின் ரியாக்‌ஷன்

"தி கிரே மேனில் அதிரடி காட்சிகளை பக்காவாக கையாண்டுள்ளனர் ருஸ்ஸோ சகோதரர்கள். ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் தரமாக நடித்துள்ளனர். அனா டி அர்மாஸ் அழகால் கொள்ளை கொள்கிறார். தனுஷ் படு ஷார்ப்பாக நடித்துள்ளார்" என விமர்சகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

"ஆக்‌ஷனில் அசத்துகிறது தி கிரே மேன். ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸின் சேட்டைகள் சூப்பர். நடிகர் தனுஷ் மொத்த ஷோவையும் தன்வசப்படுத்தி உள்ளார். ருஸ்ஸோ சகோதரர்கள் சிறப்பாக இயக்கி உள்ளனர்" என தெரிவித்துள்ளார் மற்றொரு விமர்சகர்.

விமர்சகர்களின் கருத்துகள் சில…

— Courtney Howard (@Lulamaybelle) July 11, 2022

— Jana N Nagase - Jana On Camera (@janaoncamera) July 11, 2022

படத்தின் ட்ரைலரை காண...


FOLLOW US

WRITE A COMMENT

x