முதல் பார்வை | ஓ2 - விறுவிறு திரைக்கதையில் வீரியம் மிக்க மெசேஜ்!         


முதல் பார்வை | ஓ2 - விறுவிறு திரைக்கதையில் வீரியம் மிக்க மெசேஜ்!         

தன் மகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தாயின் நீக்கமற போராட்டத்துடன் சூழலியல் சார்ந்த கனமான கருத்தை விதைக்கும் முயற்சிதான் 'ஓ2' படத்தின் ஒன்லைன். படம் வெள்ளிக்கிழமை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நுரையீரல் பாதிப்பால் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியின்றி சுவாசிக்க முடியாமல் தவிக்கும் தன் மகனை அழைத்துக்கொண்டு மேல்சிகிச்சைக்காக கொச்சின் செல்லும் தாய் (நயன்தாரா). தன் காதலியின் தந்தைக்கு தெரியாமல் அவளை அழைத்துச்செல்ல திட்டமிடும் காதலன், போதைப்பொருளை கடத்திச் செல்லும் காவலர், இழந்த செல்வாக்கை மீட்கச் செல்லும் ஒரு அரசியல்வாதி உட்பட பலரையும் ஏற்றிக்கொண்டு, கோவையிலிருந்து கேரளா புறப்படுகிறது அந்த ஆம்னி பேருந்து.

வழியில் ஏற்படும் விபத்து காரணமாக பாலக்காடு செல்பவர்களுக்கு மட்டும் மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் இறங்கிக்கொள்கிறார்கள். மீதியுள்ள 8 பேருடன் கொச்சின் செல்லும் அந்தப் பேருந்து நிலச்சரிவில் சிக்கிக்கொள்ள, அந்த பேருந்துக்குள் ஆக்ஸிஜனுக்காக போராடும் அவர்களின் நிலை என்னவானது? எப்படி மீண்டார்கள் என்பதுதான் ‘ஓ2’ படத்தின் திரைக்கதை.

ஒட்டுமொத்த படத்திற்கும் அச்சாணியாக சுழல்கிறார் நயன்தாரா. மகனுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிவு, சமயோஜித யோசனை, குற்ற உணர்ச்சி, பாசம்,பயம், பதற்றம் என அத்தனை உணர்ச்சிகளையும் கச்சிதமாக கடத்தும் விதத்தில் ஈர்க்கிறார். எந்த இடத்திலும் நயன்தாராவிடம் மிகை நடிப்பை காணமுடியாதது படத்திற்கு பலம் சேர்க்கிறது. யதார்தத்துக்கு நெருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அடுத்தாக வீரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'யூடியூப்' புகழ் ரித்விக்கிற்கு இது முதல் படம். அவர் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதன் ஒரு தொடக்கப்புள்ளியான இந்தப் படத்தில் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் பரத் நீலகண்டன் வில்லனாக மிரட்டியிருக்கிறார். 'ஆடுகளம்' முருகதாஸ், ஆர்என்ஆர் மனோகர், ஷாரா, ஜாஃபர் இடுக்கி, சிபி புவன சந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பு படத்துக்கு பலம்.

அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். அடிப்படையில் ஒரு நல்ல திரைக்கதை என்பது, திரைக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளியை குறைப்பதுதான். வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு பார்வையாளனை படம் முழுமையாக எங்கேஜ் செய்ய வேண்டும். அப்படிப்பார்க்கும்போது 'ஓ2' உங்களை திரையிலிருந்து விலக்கச் செய்யாது என்பது மட்டும் உறுதி. படம் தொடங்கியதும் எந்தவித சமரச காட்சிகளுக்கும் இடமளிக்காமல், நேரடியாக கதைக்குள் சென்றுவிடுகிறது. அடுத்தடுத்த காட்சிகளுக்கான பதற்றம், விறுவிறுப்பு நம்மை தொற்றிக்கொண்டு நகர்வது படத்திற்கு பலம். படம் இரண்டு லேயர்களை கொண்டு பயணிக்கிறது.

சூழலியல் ஆபத்துகளையும், இயற்கையை வேட்டையாடும் மனிதனை, இயற்கை வேட்டையாடாமல் விடாது என்பதையும், அதற்கான உதாரணத்தை தொடக்கக் காட்சியில் சொன்ன விதமும் விழிப்புணர்வுடன் கூடிய அச்சத்தை விதைக்கிறது. இயற்கைக்கு நீங்கள் செய்யும் உதவிக்காக இயற்கை மீண்டும் உங்களுக்கு கைமாறு செய்யும் என்ற சூழலியல் பிரச்சினையை பாடம் எடுக்காமல் காட்சிகளால் கடத்திய விதம் கவனம் பெறுகிறது. மற்றொருபுறம் மகன்களை மீட்கும் தாய்கள். நயன்தாரா - ரித்விக் மட்டுமல்லாமல், மற்றொரு கதாபாத்திரமும் தன் தாயின் போராட்டத்தால் மீட்கப்பட்டிருக்கிறது. இரண்டு லேயர்களுக்குள் சாதியும் பேசப்படுகிறது.

நுணுக்கமாக ஆராய்ந்தால் மனிதன் அடிப்படையில் ஒரு சுயநலவாதி. தன் தேவைக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவன் என்பதை, தன் சுயலநலத்திற்காக இயற்கையை அழிக்கும் மனிதன், அதேதான் பிழைக்க வேண்டி பிஞ்சு குழந்தையையும் அழிக்க தயங்குவதில்லை என்பதை பொருத்தி இணைத்திருக்கும் விதம் ஈர்க்கிறது. பேருந்தில் ஆக்ஸிஜனுக்காக போராடும் காட்சிகள் எதிர்காலத்தில் இப்பூவுலகில் நிகழும் அபாயங்களின் குறியீடாக காட்டியிருக்கும் விதம் கவனத்தில் கொள்ள வேண்டியது. பேருந்துக்குள் ஆக்ஸிஜனின்றி அவர்கள் தவிக்கும்போது, நமக்கு மூச்சுமுட்டுகிறது.

தவிர, படத்தில் நயன்தாராவின் கலையாத மேக்கப்பும், ஆங்காங்கே ரத்தக்கரை என சொல்லிக்கொள்ள ஒட்டியிருக்கும் இரண்டு ஸ்டிக்கர்களும் உறுத்துகிறது. அவ்வளவு பெரிய நிலச்சரிவில் சிக்கிய பேருந்துக்குள் இருக்கும் நயன்தாராவுக்கு அடிகள் எதுவுமில்லாமல், சொல்லப்போனால் பயணிகள் 8 பேருக்கும் பெரிய பாதிப்பில்லாமல் இருப்பது நம்பும்படியாக இல்லை. கிராஃபிக்ஸ் காட்சிகள் செயற்கைத்தனத்தை உரித்து காட்டுகிறது. லாஜிக் பிரச்னை படம் நெடுங்கிலும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.

பல முக்கியமான விஷயங்களை பேச முயன்றிருக்கும் படத்திற்கு தமிழ் அழகனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒரே பேருந்துக்குள் பயணிக்க வேண்டிய கதை என்பதால், தனது கேமிரா கோணங்களால் முடிந்த அளவுக்கு வித்தியாசமான திரையனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். மின்சாரம் துண்டிக்கப்படும் காட்சிகளில் ஒற்றை டார்ச் மட்டும் வைத்துக்கொண்டு காட்சிபடுத்தியிருந்த விதம் சிறப்பு. விஷால் சந்திர சேகரின் பின்னணி இசையில் வரும் பாடல், ஹம்மிங் கவனம் பெறுகிறது. செல்வாவின் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குநர் சதீஷ்குமாரின் உழைப்புக்கு கண்டிப்பாக பாராட்டப்படவேண்டியது.

'அறம்' படத்தையொட்டிய உணர்வை கொடுக்கும் இப்படத்தில், லீட் கேரக்டரில் நயன்தாராவையும், பேரிடர் மீட்புகுழுவை தலைமைதாங்கும் அதிகாரியாக பெண் ஒருவரையும் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது சமகால சினிமாவில் ஆடல் பாடல்களுக்காவும், காதலுக்காவும் பெண்கள் பயன்படுத்தப்படும் போக்கிலிருந்து தனித்து நிற்கிறது.

மொத்ததில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அழுத்தமான கருத்தை விதைக்க முயற்சித்திருக்கும் படைப்பு தான் 'ஓ2'.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :

FOLLOW US

WRITE A COMMENT

x