ஓடிடி திரை அலசல் | தரமான சம்பவங்கள் - ‘ஜன கண மன’ பேசும் அரசியல் என்ன?


ஓடிடி திரை அலசல் | தரமான சம்பவங்கள் - ‘ஜன கண மன’ பேசும் அரசியல் என்ன?

திரையரங்குகளில் வெற்றி நடைபோட்ட பின் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பலராலும் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கும் 'ஜன கண மன' படம் பேசும் அரசியல் குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம். (அலர்ட்: இந்தக் கட்டுரையில் ஸ்பாய்லர்கள் நிறைந்துள்ளன.)

கர்நாடகாவில் மத்தியப் பல்கலைகழகம் ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வரும் சபா மர்யம் (மம்தா மோகன்தாஸ்) மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரது கொலைக்கு நியாயம் கோரி, மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர். போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட, இது தொடர்பான விசாரணையை முன்னெடுக்கிறது ஏசிபி சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு) தலைமையிலான காவல்துறை டீம். இந்த விசாரணை முறையாக நடைபெற்றதா? சபா மர்யம் ஏன் கொல்லப்பட்டார்? இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? - இதுதான் 'ஜன கண மன' படத்தின் திரைக்கதை.

பல்கலைக்கழகப் பேராசிரியை சபா மர்யமாக மம்தா மோகன்தாஸ். சில காட்சிகளே வந்தாலும் நிறைவைத் தருகிறார். உண்மையை உடைத்துப் பேசுவதிலும், மாணவர்களை வழிநடத்துவதிலும், நீதிக்கான போராட்டத்தில் துணை நிற்பதிலுமாக ஈர்க்கிறார்.

ஏசிபி சஞ்சன் குமாராக சூரஜ் வெஞ்சரமூடு. மனுஷன் எந்த கெட்டப் போட்டாலும் அதற்கு பொருந்திப் போகிறார். முதல் பாதி முழுவதையும் தன் தோளில் சுமந்து செல்கிறார். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகம், வார்த்தைகளை எண்ணிப் பேசுவது, பாவனை, மகனிடம் பாசமான தந்தையாகவும், காவலராக கறார் காட்டுவதிலும், குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகும்போதும் நடிப்பில் உச்சம் தொடுகிறார் சூரஜ்.

படத்தின் தொடக்கக் காட்சியில் வரும் பிரித்விராஜ், முதல் பாதி முழுக்க ஆளைக் காணவில்லை. அவரைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இரண்டாம் பாதியில் விஷுவல் ட்ரீட் தருகிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்குமான ஸ்கிரீன் ஸ்பேஸை முதல் பாதி சூரஜ் வெஞ்சரமூடுவுக்கும், இரண்டாம் பாதியைப் பிரித்விராஜுக்குமாக பிரித்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.

வழக்கறிஞராக வரும் பிரித்விராஜுக்கான களம் நீதிமன்றத்தின் அந்தக் குறுகிய அறை மட்டுமே. அந்த அறை முழுக்க அவரது சத்தமும், கோபமும், நடிப்பும், உணர்ச்சிகளுமே பொங்கி வழிகின்றன. இடைவேளைக்குப் பின் தனி ஆளாக ஸ்கோர் செய்து ரசிகர்களிடம் கவனம் பெறுகிறார் பிரித்விராஜ்.

விமர்சனம் - வீடியோ வடிவில் இங்கே...

சரி, இனி படம் பேசும் அரசியலுக்கு வருவோம். இந்தியாவின் புகழ்ப்பெற்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் வேர்கள் எந்த அளவுக்கு பரந்து விரிந்து கிடக்கின்றன என்பதும் படத்தின் மையக்கரு. ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமூலாவின் தற்கொலை, சென்னை ஐஐடி மாணவி பாத்திமாக லத்தீஃப் தற்கொலை, சமீபத்திய ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் தாக்குதல்கள் என நடப்பு நிகழ்வுகளை திரைக்கதையாக்கியிருக்கிறார் லிஜோ ஜோஸ் ஆண்டனி.

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் சாதியையும், மதத்தையும் அளவுகோலாக கொண்டு அவர்களை அங்கிருக்கும் சில பேராசியர்கள் அணுகும் முறை, அவர்களை நோக்கி வீசப்படும் அம்புகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் என அழுத்தமான காட்சிகளால் சரமாரி கேள்வி கேட்கிறது படம்.

பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவியைப் பார்த்து பேசும் பேராசிரியர், ''இலவசத்த என்னைக்குமே அதிகாரமா கேட்க முடியாது'' என்று கூறுகிறார். இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் இலவசமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன.

அதேபோல, உண்மைக் குற்றங்கள் எளிதில் மறைக்கப்பட்டு, அதன் மீது பூசப்படும் போலி சாயங்களை சுரண்டிய விதத்தில் படத்தை பாராட்டலாம். பாலியல் வன்கொடுமை நடந்ததாக கதை கட்டி, அந்தல் குற்றத்தில் சம்பந்தப்படாத 4 பேரை என்கவுன்டர் செய்ததும் இங்கிருக்கும் கூட்டு மனசாட்சி நிம்மதி கொள்கிறது. தீர்வு கிடைத்துவிட்டதென ஆறுதலடைகிறது. இந்த மடமை கேள்விகளால் படம் கிழித்தெறிகிறது. (2019-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து நீங்கள் அறிந்திருந்தால், இந்தப் படம் போலி என்கவுன்ட்டர் குறித்து பேசும் அரசியல் வெகுவாக புரியும்)

இறந்த சபா மர்யத்தின் தாயிடம், 'அவங்க பாலியல் வன்கொடுமை செஞ்சதா உங்க கண்ணால பாத்தீங்களா? எத வைச்சு சொல்றீங்க' என கேட்கும்போது அவரிடம் இருக்கும் பதில், 'எல்லாரும் சொல்றாங்க. மீடியா சொல்லுது' என்பதே. அதை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரிடம், 'உடற்கூறாய்வு அறிக்கை வருவதற்கு முன்பே அதை பாலியல் வன்கொடுமை என எப்படி பதிவு செய்தீர்கள்?' என கேட்கும்போது அவரிடம் பதிலில்லை. ஆக வாட்ஸ்அப் ஃபார்வேடு போல யாரோ ஒருவரால் பரப்பபடுவதையோ, ஊடகங்கள் சொல்வதையோ அப்படியே ஏற்று சம்பந்தமேயில்லாதவர்களை சமூகம் குற்றவாளிக்கியாக்கிவிடுகிறது.

மிகப்பெரிய பிரச்னைகள் யாவும், உணர்ச்சிவசத்தாலும், உரிய விசாரணைகளின்றியும், என்கவுன்டர்கள் போன்ற போலி தீர்வுகளாலும் எளிதில் மறைக்கப்பட்டு விடுகின்றன என்பதை படம் அழுத்தமாக காட்சிப்படுத்துகிறது. குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய போலீஸும், அதை ஆமோதிக்கும் ஊடகங்கள் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றங்கள் எதற்கு என்ற கேள்வி சிந்திக்க வைக்கிறது.

அதேபோல, குற்றவாளிகள் என கண்டறிய பொது சமூகம், காவல்துறை முன்வைக்கும் கிரைடீரியாக்களை உடைத்து நொறுக்குகிறது படம். ஓரிடத்தில் நீதிபதியே, 'அவங்கள பாத்தாலே குற்றவாளின்னு தெரியுது' என்கிறார். இது ஒரு முக்கியமான பிரச்னை. ஒருவரின் நிறம், மதம், சாதி அடையாளங்களை வைத்து அவரை குற்றம் செய்தவர் என்ற முன்முடிவு ஆபத்தானது. அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஏராளம்.

குறிப்பாக சென்னையை எடுத்துகொண்டால், இங்கிருக்கும் படங்கள் தொடங்கி, காவல் துறையினர், பொதுமக்கள் முதற்கொண்டு, வட சென்னை மக்களிடம் பாகுபாடு காட்டும் அவலம் நிகழ்கிறது. 'புள்ளிங்கோ' என்ற அடைமொழியுடன் அவர்களை தனித்து அடையாளப்படுத்துவது என ஒருவரின் நிறங்களும், அவர் வாழும் இடமும், அவரின் மத அடையாளமும் குற்றவாளிக்கான வரையறைகளை நிரப்பிவிடுகின்றன. படம் இது குறித்து அழுத்தமான கேள்வியை முன்வைக்கிறது. எந்த விசாரணையுமில்லாமல், 4 பேரை குற்றவாளிகள் என என்கவுன்டர் செய்யும் காவல்துறையை பொது சமூகத்தின் கூட்டு மனசாட்சியுடன் நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.

அரசியல் வசனங்கள் தைரியமாக அணுகப்பட்டிருக்கிறது. ''பசங்களையும், பேரப்பசங்களையும், கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்களில் படிக்க வைத்துவிட்டு, 'மேக் இன் இந்தியா' என ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு நான் பேசுவது புரியாது'' என்பதும், வட இந்தியாவில் மாட்டிறைச்சி பெயரால் நடக்கும் கொலைகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு, கேரளாவின் உணவுக்காக அடித்தே கொல்லப்பட்ட மனு, இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சாதிய, நிற, பாகுபாடுகள் குறித்த வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்கள் முழுவதும் நம்மை ஆட்கொண்டு, சிந்திக்க வைக்கின்றன. உண்மையில் மலையாள சினிமாக்கள் கலையின் வீரியத்தையும், அதை கையாளும் முறையையும் அறிந்து செயல்படுவதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெறுகின்றன. அந்த வகையில், 'ஜன கன மண' தவறவிடக்கூடாத சமகால அரசியல் சினிமா.

மேற்கண்ட கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, இது ஏதோ சீரியஸான டிராமா ஸ்டோரி என்று நினைத்துவிட வேண்டாம். பரபரப்பான பொலிட்டிகல் த்ரில்லராகவும், என்டர்டெய்னராகவுமே இருக்கும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கும் அசல் மொழிப் படத்தை பார்க்கும் உணர்வையே கொடுக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x