முதல் பார்வை | 12th Man - வலுவற்ற திரைக்கதையால் தடுமாறும் த்ரில்லர்!


முதல் பார்வை | 12th Man - வலுவற்ற திரைக்கதையால் தடுமாறும் த்ரில்லர்!

'விளையாட்டு வினையாகும்' என்பதை 'ட்வெல்த் மேன்' (12th Man) திரைப்படத்தின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜீது ஜோசப். ஆனால் என்ன... நீண்ட நேரமாக சொல்லி திரைக்கதையில் விளையாடியிருப்பதுதான் சோதனை. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

விரைவில் திருமணமாகப்போகும் நண்பரின் பேச்சுலர் பார்ட்டியை கொண்டாட மலைப் பிரதேசம் ஒன்றுக்கு பயணப்படுகிறது 11 பேர் கொண்ட நண்பர்கள் குழு. அங்கிருக்கும் ரிசார்ட் ஒன்றில் தங்கி, ஆடல் - பாடல் என பேச்சுலர் பார்டியை கொண்டாட தொடங்கும் அவர்கள், விநோத விளையாட்டு ஒன்றையும் ஆடத் தொடங்குகிறார்கள்.

விளையாட்டுடன் விதியும் சேர்ந்துகொள்ள, வராத நேரத்தில் வரும் ஒரு போன் கால், நடக்கக் கூடாத ஒரு சம்பவத்துக்கு காரணமாகிவிட, இதையெல்லாம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, அவிழ்த்து மோகன்லால் வாயிலாக ஜீது ஜோசப் சொல்லும் பொறுமையான கதைதான் 'ட்வெல்த் மேன்'.

படம் தொடங்கியதிலிருந்து மோகன்லாலைத் தேடிக்கொண்டிருக்கும் கண்களுக்கு மதுப் பிரியராக அகப்படுகிறார். தொடக்கத்தில் காமெடியனாக அறிமுகமாகி, படம் செல்லச் செல்ல நண்பர்கள் குழுவின் கண்களில் விரலை விட்டு ஆட்டத் தொடங்குகிறார். காமெடி கதாபாத்திரத்துக்கான உடல் மொழியையும், கறார் கதாபாத்திரத்துக்கான உடல்மொழியையும் தனித்தனியே பிரித்துக் காட்டி, நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரைத் தவிர்த்து மற்ற 11 பேரும் கதாபாத்திரத்துக்கு தேவையான தேர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

படத்தில் வரும் விசாரணை நடத்தும் பாணி தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு புதிய அறிமுகம். நேரடியாக பதிலைக் கேட்காமல், சம்பந்தப்பட்டவர்களின் வாயாலேயே உண்மையைப் பெற கையாண்டிருக்கும் யுக்தி, அதற்கான கதைப் பிணைப்பில் இயக்குநரின் மெனக்கெடல் தெரிகிறது.

நெருங்கிய நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களுக்குள் பணம் செலுத்தும் ஆதிக்கம், உறவுச் சிக்கல்கள், தன்னை நியாயப்படுத்திக்கொள்ள மனிதர்கள் அணியும் முகமூடிகள் என உளவியல் சிக்கல்களையும் படம் பேசுகிறது. லாஜிக்கை ஆராய நமக்கு இடமே கொடுக்காமல் அடுத்தடுத்து குழப்பத்தையும் முடிச்சையும் கூட்டிக்கொண்டே போகிறார். பின்னர் முடிச்சை அவிழ்க்கும்போது, முந்தையக் காட்சிகள் நினைவிலிருந்து கரைந்துவிடுகின்றன.

ஒரு நல்ல த்ரில்லர் சஸ்பென்ஸ்க்குக்கான திருப்பங்கள் நிறைந்த 12 முக்கிய கதாபாத்திரங்கள், ஒரு ரிசார்ட் என பெரிய பட்ஜெட் செலவு வைக்காத கதை. மோகன்லால் போன்ற மிகப் பெரிய நடிகரின் வாய்ப்புகளையெல்லாம் கவனத்தில் கொண்டு திரைக்கதையை புதிதாக வாங்கிய கத்தியைப்போல கூர்மையாக்கியிருந்தால் படம் மிரட்டியிருக்கும். ஆனால், திரைக்கதை துருப்பிடித்த கத்தியாக இருப்பதால் களமாட முடியவில்லை.

படத்தில் வரும் 11 பேரின் பெயர்களையும், அவர்களின் ஜோடிகள் யார் யார் என்பதை அடையாளம் காண அடிக்கடி பேக்வேர்டு பட்டனை அழுத்த வேண்டியிருக்கிறது (ஓடிடியின் அருமையை புரியவைத்தற்கு நன்றி ஜீது). அதுமட்டுமின்றி ஃபார்வேர்டில் 2.45 மணிநேர படம் இருப்பதை பார்க்கும்போது படத்தை விட நேரம் திகிலூட்டுகிறது.

இந்த படத்தைப் பார்க்கும்போது, 2016-ல் வெளியான இத்தாலி படமான 'பர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்', அதைத் தழுவி எடுக்கப்பட்டு பிரெஞ்ச்சில் வெளியான 'நத்திங் டூ ஹைடு' படங்களின் வாடை அடிப்பதை தவிர்க்க முடியவில்லை. அந்தப் படங்களில் இருந்தே கதை எடுத்தாளப்பட்டுள்ளது தெளிவு. (Nothing to Hide - நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது).

பேச்சுப் போட்டிக்கு ஆள் சேர்ப்பது போல, முதல் பாதி முழுக்க சீரியல் பாணியில் பேசிக்கொண்டே நகர, இரண்டாம் பாதியின் இடையில் விறுவிறுப்பு கூடுகிறது. அதுவரை அரைத் தூக்கத்திலிருந்துவர்களை தட்டி எழுப்பி படத்துக்குள் வருமாறு உற்சாகமூட்டுகிறார் ஜீது. இதை முன்னாடி செய்து இரக்கம் காட்டியிருக்கலாமே?!.

இரண்டாம் பாதியை திருப்பங்கள், சஸ்பென்ஸுடன் சேர்ந்து எடிட்டிங்கும், ஒளிப்பதிவும் காப்பாற்றுகின்றன. ஒவ்வொரு பின்கதைச்யை சொல்லி முடிக்கும்போது அதை அப்படியே கட் செய்து நிகழ்காலத்துடன் பொருத்தியிருக்கும் விதம் வெகுவாகவே ஈர்க்கிறது. அந்த வகையில், எடிட்டர் விநாயக், ஒளிப்பதிவாளர் சதீஷ் குருப் ஆகியோருக்கு பாராட்டுகள். அனில் ஜான்சன் பின்னணி இசை த்ரில்லருக்கு வலு சேர்க்கிறது.

மொத்தத்தில் 'ட்வெல்த் மேன்' நல்ல த்ரில்லரை உள்ளடக்கிய தரமில்லாத திரைக்கதையால் தடுமாறிய கதைக்களம்.

FOLLOW US

WRITE A COMMENT

x