ஓடிடி திரை அலசல் | புழு - மம்முட்டியின் கோரத்தாண்டவமும் கிழிபடும் முகமூடிகளும்!


ஓடிடி திரை அலசல் | புழு - மம்முட்டியின் கோரத்தாண்டவமும் கிழிபடும் முகமூடிகளும்!

அறிவியலின் படி, பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என எவரும் இருக்க முடியாது. இந்த உண்மையைப் புரிந்துகொள்வது மிகவும் எளிது. அதை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்வதில்தான் மனிதர்களுக்குச் சிக்கல் இருக்கிறது. ஏனென்றால், ஆதிக்க மனோபாவத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்வை இந்த எளிய உண்மை அர்த்தமற்றதாக்கி விடும். குலப் பெருமை, சாதிப் பெருமை, இனப் பெருமை உள்ளிட்ட அனைத்து பெருமைகளையும் அது கேள்விக்குள்ளாக்கிவிடும். இந்த ஆபத்திலிருந்து தம்மைக் காப்பதற்கு மனிதர்கள் விரும்பி அணிந்திருக்கும் கவசமே ’உயர்வு - தாழ்வு’ எனும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையைக் குறிப்பிட்ட சிலர் மட்டும் ஏற்றுக்கொள்வதாலோ, நம்புவதாலோ எந்தப் பயனும் கிடைக்காது. அதை மற்றவர்களும் முழுமையாக நம்ப வேண்டும்; கேள்விக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே அந்தக் குறிப்பிட்ட சிலரின் இருப்பை உறுதிசெய்யும். அவர்கள் நிறுவ விரும்பும் உயர்வையும் நிலைநிறுத்தும். இந்த நம்பிக்கையை உண்மையாக வலிந்து திணிக்க ஆதிக்க மனோபாவம் கொண்ட மனிதர்கள் ஆடும் ஆட்டம் மிகவும் கோரமானது. வன்மமும் மூர்க்கமும் நிறைந்த இந்தக் கோர ஆட்டத்தின் சிறுதுளியே, ‘புழு’ எனும் மலையாளத் திரைப்படம். மம்மூட்டி நடிப்பில், ரதீனா எனும் பெண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம், சோனி லிவ் ஒடிடி தளத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது.

மகாபாரதத்தின் கிளைக் கதை

இந்தக் கதையின் மூலம் மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையிலிருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கதையின் படி, மகாபாரதத்தில் தர்மருக்குப் பின்னர் அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்தவர் பரீக்ஷித்து. ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது, அங்கே தவத்தில் ஆழ்ந்திருந்த சமீக முனிவரை அவர் காண்பார். அவர் உண்மையில் தவத்தில்தான் இருக்கிறாரா என்பதைக் கண்டறிய, உயிரற்ற பாம்பு ஒன்றை எடுத்து முனிவரின் கழுத்தில் மாலையாகப் போடுவார். அப்போதும் முனிவரின் தவம் கலையாததால், பரீக்ஷித்து அங்கிருந்து சென்றுவிடுவார். இதைக் கண்டு சினமுற்ற முனிவரின் மகன், கொடிய பாம்பிடம் கடிபட்டு இறப்பாய் என மன்னருக்குச் சாபமிடுவார். இந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதற்கு மன்னர் விண்ணில் கோட்டைக் கட்டி வாழ்வார். பாம்பிடமிருந்து ஆறு முறை தப்பிக்கும் மன்னர், இறுதியில் பழங்களின் ஊடே புழுவாக நுழைந்த பாம்பிடம் கடிபட்டு இறப்பார்.

இந்தப் படத்தில், குட்டன் எனும் கதாப்பத்திரத்தில் நடித்திருக்கும் மம்முட்டியே மன்னர் பரீக்ஷித்து. ஆனால், இந்த படத்தில் மம்மூட்டி பல பாம்புகளைப் பல முனிவர்களுக்கு மாட்டியிருக்கிறார். எனவே, அவரைக் கொல்வதற்கும் பல பாம்புகள் துரத்துகின்றன. அவற்றிலிருந்து மம்முட்டி தப்பித்தாரா? என்கிற கேள்விக்கான விடையே இந்தத் திரைப்படம். அந்தப் பாம்புகளின் பின்னணி, அவற்றின் வன்மம், விஷத்தின் வடிவங்கள் ஆகியவற்றை சமகால் அரசியல் சூழலுக்கேற்ற வகையில் இந்தக் கதையில் பொருத்தியது இயக்குநரின் சாதுரியம். இந்தச் சாதுரியமே இந்தப் படத்தின் பலம். அதுவே இதன் பலவீனமும் கூட.

அப்புன்னி சசியின் தேர்ந்த நடிப்பு

இந்தப் பலவீனத்தைப் புறந்தள்ளி நம்மைப் படத்தோடு ஒன்றிப்போகச் செய்யும் விதமாக மம்முட்டியின் நடிப்பும், அப்புன்னி சசி ஏற்று நடித்திருக்கும் குட்டப்பன் எனும் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் இருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால், அப்புன்னி சசியே இந்தப் படத்தின் நாயகன். அவருடைய வெகு இயல்பான நடிப்பும், இறுக்கமற்ற உடல்மொழியும், அன்பில் ததும்பும் விழிகளும், அசாத்தியமான வசன உச்சரிப்பும் முதல் காட்சியிலேயே அவரை நம் மனத்துக்கு நெருக்கமானவராக மாற்றிவிடுகின்றன. தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாகும் மனிதர்களின் வலியையும், போராட்டக் குணத்தையும், வெற்றியை நோக்கிய அவர்களின் முனைப்பையும் அந்த அளவு தத்ரூபமாக அப்புன்னி சசி வெளிப்படுத்தி இருக்கிறார். திருமண பதிவின்போது பதிவாளரின் கன்னத்தில் அவர் அறையும் காட்சியும், எதிர்பாரா விதமாக லிப்டில் மம்முட்டியைச் சந்திக்கும்போது அவர் விரல்கள் போடும் தாளமும், பார்வதியின் உறவினர்களின் முன்னர் அவருடைய கையைப் பிடித்தபடி நடக்கும்போது அவர் வெளிப்படுத்தும் பெருமிதமும் மம்முட்டியைக் கூட பொறாமைக் கொள்ள வைக்கும்.

மம்முட்டியின் கோரத்தாண்டவம்

குட்டன் கதாப்பத்திரமாகவே மம்முட்டி இந்த திரைப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். நான் ஏன் ஒரு மாபெரும் நடிகராக இன்றும் கொண்டாடப்படுகிறேன் என்பதை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு காட்சியிலும் அவர் நடித்திருக்கிறார். ஒரே இடம், ஒரே சூழல் என்று அமைந்திருக்கும் காட்சியில் கூட நொடிக்கொரு முறை அவர் முகத்தில் வெளிப்படும் மாறுபட்ட உணர்வுகள் நம்மை மலைக்க வைக்கின்றன. சமூகத்தின் கோட்பாடுகளைக் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளும் மனிதர்களிடம் தென்படும் இயல்பான இறுக்கத்தை மம்முட்டி அப்படியே நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். புறத்தோற்றத்தில் நல்லவர்களாக இருக்கும் மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் வன்மத்தையும் மூர்க்கத்தையும் சிறு, சிறு முக அசைவுகளைக் கொண்டு அவர் உணர்த்தும் விதம் அலாதியானது. மகனுடன் பல் துலக்கும் காட்சியில் கூட அவருடைய முகம் பல்வேறு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.

பார்வதியைப் பார்க்கும்போது எல்லாம் அவர் வெளிப்படுத்தும் அசௌகரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். பார்வதி கர்ப்பமுற்று இருப்பதைக் கேள்விப்படும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், ஒருவேளை மம்முட்டியின் நிலைப்பாடு சரிதானோ என்கிற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்திவிடுகின்றன. இறுதியில் பார்வதியின் மனத்தை மாற்ற முயலும்போது, அவரின் அன்பு எனும் முகமூடி படிப்படியாகக் கழன்று மூர்க்கம் மிகுந்த வெறியாக நிலைபெறும் காட்சியில் மம்முட்டி ஆடியிருக்கும் கோரத்தாண்டவம் அவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

கவனம் ஈர்க்கும் இயக்குநர்

நல்ல கதையைத் தேர்ந்தெடுத்ததில் பளிச்சிடும் இயக்குநரின் திறமை, அதன் ஆக்க நேர்த்தியில் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்துக்கு மம்முட்டி, அப்புன்னி சசி, பார்வதி ஆகிய மூன்று பேரின் கதாபாத்திரங்கள் மட்டும் போதுமானவை. அவற்றுக்குள் இருக்கும் முரண்களைப் பற்றிப் பேசி இருந்தாலே, அது நமக்கு ஒரு நிறைவான திரைப்பட அனுபவத்தை அளித்திருக்கும். ஆனால், ஒரே படத்தில் பல கனமான அரசியல் நிகழ்வுகளை இயக்குநர் பேச முயற்சித்து இருக்கிறார். இதன் விளைவாக, இந்தப் படம் பல்வேறு திசைகளில் அழுத்தமற்று பயணிக்கிறது. மம்முட்டியும், அப்புண்ணி சசியும் நமக்கு அளிக்கும் நிறைவை, இந்த அழுத்தமற்ற பயணம் நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது.

இருப்பினும் இந்தத் திரைப்படம், வெறுப்பு நிரம்பி வழியும் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான ஒன்றாக, நாம் தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அனுபவமின்மை காரணமாக ஆக்க நேர்த்தியில் தடுமாறும் ரதீனா, அந்தக் குறையைப் பலரும் பேசத் தயங்கும் கனமான களத்தைத் தேர்ந்தெடுத்தன் மூலம் ஈடு செய்து இருக்கிறார். சமகால சமூக - அரசியல் உளவியலும், அதன் ஆபத்துகளும் அத்தனை நேர்த்தியாக இந்தத் திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. தந்தை – மகன் உறவின் வழியாக இயக்குநர் உணர்த்தும் நுண் அரசியல், சாதிய மனோபாவத்தின் பேராபத்தை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முக்கியமாக இந்தத் திரைப்படம், சமூகத்தின் பார்வையில் தம்மை நல்லவர்களாகவும் வெற்றியாளராகவும் நம்பும் பலரது முகமூடியைக் கிழித்தெறிந்துள்ளது.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

WRITE A COMMENT

x