முதல் பார்வை | சாணிக் காயிதம் - ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பழிவாங்கல் படலம்


முதல் பார்வை | சாணிக் காயிதம் - ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பழிவாங்கல் படலம்

ரத்தம் தெறிக்க, அலறல் சத்தம் ஒலிக்க, வெறி அடங்கும் வரை தேடித் தேடி நடத்தப்படும் பழிவாங்கும் படலம்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒன்லைன்.

கடலை வெறித்துப் பார்த்தபடி, பீடியை பற்றவைத்துக்கொண்டு ஆசுவாசமாக நின்றுகொண்டிருக்கிறார் சங்கய்யா (செல்வராகவன்). அருகிலிருந்த அறையிலிருந்து சங்கரய்யாவை நோக்கி பொறுமையாக நடந்து வருகிறார் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). எந்த வித பதற்றமும் இல்லாமல், 'உயிரோட எரிக்கணும் மண்ணெண்ணய கொடு' என கேட்கிறார். பொறுமையாக சம்பந்தபட்டவரை எரித்து முடித்து அவர்கள் அங்கிருந்து நடந்து செல்லும் வரை அந்த 'சிங்கிள் ஷாட்' நீண்டுகொண்டேயிருக்கிறது. திரையிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள்ளும் அந்த 'சிங்கிள் ஷாட்' மூலமாக நம்மை கைப்பிடித்து அவரது உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

அவரது அந்த உலகத்தில் கத்தியும், தோட்டாவும், துப்பாக்கியும், ரத்தமும் நிரம்பிக் கிடக்கின்றன. அந்த உலகத்தில் காவல் துறை அதிகாரியான பொன்னியின் குடும்பம் தடயமேயில்லாமல் அழிக்ககப்படுகிறது. பொன்னியும் சிதைக்கப்படுகிறாள். அதேபோல சங்கரய்யாவின் குடும்பமும் அழிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணாக பழிவாங்கும் வேட்கையோடு இருக்கும் பொன்னியுடன் சங்கைய்யாவும் இணைகிறார். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். அது பழிவாங்குதல்!

அந்தப் பழிவாங்கும் படலத்தை அவர்கள் எப்படி நிகழ்த்திக்காட்டுகிறார்கள் என்பதை 2.15 மணி நேரம் சினிமாவாக ரத்தமும் சதையுமாக திரைக்கதையால் எழுதியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.

பொன்னியாக கீர்த்தி சுரேஷ். இனி இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் இருக்கும் ஒருவராக உடல்மொழியாலும், அழுகையாலும், கோபத்தாலும், வெறியாலும் அந்த உணர்வுகளை நமக்கு கடத்துகிறார். இழப்பிற்கு முன் வேறொருவராகவும், இழந்த பின் மற்றொரு பொன்னியாகவும் இரு வேறு உணர்வுகளையும் கச்சிதமாக நமக்கு கடத்துகிறார். இவ்வளவு கொலை வெறியுடன் பெண் ஒருவர் கூர்தீட்டப்பட்ட கத்தியாக நடித்திருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிது. 'பழிவாங்குறதுன்னா என்னான்னு தெரியுமா?' என அவர் பேசும் சிங்கிள் ஷாட் காட்சி மிரட்டல் வடிவம்.

சங்கய்யாவாக செல்வராகவன். எல்லாமே கைமீறிவிட்டது என உணர்ந்து கதறி அழும் தருணத்தில், செல்வராகவன் எனும் நடிகரை தமிழ் சினிமா இத்தனைக் காலம் இழந்திருப்பதை உணர முடிகிறது. சண்டைக்காட்சிகளிலும், பொன்னியிடம் சண்டையிடும் காட்சிகளிலும், அசால்ட்டாக கொலை செய்வது என ஸ்கோர் செய்கிறார் செல்வராகவன். இரண்டு பேரும் இணைந்து முழுப்படத்தையும் சுமந்து செல்கின்றனர். இவர்களைத் தவிர, 'ஆடுகளம்' முருகதாஸ், வினோத் முன்னா,'அசுரன்' ஜேகே, விஜய் முருகன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு படத்துக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

நான் லீனியர் பாணியில் பயணிக்கும் கதையை சின்ன சின்ன டைட்டில் மூலம் பாகம் பாகமாக விவரிக்கிறார் இயக்குநர். அத்தோடு பழிவாங்கும் உணர்வை நமக்கும் சேர்த்து கடத்துவதால் படத்துடன் எளிதாக ஒன்ற முடிகிறது. கீர்த்தி சுரேஷ் குற்றவாளிகளை கொல்லும் காட்சிகளில், நமக்கும் அவருக்கு இருக்கும் அதே பழிவாங்கும் உணர்ச்சி ஒட்டிக்கொள்வது திரைக்கதையின் பலம். வழக்கமான பழிவாங்கும் கதையை அதன் திரைக்கதை வாயிலாகவும், படத்தின் மேக்கிங் மூலமாகவும் கவனிக்கவைக்கிறார் இயக்குநர். இடையில் குவென்டின் டாரான்டினோ படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வும் சிலருக்கு எழலாம்.

கதை சொல்லும் பாணியை அழகாக்குவதே அந்த ஃப்ரேம்கள்தான். அடிக்கடி வரும் சிங்கிள் ஷாட் காட்சிகள், ப்ளாக் அண்ட் ஒயிட் ஃப்ரேம்கள், ஒயிடு ஆங்கிள் ஷாட்ஸ் என யாமினி யக்ஞமூர்த்தியின் ஒளிப்பதிவு தரம். ரத்தம் தோய்ந்த கத்தியில் சாம் சிஎஸ்-சின் இசையும் ஒட்டிக்கொண்டு, காட்சிக்களுக்கான உணர்வை கடத்த உதவுகிறது. நாகூரான் ராமசந்திரன் எடிட்டிங், சவுண்ட் எஃபெக்ட் என தொழில்நுட்ப ரீதியாக எந்த குறையுமில்லாமல் படம் பயணிக்கிறது.

சாதிய பாகுபாட்டை மையமாக வைத்து நகரும் இந்தப் படத்தில், ஒரு பெண் வேலைக்கு செல்வதையும், போலீஸாக இருப்பதையும் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஆண், பெண் வேறுபாடும் பேசப்படுகிறது. கொலையாளிகளைப் பொறுத்தவரை, கீர்த்தி சுரேஷை பெண் என்ற அடிப்படையில், அசால்ட்டாக கடக்கும் ஆண்மையவாதிகளாக காட்சிப்படுத்தபடுகிறார்கள். ஆணாதிக்கம் மற்றும் சாதிவெறியின் இருமுனைச் சுமைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும் படம் விளக்குகிறது.

மன உறுதிமிக்க அடல்ட் ஆடியன்ஸை குறிவைத்து அருண் மாதேஸ்வரன் தனது 'ராக்கி', 'சாணிக் காயிதம்' படங்கள் மூலமாக திரைத்துறையில் தனக்கான அடையாளத்தை நிறுவியிருக்கிறார். வன்முறையைக் காட்சிப்படுத்துவதில் தனித்துவ பாணியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதிலும் கவனமும் பெற்றிருக்கிறார்.

FOLLOW US

WRITE A COMMENT

x