முதல் பார்வை: ஓ மை டாக் - குழந்தைகளுக்கான உத்வேக திரை விருந்து!


முதல் பார்வை: ஓ மை டாக் - குழந்தைகளுக்கான உத்வேக திரை விருந்து!

மற்ற எல்லா உயிரினங்களையும் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த உலகில் வாழ அனைத்து உரிமைகளும் உண்டு. அன்பும், அரவணைப்பும் அவர்களின் வெற்றிக்கான அடிகோல்கள் என்பதுதான் 'ஓ மை டாக்' படத்தின் ஒன்லைன்.

சர்வதேசப் போட்டிகளுக்கு நாய்களை தயார் செய்து, சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவதை கௌரவமாக நினைக்கும் ஊட்டியின் மிகப் பரிய தொழிலதிபர் வினய். அவரது சைபீரியன் ஹஸ்கி ஒன்று கண் பார்வையில்லாமல் பிறக்க, அதை கொல்ல முடிவெடுக்கிறார். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிய, அந்த நாய் அர்னவ் விஜயிடம் தஞ்சமடைகிறது. இறுதியில் அந்த சைபீரியன் ஹஸ்கி, காலம் கடந்து வினய்க்கே வினையாக மாறுவதுதான் 'ஓ மை டாக்'.

அருண் விஜயின் மகன், 'அர்னவ் விஜய்' க்கு இந்தப் படம் ஒரு நல்ல தொடக்கம். நடிப்பில் அவர் இன்னும் நிறைய தூரம் கடக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும், அவரது வயதுக்கான நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். அடுத்ததாக அருண் விஜய், வழக்கமான ஹீரோயிச கதாபாத்திரத்திலிருந்து விலகி நிற்கும் பொறுப்பான தந்தை. கண்ணாடியும், தாடியுமாக குடும்பத் தலைவனுக்கான கெட்டப்பில் ஈர்க்கிறார். அருண் விஜய்க்கு தந்தையாக விஜயகுமார். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்களையும் திரையில் காணமுடிகிறது. மஹிமா நம்பியார் மனைவியாகவும், தாயாகவும், மருமகளாகவும், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் எந்தக் குறையுமில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

வில்லனாக வரும் வினய்க்கு ஒரே பிரச்சினை, அவரது தமிழ் உச்சரிப்புதான். பெரிதாக எதற்கும் அலட்டிக்கொள்ளதாக உடல்மொழியில் கவனம் பெறும் வினய், பெரிய அளவில் குழந்தைகளை மிரட்டவில்லை. இவர்களைத் தவிர்த்து மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்டவர்களும், மற்ற குழந்தைகளும் தேவையான நடிப்பை வெளிப்படுத்திருகின்றனர். படத்தில் 'சிம்பா'-வாக வரும் சைபீரியன் ஹஸ்கி நாய்க்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

'ஊனமாக இருந்தால் இந்த உலகத்தில் வாழத் தகுதியில்லை என்பது முற்றிலும் தவறு. அன்பிருந்தால் எதையும் சாதிக்க முடியும்' என்ற வசனம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

தமிழில் நாய்க்கும் மனிதனுக்குமான உறவு குறித்து பேசும் படங்கள் குறைவுதான். அந்த வகையில், 'ஓ மை டாக்' ஒரு முக்கியமான முயற்சி. 'மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, மாற்றுத்திறனாளிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த உலகில் வாழ அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு' என்ற கருத்தை கதைக்களமாக எடுத்துக்கொண்டதற்காகவே அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகத்தை பாராட்டலாம். ஆனால், இயக்குநர் தான் எடுத்துக்கொண்ட நோக்கத்தை பார்வையாளர்களிடம் இன்னும் அழுத்தமாக கொண்டு சேர்த்திருக்கலாம் என தோன்றுகிறது.

சிம்பாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதை படத்தின் தொடக்கத்திலேயே நம்மால் கணித்து விட முடிகிறது. அப்படியிருக்கும்போது, அந்த வெற்றியை சுவாரஸ்யமான காட்சிகளால் திரைக்கதையாக்குவதுதான் இயக்குநருக்கான சவால். அதில் சரோவ் சண்முகம் தடுமாறியிருக்கிறார். படத்தில் வரும் சண்டைக்காட்சி அருண் விஜய்க்காகவே சேர்க்கப்பட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங். தவிர்த்திருக்கலாமே!

நாய்க்கான பார்வை குறைபாடு, அவற்றிற்கு வழங்கும் பயிற்சிகள், அதைப் பயிற்சிகளுக்கு பழக்கப்படுத்தும் விதம் என செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கும், அதை நேசிப்பவர்களுக்குமான படமாகவும், குழந்தைகான படமாகவும் இருக்கும் இதில், சைபீரியன் ஹஸ்கிக்கு பதிலாக உள்நாட்டு நாய்களை தேர்வு செய்திருக்கலாமே என்ற பார்வையும் இருக்கிறது. அது இன்னும் படத்துடன் ஒன்றிட உதவியாக இருந்திருக்கும்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஊட்டியின் சீதோஷ்ண நிலையை நமக்கு கடத்துகிறது. அதேபோல, நாய்களுக்கான அவரது ஃப்ரேம்கள் ஈர்க்கிறது. நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை ஓகே ரகம். மேகநாதன் படத்தொகுப்பு தொடர்ச்சிக்கு உதவுகிறது.

ஓட்டுமொத்தமாக 'ஓ மை டாக்' குழந்தைகள் கோடையில் ரசித்து மகிழ்வதற்கான படைப்பு!

FOLLOW US

WRITE A COMMENT

x