ஆங்கிலேயர் கையிலிருந்து விடுப்பட்டு அரசியல்வாதியிடம் சிக்கியிருக்கும் சிஸ்டத்தை கேள்வி எழுப்பும் முயற்சிதான் 'டாணாக்காரன்'.
காவலர் கனவை சுமந்துகொண்டு காவல்துறை பயிற்சிப் பள்ளிக்குள் இளைஞர்கள் கூட்டம் ஒன்று அடியெடுத்து வைக்கிறது. அவர்களுடன், 1982-ம் ஆண்டு நடந்த ஆட்சிக் கலைப்பினால், காவல்துறைக்கு தேர்வாகியும் ஆணை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்ட வயதான சிலரும் இணைகின்றனர். இந்த இரண்டு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சியில் காட்டப்படும் பாரபட்சம், காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் அநீதிகள், அதை எதிர்ப்பவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள் என விரிகிறது 'டாணாக்காரன்' திரைக்கதை.
விக்ரம் பிரபுவுக்கு இது ஒரு நல்ல கம்பேக். படத்துக்கு என்ன தேவையோ, அந்த உழைப்பை சமரசமில்லாமல் கொட்டியிருக்கிறார். அவரது மெனக்கெடலை திரையில் காணமுடிகிறது. சில க்ளோசப் காட்சிகளில் நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. மற்றபடி, 'டாணாக்காரன்' அவரது கேரியரில் முக்கியமான படமாக அமையும் என்பதில் மாற்றமில்லை. நாயகியாக அஞ்சலி நாயர். சீரியஸாக சுற்றும் விக்ரமை துரத்தி துரத்தி காதலிக்கிறார். அவருக்கும் விக்ரம் பிரபுவுக்குமான காதல் காட்சிகள் ஒட்டவேயில்லை. செயற்கையான அவரது கதாபாத்திரம் படத்தில் துருத்திக்கொண்டு நிற்கிறது. ஆனால் லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மது சூதன் ராவ் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
'டாணாக்காரன்' படத்துக்காக மிக முக்கியமானதும் வித்தியாசமானதுமான கதைக்களத்தை தேர்வு செய்திருக்கும் இயக்குநர் தமிழ், படம் தொடங்கியதிலிருந்து எந்தவித விலகலும் இல்லாமல் கதைக்குள் அழைத்துச் செல்கிறார். அந்த வகையில் திரைக்கதை ஆரம்பம் விறுவிறுப்பாக நகர்கிறது. காவல் நிலையத்தில் நடக்கும் கொடூரங்களை மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்கு 'காவல்துறை பயிற்சிப் பள்ளி'யில் நடக்கும் பிரச்சினைகளையும், நடைமுறைச் சிக்கல்களையும் ஆழமாக காட்சிப்படுத்திய விதம் மிகச் சிறப்பு.
சில இடங்களில் சற்று பிசகியதால் ஆவணப்படத்துக்கான உணர்வு ஏற்பட்டாலும், அது பெரிய அளவில் தொந்தரவு செய்யவில்லை. காவலர் பயிற்சிப் பள்ளியில் நிகழும் சாதியப் பாகுபாடு, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட காட்சிகள் படத்தின் கனத்தைக் கூட்டுகின்றன. அதேபோல படத்தில், 'காவல்துறை அதிகாரி என்பவன் சமூகத்தின் மருத்துவர்', 'சிங்கம், புலி, நாய் அப்டின்னு எல்லா முகமூடியும் நம்மகிட்ட கொடுத்துடுவாங்க. யார்கிட்ட என்ன முகமூடி போடணும்னு யோசிக்கிறதுக்குள்ள போலீஸ் வாழ்க்க முடிஞ்சிரும்' போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.
காவலர் பயிற்சிப் பள்ளியைச் சுற்றி நிகழும் திரைக்கதையில் இருந்த விறுவிறுப்பு, பின்னர் இரு நபர்களுக்கு இடையிலான மோதலாக மாறும்போது வழக்கமான யூகிக்கக் கூடிய காட்சிகளுடன் சற்றே தொய்வடைகிறது. அதேபோல, படத்தின் பிற்பகுதியில் பலவீனமான சில காட்சிகளால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. விக்ரம் பிரபுவின் ஃப்ளாஷ்பேக் பெரிய அளவில் எந்தக் தாக்கத்தையும் ஏற்படுத்தாதது, அடுத்தடுத்த காட்சிகள் மீதான அழுத்தத்தை குறைத்துவிடுகிறது. அதேபோல, லாலுக்கு கொடுக்கப்படும் அதீத பில்டப் வசனங்கள் தொடக்கத்தில் விறுவிறுப்பை கூட்டினாலும், அடுத்தடுத்த காட்சிகள் சோர்வைத் தருகின்றன. லால் - விக்ரம் பிரபு போட்டியின் இறுதிக் காட்சிகள் செயற்கையாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை.
இதையெல்லாம் கடந்து, படத்தின் மொத்தக் கதையையும் ஒரு காட்சியில் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. காவல்துறை அதிகாரியால் நடப்பட்ட ஒரு மரத்தை காக்கும் பொறுப்பிலிருக்கும் காவலர், மரம் நடப்பட்ட காரணம் கடந்தும், தேவையே இல்லாமல் அந்தப் பணியை தொடர்ந்துகொண்டிருப்பார். சொல்லப்போனால் படமும் அதைத்தான் பேசுகிறது. சுதந்திரப் போராட்டம் குறித்து சிந்திப்பதை தடுக்கவும், மக்களை ஒடுக்கவும், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட காவல்படையும், அதன் பயிற்சி முறைகளும் எவ்வித கேள்வியுமில்லாமல் தொடர்ந்து வருவதை மேற்கண்ட காட்சியின் வழியே உணர்த்திருப்பது சிறப்பான முயற்சி.
எல்லாவற்றையும் தாண்டி தமிழ் சினிமாவுக்கே உண்டான க்ளிஷேக்கள் இந்தப் படத்திலும் தொடர்வது வேதனை. 'எனக்கு 5 பொம்பள புள்ளைங்கப்பா வேற வழியில்ல' என எம்.எஸ்.பாஸ்கர் பேசுவதும், விக்ரம் பிரபு பேட்ஜிலிருக்கும் ஒருவர், 'எனக்கு பொம்பள பிள்ள என்ன பண்றது தெரியலை' என பேசும் வசனங்கள் பெண்பிள்ளைகள் பெரும் சாபத்துக்குரியவர்கள் என்பதை தொடர்ந்து மறைமுகமாகவோ, நேரடியாகவோ சொல்லிக்கொண்டேயிருக்கிறது. ஆண்பிள்ளையாக இருந்திருந்தால் ஒருவேளை எம்.எஸ்.பாஸ்கர் வேலையை தைரியமாக ராஜினாமா செய்திருப்பார்(?!) போல. அதேபோல, முருகன் கதாபாத்திரத்தின் உடலமைப்பை மையப்படுத்தி, 'எப்பையும் சாப்டுக்கிட்டே இருக்க எனக்கு கொஞ்சம் கொடு' என்பதும், 'அவன் இருந்தா நம்ம தோத்துடுவோம்டா' என பருமனான தேகம் கொண்டவர்களை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் புண்படுத்தப்போகிறோம்?
தவிர, படத்திற்கு மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்க்கிறது. ட்ரோன்ஷாட்களும், ஃபோகசிங் முறையும் ஈர்க்கிறது. லால் வரும் இடத்தில் பின்னணி இசை ஓகே என்றாலும், பெரும்பாலான காட்சிகளில் ஜிப்ரான் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பிலோமின் ராஜின் படத்தின் நீளத்தை தயவின்றி குறைந்திருக்கலாம். இப்படி சில குறைகள் தென்பட்டாலும் 'டாணாக்காரன்' காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சிக்கல்களை பேசியதற்காக மட்டுமல்ல... அதிகம் அறியப்படாத கதைக்களத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் சென்ற வகையிலும் கவனத்துக்குரிய முக்கியப் படைப்பாகிறது.
இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
WRITE A COMMENT