ஓடிடி திரை அலசல் | Sharmaji Namkeen - உப்பு, புளி, காரம் கலந்த ஒரு சுவைமிகு திரை அனுபவம்!


ஓடிடி திரை அலசல் | Sharmaji Namkeen - உப்பு, புளி, காரம் கலந்த ஒரு சுவைமிகு திரை அனுபவம்!

ஷர்மாஜி நம்கீன்... பாலிவுட்டின் மூத்த நடிகரான மறைந்த ரிஷி கபூர் நடித்த கடைசிப் படம் இது. படத்தின் தொடக்கத்திலேயே திரையில் தோன்றும் ரன்பீர் கபூர், "எனது தந்தையை இந்தப் படத்தின் மூலம் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படப்பிடிப்பின் நடுவில் எனது தந்தை நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, அந்தக் கதாப்பாத்திரத்தை அவர் இல்லாமல் உருவாக்க ,விஎஃப்எக்ஸ், பிராஸ்தெடிக் மேக்கப் என்பது உள்ளிட்ட பல வழிகளில் முயறிசித்தோம். ஆனால், அவையெதுவும் சாத்தியம் இல்லாமல் போனது. இந்நிலையில், எஞ்சிய காட்சிகள் நடிகர் பர்வேஷ் ராவலை வைத்து எடுக்கப்பட்டது. இதனை செய்ய ஒப்புக்கொண்ட அவருக்கு நன்றி" என்று கூறுகிறார்.

இது முடிந்த கணத்தில் துள்ளலான இசையுடன் தொடங்குகிறது படத்தின் டைட்டில் கார்டு. ஹோம் அப்ளையன்சஸ் கம்பெனி ஒன்றில், வீஆர்எஸ் கொடுக்கப்பட்ட 3 ஊழியர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. சந்தடிசாக்கில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிற்றுண்டிகள் மேல் உட்காரும் ஈக்களை ஊழியர் ஒருவர் விரட்டியடிக்கும் காட்சியும் காட்டப்படுகிறது. பிரிவு உபசார விழாவில் வழங்கப்பட்ட பரிசு, பூங்கொத்துடன் ஷர்மா வெளியேறும்போது, ரேடியோவில் டெல்லியின் வானிலை குறித்த அறிவிப்பில், 50 வயதுக்கு மேற்பட்டோர் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அங்கிருந்து தொடங்குகிறது வீஆர்எஸ் கொடுத்தனுப்பப்படும் பிர்ஜ் கோபால் ஷர்மாவின் புதிய வாழ்க்கை.

மேற்கு டெல்லியில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத் தலைவரான பிர்ஜ் கோபால் ஷர்மாவின் (ரிஷி கபூர்) மனைவி வீட்டில் போட்டோவாக தொங்குகிறார். இந்த தம்பதிக்கு சந்தீப் சர்மா என்ற ரின்கூ, வின்சி என்ற இரண்டு மகன்கள். சமையல் கலையில் தேர்ந்த பிர்ஜ் கோபால் ஷர்மா தனது மகன்களுக்காக சுவையான உணவுகளை சமைத்து தருவதோடு, அவர்களது நலன்களிலும் கவனம் செலுத்துகிறார்.

அதுநாள் வரை வேலைக்குச் சென்று திரும்பிய ஷர்மாவுக்கு தனியாக வீட்டில் அமர்ந்திருப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. கடைக்குச் செல்வது, மகன்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது, நடைபயிற்சி செய்வது, டிவியில் சீரியல் பார்ப்பது என்ற தினசரி வாழ்க்கை அவரை மிகவும் சலிப்படையச் செய்கிறது. இதுகுறித்து ஷர்மா அவருடைய நண்பர்களிடம் பேசும்போது பல்வேறு ஐடியாக்களைக் கொடுக்கின்றனர். ஆனால், அந்த ஐடியாக்களுக்கு ஷர்மாவின் மகன்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஷர்மாவை ஓய்வெடுக்கவும், யோகா செய்யவும் அறிவுரை கூறுகின்றனர். இதில் ஷர்மாவுக்கு துளியும் உடன்பாடில்லை. ஷர்மா, மகன்களின் விருப்பப்படி நடந்து கொண்டாரா? அல்லது நண்பர் கொடுத்த ஐடியாவை பின்பற்றினாரா? இதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதிலிருந்து ஷர்மாவின் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதுதான் மொத்தப்படமும்.

1 மணி நேரம் 20 நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படம் பேச வந்த விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதியவர்களால் இனி எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையோடு மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயத்தை இந்தப் படம் லேசாகப் பேசியிருக்கிறது. பொதுவாகவே, ஒரு குடும்பத்தில் தனது சம்பாதியத்தால் நிர்வகிக்கக்கூடிய நிலையை எட்டிவிட்ட பிள்ளைகள், பெற்றோர்கள் தங்களது பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இதனால், பெற்றோர்களின் சுயமரியாதை எந்தளவுக்கு பாதிக்கப்படும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. வயதான பெற்றோர் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவர்களது குழந்தைகள் தீர்மானிக்க முயல்வதால் ஏற்படும் முரண்களை நகைச்சுவையோடு இந்தப் படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சென்று பணி ஓய்வு பெற்ற ஷர்மாவுக்கே இந்த நிலை என்றால், உடல்நலன் பாதிக்கப்பட்டு முற்றிலும் பிள்ளைகளின் சம்பாத்தியத்தை நம்பி வாழும் முதியவர்களின் நிலையை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அதுவும் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, முதியவர்கள் இல்லாத உலகமாக மாறி வருவது நிகழ்காலத்தின் துயரம். அந்த சமயத்தில், விமானம், ரயில், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாடகை வீடுகளில் குடியேற முதியவர்கள் இருக்கும் குடும்பங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என வயது முதிர்ந்தவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகள் ஏராளம்.

இருந்தாலும், இந்தியாவில் இதுபோன்ற படங்களின் தேவை இன்னும் அதிகமாகிறது. காரணம், உலகமயமாக்கலுக்குப் பின்னர், தனிக்குடும்ப வாழ்க்கை முறை உலகம் முழுவதும் அதிகரித்திருந்தாலும், இந்திய சமூகத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இன்னும் முழுமையாக சிதைந்துப் போகவில்லை. ஒவ்வொரு நிமிடமும், மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ ஒரு முதியவர் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறினாலும், இந்திய மக்கள் தொகையில், மூத்த குடிமக்களுக்கு ஒரு முக்கியப் பங்கு தொடர்ந்து இருந்தே வருகிறது. தேர்ந்த அனுபவமும், பொறுமையும், நிதானத்தையும் தங்களது குணாதிசயங்களாக் கொண்ட முதியவர்களை சுமையாக கருதாமல், சுகமாக கருத வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தியிருக்கிறது.

விருப்பு, வெறுப்பு உள்ளிட்ட சுயம் சார்ந்த விஷயங்கள் இளமைப் பருவத்தினரைப் போலவே முதியவர்களுக்கும் உள்ளது. அதை புரிந்துகொள்ளவிட்டாலும் கூட பரவாயில்லை, உதாசீனப்படுத்த வேண்டாம் என்பதையும், இளமையில் மட்டுமல்ல முதுமையிலும் கூட தனிமை கொடுமையானது என்பதையும் உரக்கப் பேசியிருக்கிறது. இந்தப் படத்தின் பாதியிலேயே ரிஷிகபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அந்த வேடத்தில் சில காட்சிகளில் பர்வேஷ் ராவல் நடித்துக் கொடுத்துள்ளார். இருவரும் வேறுவேறு நபர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இருந்தாலும், படத்தின் ஆரம்பத்திலேயே அதுகுறித்து கூறிவிடுவதால், பெரிதாக அந்த மாற்றம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இயக்குநர் ஹிதேஷ் பாத்யா இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து எழுத்துப் பணியை சுப்ராதிக் சென் கவனித்துள்ளார். பியூஷ் புதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்னேகா கன்வால்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரிஷி கபூர் சில முக்கியமான வசனங்களை பேசியிருப்பார். "அது என்ன 58 வயதோடு ஓய்வு, அதன்பிறகு மூளை செயல்படுவதை நிறுத்திவிடுகிறதா? அமிதாப் பச்சனுக்கு வயது 78, அவர் இன்னும் நடித்து வருகிறார். டாடா, பிர்லா, அம்பானி போன்றவர்கள் எள்லாம் 58 வயதோடு வேலை செய்யாமல் நிறுத்திவிட்டனரா?"

"நீ என்ன செய்ய வேண்டும் என்பதை குடும்பம் எப்படி தீர்மானிப்பது. யார் சொல்வதையும் கேட்காதே, உனக்கு என்ன செய்ய வேண்டும் என தோன்றுகிறதோ, அதை சந்தோஷமாக செய்."

"என்ன சார் இது, போலீஸ் ஸ்டேஷனா இது. குற்றம் செஞ்சவனை உட்கார வச்சி பேசிக்கிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் போடுவேன் என்று மிரட்டுகிறீர்கள். இதனாலதான் சார் இந்தியா இன்னும் இப்படியே இருக்கு..." என்பன போன்ற வசனங்கள் ரசிக்கும்படியான தெறிப்புகள்.

அமேசான் ஓடிடி தளத்தில் உள்ள இந்தத் திரைப்படம், ரிஷி கபூர் சமைக்கும் தகி பூரி, பிரெட் பக்கோடா, ரஜ்மா, மொமோஸ், சப்பாத்தி, சமோசா, சப்ஜி, தால் போன்றவை கலந்திருக்கும் உப்பு, புளி, காரம் கலந்த ஒரு பீஃல் குட் படமாக உள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x