துல்கர் சல்மான் நடித்து சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள படம் 'சல்யூட்'. இது ஒரு ஸ்லோ பர்னிங் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர். படத்தை பார்த்த பலருக்கும் தோன்றியிருக்கும் கேள்வி நிச்சயம் இதுவாகத்தான் இருந்திருக்கும்: 'இன்னும் எத்தனை போலீஸ் கதைதான் வைத்துள்ளனர் சேட்டன்கள்?'
இதுவரை மலையாளத்தில் வந்திருக்கும் போலீஸ் படங்களை வைத்து மட்டுமே ஒரு பிஎச்டி தீசிஸ் பண்ணலாம் போல. காரணம், அந்தளவுக்கு ஆழமான தேடல், அணுகுமுறை அவர்களது பல வகையான படங்களிலும் தென்பட்டாலும், போலீஸ் கதை சார்ந்த திரைப்படங்களில் அந்த மெனக்கெடல் இன்னும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
அந்த வகையில் 'சல்யூட்' திரைப்படம் பேசியிருப்பது, ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் குற்ற உணர்வு குறித்துதான். ஒரு பாவமும் அறியாத ஆட்டோ டிரைவர் ஒருவர்மீது பொய் வழக்கு ஜோடித்து, சிறையில் அடைத்து, நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தந்துவிட்டு, நிம்மதியாக தூங்கிட முடியுமா என்ன? (அலர்ட்: ஸ்பாய்லர் உண்டு, இக்கட்டுரையில்).
இந்தப் படத்தில் நம்ம அரவிந்த் கருணாகரனுக்கு (துல்கர் சல்மான்) வந்த பிரச்சினையும் அதுதான். தன் அண்ணன் அஜீத் கருணாகரனை (மனோஜ் கே ஜெயன்) பிரமித்துப் பார்த்து அவரையே தன் ஹிரோவாக உருவகித்து, பெரும் கனவோடு போலீஸ் வேலையில் சேர்கிறார் அரவிந்த் கருணாகரன். ஆனால், ஓர் இரட்டைக் கொலை வழக்கில் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தம் காரணமாக , அப்பாவி ஆட்டோ டிரைவர் ஒருவர் மீது பழியைப் போட்டு, அவரையே குற்றவாளியாக்கி, ஆயுள் தண்டனை பெற்றுத் தரும் போலீஸ் குழுவில் இருக்கிறார் அரவிந்த் கருணாகரன். கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மெடல் வேற கொடுக்கப்படுகிறது.
இந்தச் செயல் அவரது மனதுக்கு ஒப்பவில்லை. அரவிந்த் கருணாகரன் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதியை சந்தித்து உண்மையைச் சொல்கிறார். இதனால் அவரது அண்ணன் உள்பட அனைத்து மட்டங்களிலிருந்தும் அவர் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார். இதையெல்லாம் மீறி அந்த அப்பாவி ஆட்டோ ஓட்டுநர் குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதே படத்தின் திரைக்கதை.
பொதுவாகவே போலீஸ் கதை என்றாலே, அந்த யூனிஃபார்மிற்காகவாது நான்கு சண்டைக் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை. பிறகு, அவர் ஒரு நேர்மையான போலீஸ்காரர் என்பதைக் காட்ட பல காட்சிகள் வலிய திணிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தின் வெரி ஃபர்ஸ்ட் ஷாட், சிக்னலில் வெள்ளைக் கோட்டிற்கு பின்னால் ஹீரோ காரை நிறுத்துவார். அவர் நேர்மையான, விதிமுறைகளை மதிக்கும் நபர் என்பதையும் காட்ட இந்த ஒரு ஷாட் மட்டும்தான் படத்தில் வைக்கப்பட்டிருக்கும். இன்னொரு இடத்தில், தான் குடித்த டீக்கு காசு கொடுப்பது போன்ற காட்சி. அவ்வளவுதான்.
துல்கர் ஷல்மான் தனது நடிப்பால் தன்னை நிரூபித்திருக்கும் படம் 'சல்யூட்' . காரணம் சண்டையோ, பாட்டோ இல்லாத ஒரு போலீஸ் கதையில் தனக்கான இமேஜை தனது நடிப்பின் மூலம் மட்டும் வெளிப்படுத்தி ரசிகர்களை திருப்தியடையச் செய்ய வேண்டிய கட்டாயம். இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால், படத்தின் தயாரிப்பாளரும் துல்கர்தான். இந்த சிக்கல்களை எல்லாம் எளிதாகக் கையாண்டு சிறந்த நடிகராகவும், ரசனையுள்ள தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்துள்ளார் துல்கர்.
இந்தப் படத்தில் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் தருணங்களில், துல்கர் முகபாவனைகள் மூலம் சிறப்பானதொரு நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். மனோஜ் கே ஜெயனும் தன் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இவர்களைத் தவிர படத்தில் வரும் அலென்சியர், இந்திரன்ஸ், டயானா பென்டி என பலரும் தங்கள் கதாப்பத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் எழுத்துப் பணிகளை பாபி - சஞ்சய் இணைந்து எழுதியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளராக அஸ்லாம் கே.புரையிலும், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜோயும், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றியுள்ளனர்.
ஸ்லோ பர்னிங் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படம் என்பதால் ஒளிப்பதிவும், பின்னணி இசை கோர்ப்பும் இந்தப் படம் முழுக்க பலம் சேர்க்கின்றன. பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் நடப்பதால், அஸ்லாம் கே.புரையிலின் லைட்டிங் சென்ஸ் ரசிக்கும்படியாக உள்ளது. வாக்கி டாக்கி, டார்ச் லைட், போலீஸ் ஸ்டேஷன், போலீஸ் கேன்டீன், போலீஸ் ஜீப், ராயல் எண்ஃபீல்ட் பைக், க்ரைம் ரெக்கார்ட்ஸ், விசாரணை, க்ரைம் சீன் என இரண்டரை மணி நேரம் நாமும் போலீஸ் ஸ்டேஷனின் ஒரு ஆப்ஜெட்டாகவே மாறிபோய் விடுகிறோம்.
படம் பார்க்கும் பலருக்கும் உதிக்கும் கேள்வி: 'அதெப்படி போலீஸ் நினைத்தால் ஒருவரை குற்றவாளியாக்கிவிட முடியுமா?'.
நிச்சயமாக முடியும். காவல்துறை நிலையாணை (Police Standing Order Procedure) எண் 764 -ன்படி, தொடர்ந்து குற்றங்கள் புரிபவர் அல்லது குற்றம் செய்ய உதவி புரிபவர் என காவல்துறை கருதினால், அவரைக் குற்றவாளி பட்டியலில் சேர்த்து அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கலாம்.
தமிழகத்தில் காவல்துறை ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட நபரை தொடர்ந்து கண்காணிக்கவும், அந்த நபர் இரவு வீட்டில் தங்கியிருக்கிறாரா என்பதை இரவு எந்நேரமானாலும் வீட்டின் கதவை தட்டி தெரிந்துகொள்ளும் உரிமை போலீசாருக்கு உண்டு. இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 1963-ஆம் ஆண்டே வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை என்ற பெயரில் நள்ளிரவு வருகையை ரத்து செய்தது. பின்னர் 1975-ம் வருட தீப்பில், தனிமனித சுதந்திரம், பொது நலனை ஒப்பிட்டு போலீசாரின் கண்காணிப்பு அதிகாரத்தை உறுதி செய்தது. மீண்டும் இந்த அதிகாரங்கள் குறித்து 1981-ம் ஆண்டு மறுபரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், குற்றவாளி பட்டியல் தயாரிக்கும் விதிமுறைகளை உறுதி செய்து, போலீசார் இந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறலாம் என உத்தரவிட்டது.
அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிவரும் இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்களின் கடைசி புகலிடமாய் இருப்பது நீதிமன்றங்கள் மட்டும்தான். அரவிந்த் கருணாகரன் போன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சி இன்னும் பல அப்பாவி முரளிகளுக்கு விடுதலை பெற்றுத் தரலாம். அத்தகைய அறச் சிந்தனைக்காக துல்கர் சல்மான் மற்றும் அவரது குழுவிற்கு மீண்டும் ஒரு "சல்யூட்".
WRITE A COMMENT