பழமைவாத நெறிகள் எதுவும் பெண்களைத் தீர்மானிக்கும் காரணிகள் இல்லை என்பதே உணர்த்துவதே 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'.
ஒரு பழமைவாதக் குடும்பத்தின் பின்னணி கொண்ட இளம் பெண் அக்சரா ஹாசன். தனக்கென்று விருப்பம் எதுவும் இல்லாமல், தனது தாய் சொல்வதை கேட்டு நடக்கிறார். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் அக்சரா திருமணத்திற்கு முன் தனது காதலுடன் உறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார். இதற்காக பாலுறவு குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தனது இரு தோழிகளிடம் ஆலோசிக்கும் அவர், தோழிகள் ஆலோசனைப் படி நடந்தரா, அவரின் வாழ்க்கையில் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்ற குணங்கள் அணுகப்படுவது எப்படி என்பதையே இப்படம் பேசுகிறது.
பவித்ரா என்கிற பாத்திரத்தில் அக்சரா ஹாசன் நடித்துள்ளார். தனக்கு இசை பிடிக்குமா பிடிக்காதா என்பதுகூட தெரியாமல் தனது பாட்டியிடம் கர்நாடக இசையை கற்றுக்கொள்வதும், தோழிகளுடன் உரையாடலில் ஈடுபடுவதும் என நல்ல முயற்சியை எடுத்துள்ளார். மால்குடி சுபா, உஷா உதுப், சுரேஷ் மேனன் போன்ற லிமிடெட் கேரக்டர்கள் என்றாலும், தோழிகளாக நடித்த அஞ்சனாவும் ஜெசிகாவும் ஸ்கிரீன் பிரசன்ஸால் தனித்து நிற்கிறார்கள். தோழிகள் மூவருக்கும் இடையேயான உரையாடல்கள் அழுத்தமானவை.
சுஷாவின் இசையும், ஸ்ரேயா தேவ் துபேயின் ஒளிப்பதிவும் இந்த மாதிரியான தனித்த கதை சொல்லலுக்கு துணை நிற்கிறது. படத்தை இயக்கிருப்பது ராஜா ராமமூர்த்தி. இவருக்கு இது முதல் படம். அதன்படி இதுவரை பேசாத விஷயங்களை பேச வேண்டும் என நினைத்து இந்தக் கதையை தேர்ந்தெடுத்துள்ளாரா எனத் தெரியவில்லை.
'நல்ல' பெண்ணுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு பண்புகள் உண்டு என்கிறது பழங்கால நெறிகள். இதில் அச்சம் என்றால் பயம்; நாணம் என்றால் வெட்கம்; மடம் என்றால் ஒரு அடக்கம், அதாவது யாரேனும் ஒன்றை கூறும்போது அவை தெரிந்தே இருந்தாலும் ஒரு பெண் அதை தெரியாதது போல் காட்டிக்கொள்ளும் அடக்கம். இதேபோல் பயிர்ப்பு, உத்தேசமாக இதை உறவு சார்ந்த ஒழுக்கம் என்பதைத்தான் குறிக்கிறார்கள்.
ஆணாதிக்க பின்னணியில் இருந்த வந்த இந்தக் கருத்துக்கள் எப்படி பெண்களைத் தீர்மானிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது இப்படம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெண்களின் ஆசையையும், அவர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில் எந்தத் திரைப்படங்களும் பெரிதாக இல்லை. இப்படம் அதுதொடர்பாக அலசுகிறது. ஓர் எளிய கதையை விவரிக்க முயற்சி எடுத்ததற்காக இப்படத்துக்கு பாராட்டுக்கள். பொதுபுத்தியில் நிலவும் நல்ல பெண் - கெட்ட பெண் தொடர்பான கட்டுக்கதைகளை முற்போக்கான முறையில் உடைத்து பேசுகிறது.
அதேநேரம், இயக்குநரின் கருத்து சரிதான். ஆனால் அந்தக் கருத்தை சொல்ல தேர்ந்தெடுத்த விதம் கதையின் ஓட்டத்தை தள்ளாட வைக்கிறது. படம் பார்க்கையில் ஒருவித வினோத உணர்வு தொற்றிக்கொள்வதுடன் மெதுவாக நகர்வதும் அயர்ச்சியை கொடுக்கிறது. மேலும், அக்சராவும் அவரின் பெற்றோருக்கும் இடையேயான உரையாடலும் சரி, அக்சரா தனது தோழியுடன் கோபித்து கொள்ளும் காட்சிகளிலும் சரி மேலோட்டமாக செல்கிறது. படத்தில் அக்சராவின் சுற்றுப்புறமாக காண்பிக்கப்படுபவையும் நம்பும்படியாக இல்லை.
தனது குடும்பத்துக்கு, குறிப்பாக தனது தாய்க்கு பயந்த பெண், பல வருடங்கள் தனக்கும் தன் குடும்பத்துக்கும் பழக்கமுள்ள கடைக்கு இயல்பாகச் சென்று ஆணுறை வாங்குவது போன்ற காட்சி வைப்பதன் நோக்கம் சரியானதாக இருந்தாலும், அதை செயற்கையாகக் கையாண்ட விதம் துருத்தி நிற்கிறது. அதேபோல், அக்சரா ஏன் எப்போதும் பச்சை நிற உடையில் இருக்கிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளது.
மொத்தத்தில் ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையின் சிக்கலான கட்டங்களை சித்தரிக்கும் ஒரு தீவிர முயற்சியாக இருந்தும், கதை சொல்லல் பாணியால் மனதில் நிற்காமல் செல்கிறது 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'.
இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
WRITE A COMMENT