முதல் பார்வை: அன்பறிவு | அரைச்ச மாவு புளிச்சுப் போன சினிமா!


முதல் பார்வை: அன்பறிவு | அரைச்ச மாவு புளிச்சுப் போன சினிமா!

இரட்டை வேடங்களில் ஹிப் ஹாப் ஆதி, ’மெர்சல்’, ‘வேல்’ போன்ற ஹிட் படங்களை நினைவூட்டிய ட்ரெய்லர் என ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேரடியாக ஓடிடியில் வெளியாகிருக்கும் ’அன்பறிவு’ எப்படியிருக்கிறது?

மதுரை பக்கத்தில் இருக்கும் அரசகுளம் என்ற கிராமத்தில் பெரிய தலைக்கட்டாக வாழ்ந்து வருபவர் முனியாண்டி (நெப்போலியன்). அவரது ஒரே மகள் லட்சுமி (ஆஷா சரத்). இளம் வயதில் தன்னுடன் கல்லூரியில் படிப்பவரான பிரகாசத்தை (சாய் குமார்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். முதலில் எதிர்க்கும் நெப்போலியன் பின்னர் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். நெப்போலியனின் அடிப்பொடியாக இருக்கும் பசுபதி (விதார்த்) நெப்போலியனுக்கும் அவரது மருமகனான சாய் குமாருக்கும் இடையே கொளுத்திப் போட்டு சண்டையை ஏற்படுத்துகிறார். தனது இரட்டைப் பிள்ளைகளில் ஒரு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் சாய் குமார். போகும்போது வீட்டில் இருக்கும் நகை, பணத்தை அவர் எடுத்துச் சென்றுவிட்டதாக நெப்போலியனிடம் பொய் சொல்லி ஒரு பெரிய கலவரத்தையே ஏற்படுத்துகிறார் விதார்த்.

தாத்தா நெப்போலியனிடமும், தாய் ஆஷா சரத்திடமும் வளரும் ஒரு குழந்தை அன்பு (ஹிப் ஹாப் ஆதி). ஊரில் அடிதடிகளில் ஈடுபட்டுக் கொண்டு, கட்டப் பஞ்சாயத்து செய்பவராக வளர்கிறார். வீட்டை விட்டு வெளியேறிய சாய் குமார் கனடாவில் இப்போது ஒரு பெரிய தொழிலதிபர். அவரிடம் வளரும் அறிவு (இன்னொரு ஹிப் ஹாப் ஆதி) நகரத்து மாடர்ன் இளைஞராக இருக்கிறார். எதிர்பாராத தருணத்தில் இந்தியாவில் இருக்கும் தனது தாயையும், அண்ணனையும் பற்றித் தெரிந்துகொள்ளும் அறிவு அவர்களைத் தேடி கிராமத்துக்கு வருகிறார். இரு குடும்பமும் மீண்டும் இணைந்ததா? என்பதே ‘அன்பறிவு’ சொல்லும் கதை.

எம்ஜிஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ தொடங்கி சூர்யா நடித்த ‘வேல்’ படம் உட்பட பல படங்களில் பார்த்த ‘இடம் மாறும் இரட்டையர்’ பாணி கதைதான். எனினும் அந்தப் படங்களில் இருந்த திரைக்கதை ஜாலமோ, சுவாரஸ்யமோ, புதுமையோ இந்தப் படத்தில் துளியும் இல்லை. கமர்ஷியல் குடும்பப் பொழுதுபோக்கு சினிமா என்றாலே கிராமம், ஒரு பெரிய குடும்பம், விட்டேத்தி நாயகன், ஊறுகாய் ஹீரோயின், கார்ப்பரேட் அல்லது அரசியல்வாதி வில்லன் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இந்த விதிகளை இம்மி பிசகாமல் கடைப்பிடித்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் ராம்.

முதல் முறையாக இரட்டை வேடங்களில் ஹிப் ஹாப் ஆதி. முந்தைய படங்களைக் காட்டிலும் இதில் நடிக்க முயன்றுள்ளார். சென்டிமென்ட் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. மற்றபடி இரண்டு கதாபாத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. மதுரை வட்டார மொழியில் இழுத்து இழுத்துப் பேசினால் அன்பு, வார்த்தைகளுக்கு இடையே சம்பந்தமே இல்லாமல் ஆங்கிலம் கலந்து பேசினால் அறிவு. ஹேர் ஸ்டைல் கூட இருவருக்கும் அப்படியே.

வழக்கமான பொழுதுபோக்கு குடும்ப சினிமாக்களில் என்ன வேலையோ அதே வேலைதான் இதிலும் நாயகிகளுக்கு. இவர்கள் தவிர நெப்போலியன், ஆஷா சரத், சாய் குமார், தீனா, ரேணுகா என அனைவரும் படத்தில் இருக்கிறார்கள் அவ்வளவே. வில்லனாக நடித்துள்ள விதார்த் தன்னால் இயன்ற அளவு கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவரச் செய்திருக்கிறார்.

படத்தின் மையக் கரு இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் சாதிப் பிரச்சினை. ஆனால், படத்தில் எந்த இடத்திலும் ‘சாதி’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. மாறாக சில இடங்களில் ‘கொள்கை’ சில இடங்களில் ஊர் பிரச்சினை அல்லது குடும்பப் பிரச்சினையாக சொல்லப்படுகிறது. ஆரம்பக் காட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்களை மட்டம் தட்டும் விதமான வசனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. போகிற போக்கில் விஷக்கருத்துகளை நைஸாகத் தூவி வைத்திருக்கிறார் இயக்குநர். கனடாவில் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறியிருக்கிறார் சாய் குமார். ஆனால் படத்தின் க்ளைமாக்ஸில் தான் இந்த நிலைக்கு வந்திருப்பதற்கு நெப்போலியன் தன்னை சரிசமமாக நடத்தி தன்னை அவரது வீட்டுக்குள் விட்டதுதான் என்று மேடையில் பேசுகிறார். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சரி இதைத் தாண்டி ஒரு சினிமாவாக ‘அன்பறிவு’ நியாயம் செய்கிறதா என்றால் அதுவும் இல்லை. படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். படத்துக்கு சம்பந்தமே இல்லாத காட்சிகள். படத்தின் வில்லன் விதார்த் ஒரு அமைச்சர். ஆனால் அவருக்கு நெப்போலியன் குடும்பப் பிரச்சினைகளை டீல் செய்வது, ஊரில இருக்கும் சின்ன பசங்களுக்கு இடையே பஞ்சாயத்து செய்வது மட்டும்தான் வேலை. க்ளைமாக்ஸ் காட்சியில் நெப்போலியன் குடும்பத்தினர் மேடையில் ஏறி தங்கள் குடும்பப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பதெல்லாம் பொறுமையை சோதிக்கும் செயல்.

படத்தின் ப்ளஸ் என்றால் அது மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மட்டுமே. மதுரையைக் காட்டும்போது சரி, கனடா தொடர்பான காட்சிகளில் சரி உறுத்தல் இல்லாத வகையில் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியை எதிரிகளிடமிருந்து ஜல்லிக்கட்டு காளை ஒன்று காப்பாற்றும் காட்சி ஒரு உதாரணம். அந்தக் காட்சியில் லாஜிக் மருந்துக்கும் இல்லையென்றாலும் ஒளிப்பதிவு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஆதியின் பின்னணி இசையில் குறை சொல்ல எதுவுமில்லை. யுவன் குரலில் ‘அரக்கியே’ பாடல் மட்டும் ஓகே ரகம். மற்றவை ஈர்க்கவில்லை.

குடும்பப் பொழுதுபோக்கு சினிமா என்ற பெயரில் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஒரே போன்ற கதையை எடுத்துக் கொண்டு அதில் இம்மியளவு கூட சுவாரஸ்யமில்லாமல் அரைத்த மாவையே அரைத்துப் பார்ப்பவர்களை டார்ச்சர் செய்வதை நிறுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

போன பொங்கலுக்கு ஒரு ‘பூமி’ என்றால் இந்தப் பொங்கலுக்கு ஒரு ‘அன்பறிவு’.

FOLLOW US

WRITE A COMMENT

x