முதல் பார்வை: மின்னல் முரளி - மார்வெல், டிசி பாணியில் அட்டகாசமான இந்திய சூப்பர் ஹீரோ!


முதல் பார்வை: மின்னல் முரளி - மார்வெல், டிசி பாணியில் அட்டகாசமான இந்திய சூப்பர் ஹீரோ!

மார்வெல், டிசி என ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை பார்த்து, 'நம்முடைய ஊரில் இதுபோன்ற சூப்பர் ஹீரோ படங்கள் எப்போது வரும்?' என ஏங்கிய சினிமா ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க வந்துள்ளார் ‘மின்னல் முரளி’. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி களத்தில் ரிலீஸாகியுள்ள இந்த மலையாள சூப்பர் ஹீரோ படம் குறித்த அலசல் இது.

பொதுவாக ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள் உலகமெங்கும் பிரபலமாகி சக்கை போடு போடுவதற்கும், அதே இந்தியாவில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு எடுபடாமல் போவதற்கும் காரணங்கள் உண்டு. அமெரிக்காவில் சூப்பர் ஹீரோ காமிக்ஸ் என்பது அந்நாட்டு மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம். ஆண்டாண்டு காலமாக அவர்கள் காமிக்ஸ் வடிவில் பார்த்து, படித்து ரசித்த கதாபாத்திரங்கள் அவை. அது மட்டுமின்றி, மார்வெல் காமிக்ஸ் அல்லது டிசி காமிக்ஸ் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு வலுவான பின்னணிக் கதை இருக்கும். அவற்றில் வில்லன்களும் அடக்கம். உதாரணமாக, டிசி காமிக்ஸின் பேட்மேன், ஜோக்கர் கதாபாத்திரங்கள், மார்வெல் காமிக்ஸின் ஸ்பைடர்மேன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் உலக அளவில் பிரபலமாக அவற்றின் இருண்ட பின்னணியும் ஒரு காரணம். ஆனால் இந்தியாவில் சூப்பர் ஹீரோ படங்கள் என்று எடுத்துக் கொண்டால் அப்படியே நேரெதிர். இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் க்ரிஷ், சக்திமான் உள்ளிட்ட ஓரிரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பெரும் வரவேற்பை பெற்றவை. தற்போது அந்தக் குறையை மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘மின்னல் முரளி’ திரைப்படம் போக்கியிருக்கிறது.

டெய்லரின் மகனான ஜெய்சனுக்கு (டோவினோ தாமஸ்) தனது காதலியுடன் அமெரிக்காவில் போய் செட்டிலாகி விடவேண்டும் என்பதே லட்சியம். பல வருடங்களாக தான் தூரத்திலிருந்து நேசித்து வந்த பெண் ஊரை விட்டு ஓடிய சோகத்தில் அனைத்தையும் இழந்து டீ மாஸ்டராக வேலை செய்யும் ஷிபு (குரு சோமசுந்தரம்). இருவருமே கிராம மக்களால் விரும்பப் படாத நபர்களாக இருக்கின்றனர். ஒரு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தன்று 700 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஓர் அரிய வானியல் நிகழ்வினால் ஒரு பெரிய மின்னல் ஒன்று இருவரையும் தாக்கி விடுகிறது. மறுநாள் காலையில் இருவரும் உடலில் எந்தக் காயங்களும் இன்றி உயிர் பிழைக்கின்றனர். அன்று முதல் இருவரது உடலிலும் சில மாற்றங்கள் தெரியத் தொடங்குகின்றன. இருவருமே தங்களுக்கு சூப்பர் பவர்கள் கிடைத்துள்ளதை தெரிந்து கொள்கின்றனர். இருவருமே முதலில் தங்கள் சக்திகளை அவரவர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். பின்னர் இருவரது வாழ்க்கையிலும் ஏற்படும் தனிப்பட்ட இழப்பு ஒருவரை சூப்பர் வில்லனாகவும் மற்றொருவரை சூப்பர் ஹீரோவாகவும் மாற்றுகின்றன. அதன் பிறகு என்னவானது என்பதே ‘மின்னல் முரளி’ சொல்லும் திரைக்கதை.

மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு சூப்பர் ஹீரோ அல்லது சூப்பர் வில்லன் கதாபாத்திரத்துக்கு தேவை ஒரு வலுவான பேக் ஸ்டோரி. அது இல்லையென்றால் திரைக்கதையில் என்ன ஜாலத்தை புகுத்தினாலும் அது கம்பி கட்டும் கதையாகி விடும். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் இருவருக்குமே மிக வலுவாக பின்னணிக் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் இருவருமே சராசரி மனிதனுக்குரிய இயல்பான குணநலன்களுடனேயே இருக்கின்றனர். சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் அவர்களை அவரவர் பாதைகளை தேர்ந்தெடுக்க வைக்கிறது என்பதை பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்து விடுகிறார் இயக்குநர் பேசில் ஜோசப்.

ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல ‘மின்னல் முரளி’. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் நாம் பார்க்கும் விமானத்தை தாங்கிப் பிடிப்பது, ஊரில் இருக்கும் கட்டிடங்களை எல்லாம் ஹீரோவும் வில்லனும் கட்டிப்புரண்டு தவிடு பொடியாக்குவது போன்ற பிரம்மாண்ட காட்சிகள் எதுவும் இதில் கிடையாது. நம் பக்கத்து தெருவில் ஒரு சூப்பர் ஹீரோ இருந்தால் எப்படி இருப்பான்? அதற்கு சமமான சக்திகள் கொண்ட இன்னொரு எதிரியை அவன் சந்தித்தால் என்ன நடக்கும்? - இதைத்தான் 'மின்னல் முரளி' பேசுகிறது.

நாயகனாக டோவினா தாமஸ். தொடக்கத்தில் குறும்புக்கார இளைஞனாக வருவதாகட்டும், முதல் காதலி ஏமாற்றியது தெரிந்ததும் பாத்ரூமில் உட்கார்ந்து அழுவதாகட்டும் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். படத்தில் ஹீரோவுக்கு சரிசமமான பாத்திரம் குரு சோமசுந்தரத்துக்கு. ‘சூப்பர் டீலக்ஸ்’. ‘ஜோக்கர்’ வரிசையில் பேர் சொல்லப் போகும் கதாபாத்திரம். விரக்தி, கோபம், அழுகை, கோர சிரிப்பு என காட்சிக்குக் காட்சி தெறிக்க விடுகிறார். இவர்கள் இருவரைத் தவிர அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், ஷெல்லி நபு குமார் என அனைவரும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாக செய்திருக்கின்றனர். டோவினோவின் அக்கா மகனாக வரும் சிறுவனின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.

சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை படத்துக்கு பக்க பலம்தான் என்றாலும், நினைவில் வைத்துக் கொள்ளும்படி தீம் இசை எதுவும் இல்லாதது குறை. பாடல்கள் ஈர்க்கவில்லை. சிஜியில் இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். எனினும் திரைக்கதையின் சுவாரஸ்யத்தில் படம் பார்க்கும்போது இந்த குறைகள் பெரிதாக புலப்படவில்லை.

முதல் பாதியின் நீளம் ஒரு பெரும் குறை. எப்போது ஹீரோவும் வில்லனும் மோதிக் கொள்வார்கள் என்று பார்வையாளன் நினைக்கும்போது அடுத்தடுத்த காட்சிகளில் அதற்கான சமிக்ஞையே இல்லாமல் வெறுமனே காட்சிகள் நகர்வது சலிப்பை ஏற்படுத்துகின்றன. முதல் பாதி முடியும் வரையுமே கூட ஹீரோவும் வில்லனும் சந்தித்துக் கொள்வதே இல்லை. ஆரம்பம் முதல் வழக்கமான சூப்பர் ஹீரோ படங்களிலிருந்து மாறுபட்டு காட்சிகளை அமைத்து விட்டு படத்தின் க்ளைமாக்ஸ் அப்படியே ஹாலிவுட் பாணியை பின்பற்றியது ஏனோ தெரியவில்லை. வில்லனின் முடிவும் சப்பென்று முடிக்கப்பட்டது போல இருக்கிறது. இரண்டாம் பாகத்துக்கு அடிக்கோடிட்டு முடித்திருப்பது சிறப்பு.

இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்களுக்கான வெற்றிடத்தை விறுவிறுப்பான திரைக்கதை, சுவாரஸ்யமான காட்சியமைப்புகளின் மூலம் நிரப்ப வந்திருக்கும் ‘மின்னல் முரளி’ இந்த கிறிஸ்துமஸுக்கு செம்ம ட்ரீட்!

FOLLOW US

WRITE A COMMENT

x