எலி பிடிப்பது, பாம்பு பிடிப்பது,விஷ முறிவு மருத்துவம் ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் ராஜாக்கண்ணுவும் அவரது மனைவி செங்கேணியும். விழுப்புரம் மாவட்ட மலைக் கிராமத்தில் வசிக்கும் இவர்கள், ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை பழங்குடிகளான இருளர் சமூகத்தைசேர்ந்தவர்கள். மனைவி, மகளைப்பிரிந்து, மாவட்டம் கடந்து செங்கல் சூளை வேலைக்கு செல்கிறார் ராஜாக்கண்ணு.
இதற்கு நடுவே, கிராமத்துப் பிரமுகர் வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து அப்புறப்படுத்திக் கொடுக்கிறார். அடுத்த சில நாட்களில் அந்தவீட்டில் நகைகள் களவு போகின்றன. திருட்டுப் பழியை ராஜாக்கண்ணு மீது சுமத்தி, அவரை கைதுசெய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு நாள் கணக்கில் சித்ரவதைசெய்கின்றனர் போலீஸார். ஒரு கட்டத்தில், அவர் தப்பிச்சென்றுவிட்டதாக கூறுகின்றனர். இதை நம்பாத செங்கேணி, கணவனை மீட்க சென்னைக்கு வந்து, சந்துரு எனும்வழக்கறிஞரின் உதவியை நாடுகிறார். உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கிறார் சந்துரு. சந்துரு எடுத்த முயற்சிகளும், அக்கறையும் எத்தகையது? ராஜாக்கண்ணு மீட்கப்பட்டாரா? செங்கேணிக்கு நீதி கிடைத்ததா என்பது கதை.
நீதியரசர் சந்துரு 90-களில் வழக்கறிஞராக இருந்தபோது, விழுப்புரம் மாவட்ட மலைக் கிராமத்தில் வசிக்கும் பார்வதி எனும் இருளர்இனப் பெண்ணுக்காக நடத்திய சட்டப் போராட்டம்தான் திரைக்கதையின் மையக் கரு. பல ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் உண்மைக்கொடூரத்தை, பதைபதைப்பு மாறாமல் திரைக்கு கொண்டுவந்த விதத்துக்காகவே இயக்குநர் த.செ.ஞானவேலை மனமாரப் பாராட்டலாம்.
ஒரு மாஸ் கதாநாயகனான சூர்யாவுக்கு காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், சமூகநீதி வசனங்கள் வைக்க இடமிருந்தும் அத்தகைய ஹீரோயிசத்தை அடியோடு தவிர்த்திருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட பழங்குடிகள் மீதான பிற சமூக மக்களின் பார்வை,புறக்கணிப்பு போன்றவற்றை காட்சிகள் வழியாக எடுத்துக்காட்டிய விதம் ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது.
அதேநேரம், சம்பவத்தின் உண்மைத் தன்மைகளையும், கதாபாத்திரங்களின் பெயர்களையும்கூட அப்படியே பயன்படுத்தியவர், கொடூரத்தை நிகழ்த்தியவர்களில் முக்கியமானவரான துணை ஆய்வாளர் அந்தோணிசாமியின் பெயரை குருமூர்த்தி என்று மாற்றியது ஏன் என்ற கேள்வி மட்டும் தவிர்க்க முடியாமல் நெருடுகிறது.
‘‘சட்டம் ஒரு வலிமையான ஆயுதம், யாரை காப்பாத்துறதுக்காக அதை பயன்படுத்துறோம்கிறது முக்கியம்’’, ‘‘திருட்டுக்கும், சாதிக்கும் என்ன தொடர்பு? எல்லா சாதியிலயும் திருடங்க இருக்காங்க’’, ‘‘பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைச்சா, அன்னிக்கு நிம்மதியா தூங்குவேன். அதுதான் எனக்கு பீஸ்’’ என எளிய வசனங்கள் வழியாக சந்துரு கதாபாத்திரம் நம்மை ஆக்கிரமித்துகொள்கிறது.
ராஜாக்கண்ணுவாக மணிகண்டன், செங்கேணியாக லிஜோமோள்ஜோஸ் இருவரும் வட்டார வழக்கைபேசும் விதம், அதில் தெறிக்கும் அங்கதம் ஆகியவை நம்மை அந்தமலைக் கிராமத்துக்கே கூட்டிச் செல்கின்றன. பிரகாஷ் ராஜ், காவல்ஆய்வாளர் உட்பட துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் நடிப்பிலும் அவ்வளவு நம்பகம்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு, ஷான் ரோல்டன் இசை, பிளோமின் ராஜ் படத்தொகுப்பு, கே.கதிர் கலைஇயக்கம் ஆகியவை படத்துக்கு கூடுதல் பலம்.
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் போலீஸாரில் பலர், வழக்குவிசாரணை என்கிற பெயரில் குரலற்ற எளிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் மனித உரிமை மீறல்களை,அதனால் சிதையும் குரலற்றவர்களின் குரலை நம் உள்ளங்களில் ஒலிக்கவைக்கிறது ‘ஜெய்பீம்’.
WRITE A COMMENT