முதல் பார்வை - எம்ஜிஆர் மகன்


முதல் பார்வை - எம்ஜிஆர் மகன்

கிராமத்தில் பாரம்பரியமிக்க சித்த வைத்தியராக இருப்பவர் எம்.ஜி.ஆர். என்கிற எம்.ஜி.ராமசாமி (சத்யராஜ்). இவருக்கு ஒரே மகன் அன்பளிப்பு ரவி (சசிகுமார்). சிறுவயதில் தன்மகன் +2 வகுப்பில் ஆறு பாடங்களிலும் தோல்வி அடைந்ததால் பல வருடங்களாக மகனுடன் பேசாமல் இருக்கிறார். பத்திரிகையில் முதல் பக்க செய்தியில் இடம்பெறும் வரை வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கப் போவதில்லை என்று சசிகுமார் சபதம் ஏற்கிறார். அவருக்கு உறுதுணையாக இருக்கும் தாய்மாமா சமுத்திரக்கனி.

ஊரில் உள்ள மூலிகைச் செடிகள் சூழ்ந்த ஒரு மலையை உடைத்து குவாரி அமைக்கும் பழ.கருப்பையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து பல வருடங்களாக நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார் சத்யராஜ். இதற்கிடையே சென்னையில் இருந்து தந்தைக்கு வைத்தியம் பார்க்க வரும் மிர்ணாலினி ரவிக்கு சசிகுமாருடன் காதல் ஏற்படுகிறது. வழக்கில் சத்யராஜால் வெற்றிபெற முடிந்ததா, இதற்கு சசிகுமார் எந்த வகையில் உதவினார் என்பதே எம்ஜிஆர் மகன் சொல்லும் கதை.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' படங்களை கொடுத்த பொன்ராமின் படம் என்று சொன்னால் அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அவரது முதல் இரண்டு படங்களிலும் கதை என்று பெரிதாக ஒன்று இல்லையென்றாலும் பார்வையாளர்களை நகரச் செய்யாதபடி அமைக்கப்பட்ட திரைக்கதையும், குபீர் சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவையும் படத்தைத் தூக்கி நிறுத்தியிருந்தன. இதன்பிறகு பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவதாக வந்த 'சீமராஜா' படம் இணையத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால் அந்த 'சீமராஜா'வையே நல்ல படம் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இருக்கிறது 'எம்ஜிஆர் மகன்'.

நாயகனாக சசிகுமார். இதற்கு முந்தைய அவரது படங்களில் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதையே அட்சரம் பிசகாமல் செய்கிறார். நடிப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கூடவே அவரது தாய்மாமா சமுத்திரக்கனியுடன் சேர்ந்து கொண்டு காமெடி செய்கிறேன் பேர்வழி என்று பார்ப்பவர்களைப் படுத்தி எடுக்கிறார்கள். நாயகியாக மிர்ணாலினி. வழக்கமான பொன்ராம் படங்களில் வரும் நாயகியைப் போலவே வந்து போகிறார். சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், பழ.கருப்பையா என அனைவரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பழ.கருப்பையாவுக்கு எதிராக சத்யராஜ் போடும் வழக்கும் அதைச் சுற்றி நடப்பவையும்தான் படத்தின் மையக் கருவாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது தொடர்பான காட்சிகள் படத்தில் வருவதே வெறும் ஓரிரு நிமிடங்கள்தான். கதைக்கு சம்பந்தமே இல்லாத காட்சிகள்தான் படம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. திரைக்கதை இலக்கே இல்லாமல் தாறுமாறாக சுற்றித் திரிகிறது. படத்தில் வரும் அனைவருமே பயங்கரமாக விழுந்து விழுந்து காமெடி செய்கிறார்கள். ஆனால் பார்க்கும் நமக்குத்தான் ஒரு இடத்தில் கூட சிரிப்பு வருவதில்லை. சமுத்திரக்கனியும், சசிகுமாரும் கருத்து சொல்லி அட்வைஸ் மழை பொழிகிறார்கள் என்று தொடர்ந்து வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பழிவாங்கவே இப்படி காமெடி செய்ய இறங்கிவிட்டாகளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

சமுத்திரக்கனிக்குப் பெண் பார்க்கச் செல்வதும், அங்கு பெண்ணையும், அவரது தாயையும் பற்றி வைக்கப்பட்டுள்ள ‘பாடி ஷேமிங்’ வசனங்கள் அருவருப்பு ரகம். அதேபோல ஒரு காட்சியின் ஜாகிங் செல்லும் நாயகியை சிலர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதை தன்னிடம் முறையிடும் நாயகியிடம் ‘வெள்ளந்தி மனுஷங்க வெள்ளத்தோலுன்னா பார்க்கத்தான் செய்வாங்க’ என்று நாயகன் சொல்கிறார்.

படத்துக்குத் தேவையானதை நவ்ஃபல் ராஜாவின் பின்னணி இசையும், வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவும் கொடுத்துள்ளன. அந்தோணி தாசனின் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. படம் தொடங்கியது முதல் க்ளைமாக்ஸ் வரை குறிப்பிட்டுச் சொல்ல ஒரு நல்ல விஷயம் கூட இல்லாமல் போனது பெரும் சோகம்.

மாஸ் மசாலா என்ற பெயரில் எந்தவித மெனக்கெடலும் இல்லாத திரைக்கதையைக் கொண்ட படங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு வரப் போகின்றன என்பதற்கு இயக்குநர்கள்தான் பதில் சொல்லவேண்டும். அதீத பொறுமையும், கடும் மனதைரியமும் கொண்டவர்கள் மட்டும் பார்த்து ரசிக்கலாம்.

FOLLOW US

WRITE A COMMENT

x