முதல் பார்வை: ஓ மணப்பெண்ணெ! - இன்னொரு ரீமேக் சினிமா


முதல் பார்வை: ஓ மணப்பெண்ணெ! - இன்னொரு ரீமேக் சினிமா

பெண் பார்க்கும் படலத்தில் முகவரி மாறிப் போய் வேறு ஒரு பெண்ணைப் பார்ப்பதால் ஏற்படும் முன்பின் விளைவுகளே ‘ஓ மணப்பெண்ணே!’

கஷ்டப்பட்டு இன்ஜினீயரிங் படித்து அரியர்ஸ் கிளியர்ஸ் செய்த இளைஞர் கார்த்திக் (ஹரீஷ் கல்யாண்) ஐடியில் கிடைத்த வேலையையும் ஒரே மாதத்தில் விட நேர்கிறது. அதற்குப் பிறகு செஃப் ஆகிறேன், சமையல் குறித்து யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறேன் என்று சில முயற்சிகளில் இறங்குகிறார். அது பெரிதாகப் பலனளிக்காமல் போகிறது. இந்நிலையில் வரதட்சணை மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு செட்டில் ஆகலாம் என்ற நினைப்பில் பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார். திருமணமாகித்தான் மகன் சம்பாதிப்பான் என்று ஜோசியக்காரர் சொன்னதை நம்பி கார்த்திக் தந்தை வேணு அரவிந்தும் வரன் பார்க்கிறார்.

குடும்பத்தோடு பெண் பார்க்கப் போனவர்கள் முகவரி மாறி வேறு ஒரு வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். அங்கு மணப்பெண் ஸ்ருதியிடம் (பிரியா பவானி சங்கர்) பேசும்போது அவரது தம்பி கதவைச் சாத்திவிடுகிறார். ஏற்கெனவே லாக் பிரச்சினை இருப்பதால் கதவைத் திறக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். இந்த இடைவெளியில் கார்த்திக்கும், ஸ்ருதியும் கடந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். பிறகுதான் கார்த்திக் குடும்பம் வீடு மாறிப் பெண் பார்க்க வந்தது தெரிகிறது. இதனால் சரியான முகவரிக்குப் பெண் பார்க்க கார்த்திக் குடும்பம் செல்கிறது. ஆஸ்திரேலியா போவதையே கனவாகக் கொண்ட ஸ்ருதி ஃபுட் டிரக் தொழிலை ஆரம்பிக்க கார்த்திக்கின் உதவியை நாடுகிறார். கார்த்திக்கின் சோம்பேறித்தனம், பொறுப்பற்ற தனம், அக்கறையின்மை சில சிக்கல்களைக் கொண்டுவருகிறது.

இந்நிலையில் ஃப்ராங்க் மாமனாரின் டெஸ்ட்டில் கார்த்திக் ஜெயித்தாரா, பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாரா, ஸ்ருதியின் ஆஸ்திரேலியா கனவு என்ன ஆனது, பழைய காதலனுக்கு ஸ்ருதி சொல்லும் பதில் என்ன ஆகிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

விஜய் தேவரகொண்டா - ரீத்து வர்மா நடிப்பில் தருண் பாஸ்கர் இயக்கிய ‘பெல்லி சூப்புலு’தெலுங்குப் படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் ‘ஓ மணப்பெண்ணே!’ என்று தமிழில் ரீமேக் செய்துள்ளார். ஷாட் பை ஷாட் ரீமேக் செய்யாமல் கொஞ்சம் மாற்றியிருப்பது பாராட்டுக்குரியது.

கார்த்திக் கேரக்டரில் ஹரீஷ் கல்யாண் நன்றாகப் பொருந்துகிறார். வெட்டியாக இருப்பது, வேலை மீதான சின்சியாரிட்டியைக் காட்டாமல் அலட்சியப்படுத்துவது, நேர மேலாண்மை இல்லாமல் இலக்கின்றித் திரிவது என்று கதாபாத்திரத்துக்கான வார்ப்பை நடிப்பில் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். சில இடங்களில் கேர்லஸாக நடித்து குடும்பத்துக்கு கவனம் ஈர்க்கிறார்.

பிரியா பவானி சங்கர் கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார். கோபம், ஆதங்கம், வருத்தம், இயலாமை என அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஹரீஷ் கல்யாணின் நண்பர்களாக அன்புதாசனும், அபிஷேக் குமாரும் இயல்பாக நடித்துள்ளனர். வேணு அரவிந்த், அனிஷ் குருவிலா, ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் ஆகியோர் கதாபாத்திரங்களின் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் விளம்பரப் படத்துக்கே உரிய அழகியலைக் கொட்டியுள்ளார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை ஓகே ரகம். கிருபாகரன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். இழுவைக் காட்சிகள் அதிகம்.

தெலுங்கில் ஹிட்டடித்து தேசிய விருது வென்ற படத்தை எந்த உணர்வுபூர்வமான திரைக்கதையும் இன்றிக் கடத்தியிருக்கிறார்கள். தேடியும் சுவாரஸ்யங்கள் தென்படவில்லை. பெரும்பாலான காட்சிகள் ஹரீஷ் கல்யாண்- பிரியா பவானி சங்கர் பேசுவதாகவே உள்ளன. இது சோர்வைத் தருகிறஹு. சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கும் தீபக் சுந்தர்ராஜனின் வசனங்கள், முக்கியமான தருணங்களில் மிகச் சாதாரணமாகக் கடந்துபோவது படத்தின் பலவீனம்.

ஷாட் பை ஷாட் என்று ரீமேக் செய்யவில்லையே என்று ஆறுதல் அடைந்தாலும் புதிதாகச் சேர்க்கப்பட்ட அம்சங்கள் படத்துக்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. பெற்றோர்கள் சொல்வதைக் கேட்காமல் இஷ்டம் போல் திசை தெரியாமல் திரியும் ஹரீஷ் கல்யாண் திடீரென்று அவர்களுக்காக பயப்படுவதாகக் காட்டுவதும், உறுதியான முடிவைப் பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவிப்பதாகக் காட்சிப்படுத்துவதும் உறுத்தல். பாத்திர வடிவமைப்புக்கே உரிய முக்கியமான சிக்கல் இது.

பிரியா பவானி சங்கரின் தந்தையிடம் ஹரீஷ் கல்யாண் வந்து பேசும் இடத்தில்தான் தடம் புரண்ட திரைக்கதை சுதாரித்துக் கொள்கிறது. இந்தச் சரிவை முன்னரே சரிசெய்து சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தால் ‘ஓ மணப்பெண்ணே!’ இன்னொரு ரீமேக் சினிமா என்று கடந்து போக முடியாத அளவுக்கு தவிர்க்க முடியாத சினிமாவாக இருந்திருக்கும்.

FOLLOW US

WRITE A COMMENT

x