சத்தியத்தை நம்பும் அண்ணனுக்கும், சட்டத்தை நம்பும் கணவனுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பெண்ணின் கதையே ‘உடன்பிறப்பே’.
வைரவனுக்கு (சசிகுமார்) தங்கை மாதங்கிதான் (ஜோதிகா) எல்லாம். இவர்கள் இருவரின் பாசத்தைப் பார்த்து ஊரே மெச்சுகிறது. வைரவனின் அடிதடி, வன்முறை மாதங்கியின் கணவர் சற்குணம் வாத்தியாருக்கு (சமுத்திரக்கனி) சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதை வெளிப்படையாகச் சொன்ன பிறகும் வைரவனால் மாற முடியவில்லை. இந்நிலையில் ஒரு அசம்பாவிதச் சம்பவத்தால் வைரவன் வீட்டை விட்டு மனைவி, மகளுடன் வெளியேறுகிறார் சற்குணம் வாத்தியார். அதற்குப் பிறகு வைரவனும் வாத்தியாரும் ஒரே ஊரில், ஒரே தெருவில் ஏன் 10 வீடுகள் தள்ளியிருந்தும் பேசிக்கொள்ளவில்லை.
அண்ணனிடம் தான் பேசுவதைக் காட்டிலும் தன் கணவனைப் பேசவைக்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் செயல்படுகிறார் மாதங்கி. ஆனால், அடுத்தடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போய்விடுகின்றன. இச்சூழலில் மாதங்கி மகளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது. தாய்மாமன் இல்லாமல் திருமணமா எனப் பிரச்சினை எழுகிறது.
வாத்தியாருக்கு ஏன் வைரவனைப் பிடிக்காமல் போகிறது, நடந்த அசம்பாவிதம் என்ன, இரு குடும்பத்தினரும் இணைந்தார்களா, மாதங்கியின் மகளின் திருமணம் நடந்ததா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
‘கத்துக்குட்டி’ திரைப்படத்தை இயக்கிய இரா.சரவணனின் இரண்டாவது படம் ‘உடன்பிறப்பே’. பத்திரிகையாளராக இருந்து திரை இயக்குநர்களாகத் தகுதிப்படுத்திக் கொள்பவர்கள் திரைமொழியில் கோட்டை விட்டுவிடுகிறார்கள் என்று சினிமா உலகில் வழக்கமாகக் குற்றம் சாட்டுவதுண்டு. அந்தக் குற்றச்சாட்டை, பொதுவான மாய பிம்பத்தைத் தன் இரண்டாவது படத்திலேயே உடைத்தெறிந்து நல்ல திரைமொழியைக் கைவரப் பெற்றுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.
ஜோதிகாவின் 50-வது படம். அதற்கு நியாயமும் பெருமையும் சேர்த்துள்ளார். கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோட, உதடுகள் வெடித்து அழுது, உணர்வுபூர்வமான நடிப்பால் மனதில் நிற்கிறார். குறும்புப் பெண், பண்பட்ட பெண், முதிர்ச்சியான நடிப்பு, மிகை நடிப்பு என்று பல்வேறு வகை நடிப்புகளை வெளிப்படுத்திய ஜோதிகா இப்படத்தில் குடும்பத்துப் பெண்ணாக உணர்வு வயப்பட்ட நடிப்பைப் பக்குவமாகக் கொடுத்துள்ளார். தாலி சென்டிமென்ட், குழந்தை சென்டிமென்ட்டையும் கேள்விக்குட்படுத்திய விதம் அவரது கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. பெண்களை இழிவுபடுத்தும் ஆணுக்கு அவர் புகட்டும் பாடம் எனக் கதாபாத்திர வார்ப்புக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்ட பாங்கு அட போட வைக்கிறது.
சசிகுமாருக்கு வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம்தான். நியாயத்துக்காகப் போராடுவது, சவால் விடுவது, தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பது, தங்கைக்காக எதையும் செய்யத் துணிவது, விட்டுக்கொடுக்காத மனப்பான்மை எனப் பாசமுள்ள அண்ணனைக் கண்முன் நிறுத்துகிறார். சென்டிமென்ட் காட்சிகளில் அவர் நடிப்பில் போதாமை எட்டிப் பார்க்கிறது. இன்னும் அவர் மெனக்கெட்டு நடித்திருக்கலாம்.
சமுத்திரக்கனியின் கேரக்டர் ஸ்கெட்ச் செம்ம. சட்டத்தின்படியே நடப்பேன் என்று இறுதிவரை உறுதியாக இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. பக்கம் பக்கமாகப் பேசி கருத்தூசி போடுபவர் கச்சிதமாகப் பேசிக் கவர்ந்துள்ளார். அந்த எல்லை மீறாத தன்மையில் இயக்குநரின் ஆளுமை பளிச்சிடுகிறது.
சூரி காமெடியுடன் குணச்சித்திரக் கதாபாத்திரத்தையும் குத்தகைக்கு எடுத்து அப்ளாஸ் அள்ளுகிறார். உருக்கமும் நெருக்கமுமாக நிறைவான நடிப்பில் மிளிர்கிறார். ஜோதிகாவின் மகளாக நிவேதிதா சதீஷ் பாத்திரத்துக்குரிய பங்களிப்பில் யதார்த்தமாக நடித்துள்ளார். சசிகுமாரின் மகனாக அறிமுக நடிகர் சித்தார்த் மில்லி மீட்டருக்கும் குறைவாகவே சிரிக்கிறார். நடிப்புக்கும் அவருக்கும் ரொம்ப தூரம்.
சசிகுமாருக்கும் சேர்த்து பாசத்தைக் குழைத்து நாத்தனார் மீதான அன்பைக் குறையின்றி வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார் சிஜா ரோஸ். தீபா அக்கா ஒரே காட்சியில் ஓஹோ என்று பெயர் எடுத்து, பாசத்தைப் பங்கு போடுகிறார். வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், நமோ நாராயணன் ஆகியோர் கொடுத்திருக்கும் வேலையைச் சரியாகச் செய்துள்ளனர். கலையரசன் பாத்திர வார்ப்பில் நம்பகத்தன்மை இல்லை. ஆனாலும், அவர் கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.
தஞ்சை மண்ணின் பசுமை, தென்னந்தோப்புகள், கோயில் திருவிழா, கிராமத்து மக்கள் என அத்தனை அழகியலையும் கேமராவில் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இமானின் இசையில் அண்ணே யாரண்ணே, ஒத்தப்பனை காட்டேரி பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணியில் ஒரே மாதிரியான இசையைக் கொடுத்து கரைச்சல் கொடுக்காமல் இருந்திருக்கலாம். சசிகுமார் நின்றால், நடந்தால், அடித்தால், பாசத்தால் உணர்வுவயப்பட்டால், ஏன் தும்மினால் கூட தீம் இசை என்று ரிப்பீட் அடித்ததைக் குறைத்திருக்கலாம்.
சில துண்டு துண்டான காட்சிகள், காட்சி முழுமை அடைவதில் ஏற்பட்ட சிக்கல் போன்றவை அப்பட்டமாகத் தெரிகின்றன. இயக்குநர் இரா.சரவணன் இதில் கவனம் செலுத்தத் தவறியுள்ளார். எடிட்டர் ரூபனுக்குப் படத்தில் அதிக வேலை இருந்தது தெரிகிறது.
‘கொரியர் பண்ற மாதிரி இப்போ கொலை பண்றது சாதாரணமாயிடுச்சு’, ‘எங்கண்ணன் அய்யனார் கையில இருக்கிற அருவா மாதிரி, யாரையும் வெட்டாது, ஆனா வெட்டும்ங்கிற பயம் இருக்கும்’,‘ஒரு குடும்பத்துல நல்லது கெட்டது நடக்குறதே உறவு முறையைச் சேர்த்துப் பார்க்கத்தான்’,‘ஏன் எல்லோரும் நல்ல பேர் வாங்கணும்னு அலையுறீங்க, நல்ல பேரு வாங்கணும்னு நினைக்குறது கூட லஞ்சம்தான்’,‘வன்முறை என்னைக்குமே தீர்வைக் கொடுக்காது இன்னொரு வன்முறையைத்தான் கொடுக்கும்’, நம்மாழ்வார் குறித்த வசனங்களில் இரா.சரவணின் பத்திரிகையாளர் முகம் வெளிப்படுகிறது. அவரது எழுத்தும் பளிச்சிடுகிறது.
கலையரசனின் மறைக்கப்பட்ட பக்கம் இந்தப் படத்துக்குத் துளியும் பொருந்தாமல் துருத்தி நிற்கிறது. அவர் மீதான வேறு வகை தோற்றத்தைக் கட்டமைக்கப் பயன்படுத்தப்பட்டாலும் அது எடுபடவில்லை. அது இந்தப் படத்துக்குத் தேவையுமில்லை. ஒவ்வொடு அடியும் அவார்டு என்று சூரி பேசும்போது அவரின் குணச்சித்திரக் கதாபாத்திரம் காமெடிக்கு மாறி சிதைந்து போகிறது. அந்த வசனத்தைத் தவிர்த்திருக்கலாம்.
கொசுவத்தியில் இன்னும் மயக்கம் போட வைப்பதெல்லாம் எந்தக் காலத்து டெக்னிக்? அந்த அரதப் பழசான ஐடியாவைத் தூக்கி எறிந்திருந்தால் படத்துக்கு எந்தப் பாதகமும் இருந்திருக்காது. அந்த சீக்வன்ஸை மாற்றி, இன்னும் கொஞ்சம் எமோஷனைக் கூட்டியிருந்தால் சமகால சென்டிமென்ட் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத இடத்தை ‘உடன்பிறப்பே’ பிடித்திருக்கும்.
WRITE A COMMENT