முதல் பார்வை - விநோதய சித்தம்


முதல் பார்வை - விநோதய சித்தம்

சென்னையில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் அதிகாரியாக இருப்பவர் பரசுராம் (தம்பி ராமையா). வீடு முதல் அலுவலகம் வரை அனைத்தும் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்ற எண்ணம் கொண்டவர். எதிலும் தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர் பதவிக்காக ஆவலோடு காத்திருக்கிறார்.

இந்தச் சூழலில் எதிர்பாராத விதமாக ஒரு கோர விபத்தை சந்திக்கிறார் பரசுராம். அதில் சிறிது சிறிதாக அவரது உயிர்பிரிந்து கொண்டிருக்கும் வேளையில் அவரது ஆன்மா ஒரு அமானுஷ்ய உலகில் கண்விழிக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை தனக்கு டைம் இல்லை என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் அவர் அங்கு காலத்தை மனிதரூபத்தில் (சமுத்திரக்கனி) பார்க்கிறார்.

தன்னை நம்பியிருக்கும் குடும்பமும், அலுவகமும் தான் இல்லையென்றால் இயங்காமல் போய்விடும் என்று கூறி, தான் செய்யவேண்டிய கடமைகளை செய்து முடிக்க சமுத்திரக்கனியிடம் கால அவகாசம் கேட்கிறார். அவருக்கு 3 மாத கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. மீண்டும் கண்விழிக்கும் பரசுராம் அவருடைய கடமைகளை செய்துமுடித்தாரா? அந்த 90 நாட்களில் அவரால் செய்யமுடிந்தது என்ன என்பதே ‘விநோதய சித்தம்’ படத்தின் மீதிக் கதை.

இறந்தபின்பு வாய்ப்பு வழங்கப்படுவது, மறுபிறவி என தமிழில் ஏகப்பட்ட படங்கள் இதற்கு முன்பு வந்துள்ளன. ஆனால் வழக்கமான மறுபிறவி டெம்ப்ளேட் படங்களில் இருந்து ‘விநோதய சித்தம்’ மாறுபட்டு நிற்கிறது. படம் தொடங்கிய 10 நிமிடத்திலேயே மெயின் கதைக்குள் பயணிக்க தொடங்கி நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. மொத்த படமும் தம்பி ராமையாவின் முதுகில் தான் சவாரி செய்யப் போகிறது என்பதை அந்த முதல் பத்து நிமிடங்களிலேயே இயக்குநர் சமுத்திரக்கனி நமக்கு சொல்லிவிடுகிறார்.

முந்தைய சமுத்திரக்கனி படங்களில் இருக்கும் பாடல், சண்டைக்காட்சிகள் என எந்தவொரு கமர்ஷியல் விஷயங்களில் படத்தில் இல்லாதது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்திருக்கும் படம். படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களில் சமுத்திரக்கனியை வைத்தே விளம்பரப்படுத்தியிருந்தாலும் படத்தின் ஹீரோ தம்பி ராமையா தான். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு புது தம்பி ராமையாவை பார்க்க முடிகிறது. அனைத்தையும் தன்னுடைய கட்டுக்குள் வைத்திருக்க முயல்வதாகட்டும், இறந்தபிறகு வாய்ப்பு கேட்டு சமுத்திரக்கனியிடம் கெஞ்சுவதாகட்டும், இறுதியில் ஏற்படும் மனமாற்றம் என படம் முழுக்க மிளிர்கிறார். கோபமாக பேசும் காட்சிகளில் ‘சாட்டை’ பட கதாபாத்திரம் நினைவுக்கு வருவதையும் தவிர்க்கமுடியவில்லை.

காலத்தின் மனித உருவமாக சமுத்திரக்கனி. தம்பி ராமையாவுடன் படம் முழுக்க பயணித்து அவரது தவறுகளை உணர்த்திக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம். நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லையென்றாலும் தன்னுடைய பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். அவரே இயக்கும் படமென்பதால் ஹீரோயிச காட்சிகள் வைக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்து அடக்கி வாசித்திருப்பது பாராட்டுக்குரியது.

இவர்கள் தவிர சஞ்சிதா ஷெட்டி, முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, தீபக் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் குறையின்றி நடித்திருக்கின்றனர்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், சி.சத்யாவின் இசையின் படத்துக்கு எது தேவையோ அதை சரியாகக் கொடுத்திருக்கின்றன. படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்கள். காட்சிக்குக் காட்சி சமுத்திரக்கனிக்கு ஒரு பக்க வசனத்தை கொடுத்து கருத்துமழை பொழியவிடாமல் நறுக்கு தெறித்தாற்போல் நச் என்று ஒற்றை வரியில் பார்வையாளர்களுக்கு புரியவைக்கும் இயல்பான வசனங்கள் படம் முழுக்க வருகின்றன. அதே போல படம் முழுக்க ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் நகைச்சுவையும் படத்தின் ஓட்டத்துக்கு கைகொடுத்துள்ளன.

படத்தின் முதல்பாதி வரை நிற்காமல் ஓடும் திரைக்கதை இடையில் மகன் தீபக் வெளிநாட்டில் இருந்து வரும் காட்சியில் மேற்கொண்டு நகரமுடியாமல் திணறுகிறது. அதைத் தொடர்ந்து தம்பி ராமையாவின் வாழ்வில் நடக்கும் பல முக்கிய மாற்றங்கள் அடுத்தடுத்து உடனடியாக நடந்துவிடுவது நம்பும்படி இல்லை. அந்த காட்சிகள் தமிழ் சீரியல்களை சற்றே அதிகமாக நினைவூட்டுகின்றன. அதன் பிறகு மீண்டும் சூடுபிடிக்கும் படம் பிறகு க்ளைமாக்ஸ் வரை நிற்காமல் ஓடி இறுதியில் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கி முடிகிறது. ‘இயக்குநர்’ சமுத்திரக்கனிக்கு நிச்சயமாக இப்படம் ஒரு ‘கம்பேக்’ என்று சொல்லலாம்.

பிறர் வாழ்க்கையில் நாம் இல்லையென்றாலும் எல்லாம் தானாக நடக்கும் என்று சொல்ல வந்த விஷயத்தை ஜவ்வாக இழுக்காமல் சொன்ன விதத்துக்காகவும், தம்பி ராமையாவின் நடிப்புக்காகவும் விடுமுறை தினத்தில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் ‘விநோதய சித்தம்’.

FOLLOW US

WRITE A COMMENT

x