முதல் பார்வை: என்றாவது ஒரு நாள்


முதல் பார்வை: என்றாவது ஒரு நாள்

கிராமத்தில் சில மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார் தங்கமுத்து (விதார்த்). அவரது மனைவி ராசாத்தி (ரம்யா நம்பீசன்). பல வருடங்களாக குழந்தையில்லாத அவர்கள் தங்கள் மாடுகளை குழந்தை போல பராமரித்து வளர்த்து வருகிறார்கள். கிராமத்தில் நிலவும் கடும் வறட்சியாலும் மின் மோட்டார்களை பயன்படுத்தி நீர் எடுப்பதாலும் தங்கமுத்துவின் கிணறு நீரின்றி வறண்டு போகிறது.

தண்ணீர் இல்லாததால் மாடுகளும் பசியால் வாடுகின்றன. இதனால் லட்சுமி என்கிற ஒரே ஒரு பசுவை தவிர மற்ற மாடுகளை வேறொருவரின் நிலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்புகிறார் தங்கமுத்து. இதனிடையே பல வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமாகிறார் ராசாத்தி. வட்டிக்கு கடன் வாங்கி கிணறை ஆழப்படுத்தும் வேளையில் தங்கமுத்து இறங்குகிறார்.

கிணறு தோண்டும் வேலைகள் நிறைவடையும் தருணத்தில் ராசாத்திக்கு பிரசவ வலி வருகிறது. அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வரும் தங்கமுத்து மின்னல் தாக்கி இறந்து போகிறார். 10 வருடங்களுக்குப் பிறகு மகனுடன் வாழ்ந்து வரும் ராசாத்தி வட்டிப் பணத்தை செலுத்தாததால் கடன்காரர் அவரது மாடுகளை எடுத்துச் சென்று விடுகிறார். மீண்டும் அவரால் தன் மாடுகளை மீட்க முடிந்ததா என்பதே ‘என்றாவது ஒரு நாள்’ படத்தின் கதை.

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி இயக்குநராக அறிமுகமாயிருக்கும் படம். உலமயமாக்கத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடைக்கோடி கிராமங்கள் சந்திக்கும் பிரச்சினையை மிக இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொன்ன விதத்தில் முதல் படத்திலேயே ஜெயித்திருக்கிறார்.

நாயகனாக விதார்த். படத்தின் முதல் பாதியில் மட்டுமே வந்தாலும் நேர்த்தியான, மிகைப்படுத்தாத நடிப்பை வழங்கியிருக்கிறார். மாடுகள் மீது பரிவு காட்டுவது, தண்ணீர் பஞ்சத்தால் செய்வதறியாது அல்லல்படுவது என தனது தேர்ந்த நடிப்பினால் கிராமத்து விவசாயிகளின் இன்னல்களை கண்முன் நிறுத்துகிறார். அவரது மனைவி ராசாத்தியாக ரம்யா நம்பீசன். நாயகனுக்கு இணையான கனமான பாத்திரத்தை தனது முதிர்ச்சியான நடிப்பினால் தூக்கி நிறுத்துகிறார். இவர்களது மகனாக வரும் மாஸ்டர் ராகவன், வெளிமாநிலங்களுக்கு தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் ஒப்பந்தகாரராக வரும் இளவரசு, கந்துவட்டிக் காரராக வருபவர், விதார்த்தின் நண்பராக வருபவர் என படம் முழுக்க வரும் அனைவரும் குறையே சொல்லமுடியாத அளவுக்கு தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். படத்தின் ஒரே ஒரு காட்சியில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட அவ்வளவு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

பசுமையையும் வறட்சியையும் சண்முக சுந்தரத்தின் கேமரா கண்ணை உறுத்தாத வகையில் மிக இயல்பாக படம் பிடித்துக் காட்டுகிறது. என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் பெரியளவில் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் பெரிதும் கைகொடுக்கிறது.

படத்தின் தொடக்கத்திலேயே விதார்த் இறந்து போய்விட்டதை சொல்லிவிட்டாலும் ஃப்ளாஷ்பேக்கில் அவரது மரணம் பார்ப்பவரை உலுக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிசகினாலும் பிரச்சார நெடி தூக்கலாகி விடும் அபாயம் இருக்கும் கதைக்களம். அதற்கேற்ப கம்பி மேல் நடப்பது போல திரைக்கதையை அமைத்த இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

இங்கு ‘ஸ்பெஷல்’ என்று குறிப்பிடக் காரணம் தமிழ் சினிமா கடந்த வந்த பாதை அப்படி. விவசாயப் படம் என்றாலே ஒருவித பீதி பார்வையாளர்களுக்கு ஏற்பட இதற்கு முன் வெளியான சில விவசாயப் படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் ஒரு காரணம். அந்த வகையில் நாம் அன்றாடம் செய்தித் தாள்களிலும், இணையத்திலும் படிக்கும் சம்பவங்களை கோர்த்து காட்சியமைத்திருந்தாலும், அதை நாயகனை விட்டு பாடம் எடுத்து பார்ப்பவர்களை சோதிக்காமல் இயல்பாக போகிற போக்கில் முகத்தில் அறைந்தாற் போல் சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல், அதனால் ஏற்படும் இடப்பெயர்வு, தண்ணீர் பஞ்சம், குழந்தைத் தொழிலாளர்கள் என தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் துயரங்கள் அனைத்தும் காட்சிகளாலும், துணை கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களின் மூலமாவும் பார்ப்பவரின் சட்டையை பிடித்து உலுக்குகின்றன.

படத்தின் குறையென்றால் இரண்டாம் பாதியில் ரம்யா நம்பீசன் மாடுகளை மீட்க கடன்காரரிடம் மன்றாடும் காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் மாடுகளை மீட்பது தான் முக்கிய கதைக்கரு எனும்போது அது தொடர்பான காட்சிகளில் அழுத்தம் குறைவாக இருக்கிறது. அதே போல திரைக்கதையின் ஓட்டத்தில் வேகத்தடைகளாக வரும் பாடல்கள்.

இது போன்ற சின்னச் சின்ன குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினையை மிக நேர்த்தியாக சொன்னதற்காகவும், நடிகர்களின் இயல்பான நடிப்புக்காகவும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இந்த ‘என்றாவது ஒரு நாள்’.

FOLLOW US

WRITE A COMMENT

x