முதல் பார்வை: லிப்ட்


முதல் பார்வை: லிப்ட்

பெங்களூருவில் இருந்து சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்துக்கு மாற்றலாகி வருகிறார் குரு (கவின்). அங்கே ஹெச்.ஆராக இருக்கும் ஹரிணியை (அம்ரிதா) சந்திக்கிறார். அவருக்கும் குருவுக்கும் ஒரு சிறிய கசப்பான அனுபவம் இருக்கிறது.

பணியில் சேர்ந்த முதல் நாளே ஓவர் டைம் செய்ய வேண்டிய நிர்பந்தம் குருவுக்கு ஏற்படுகிறது. பணி முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல அலுவலகத்தில் இருக்கும் லிப்டில் இறங்க முயலும்போது அங்கு சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன.

அலுவலகத்தை விட்டு வெளியேற அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. ஒருகட்டத்தில் அதே அலுவலகத்தில் ஹரிணியும் சிக்கியிருப்பதைத் தெரிந்து கொள்கிறார். அங்கிருந்து இருவரும் வெளியேறினார்களா என்பதே ‘லிப்ட்’ படத்தின் மீதிக் கதை.

இயக்குநர் வினீத் வரபிரசாத்துக்கு இது முதல் படம். படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் ஒரு ரேடியோ பெட்டி, அதைத் தொடர்ந்து மாடியிலிருந்து கீழே வந்து விழும் ஒரு பெண்ணின் உடல் ஆகியவை நம்மை ஒரு திகில் படத்துக்கு ஏற்ற மனநிலைக்குத் தயார்படுத்தி விடுகின்றன.

ஆனால், அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே அதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் வழக்கமான தமிழ்ப் பேய்ப் படங்களுக்கே உரிய காமெடி, காதல் என்று ஒரு 30 நிமிடத்துக்கு நம் பொறுமையை சோதிக்கிறார்கள். படத்துக்கும் அந்தக் காட்சிகளுக்கும் இம்மியளவுக்குக் கூட தொடர்பு இல்லை (இடையில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உட்பட).

அந்த 30 நிமிடத்துக்குப் பிறகு நாயகன் லிப்டில் மாட்டியதும் மீண்டும் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நல்ல காட்சிகள், பிறகு மீண்டும் தொய்வு, பிறகு வேகமெடுக்கும் காட்சிகள் என கலந்துகட்டிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு சில காட்சிகள் உண்மையிலேயே வியக்கவைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக Penrose stairs பாணியில் படிக்கட்டில் ஏறி மீண்டும் மீண்டும் அதே தளத்துக்கு வருவது, லிப்டின் உள்ளே பேய், கவினின் கையைப் பிடித்து அம்ரிதாவைக் கொல்ல முயல்வது உள்ளிட்ட காட்சிகள் வாய்பிளக்க வைக்கின்றன. அதேபோல முகத்துக்கு நேரே பேய் வந்து நின்று திகிலூட்டும் வழக்கமான பேய்ப்படப் பாணியைப் பின்பற்றாமல் ஒருசில காட்சிகள் உண்மையாகவே பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்று கவினை தாராளமாகச் சொல்லலாம். ஆரம்பக் காட்சிகளில் படத்தோடு ஒட்டாதது போலத் தோன்றினாலும் லிப்டுக்குள் மாட்டிக்கொள்ளும் காட்சி தொடங்கி க்ளைமாக்ஸ் வரை அடித்து ஆடுகிறார். அமானுஷ்யக் காட்சிகள் அனைத்திலும் தன்னுடைய நடிப்பால் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறார். நாயகியான அம்ரிதாவுக்குப் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். ஆனால், அதை அவர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார். அதிலும் முதல் 30 நிமிடங்களில் அவர் பேசும் பல வசனங்கள் எரிச்சலூட்டுகின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் யுவாவின் ஒளிப்பதிவும், பிரிட்டோ மைக்கேலின் பின்னணி இசையும். ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை முழுமையாகத் தூக்கி நிறுத்துவது இவை இரண்டும்தான். சிவகார்த்திகேயன் குரலில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இன்னா மயிலு’ பாடலை படத்தில் எங்கும் வைக்காமல் க்ளைமாக்ஸுக்குப் பிறகு வைத்தது பெரும் ஆறுதல்.

முன்பே குறிப்பிட்டது போல் பெரும்பாலான தமிழ் பேய்ப் படங்களில் இருக்கும் பிரச்சினை இதிலும் இருக்கிறது. கவின் அலுவலகத்தில் சேர்ந்து ஓவர் டைம் செய்து லிப்டில் மாட்டிக்கொள்வது வரை சரிதான். ஆனால், இதற்கு இடையில் ஏன் அந்தத் தேவையில்லாத 30 நிமிடக் காட்சிகள். படத்தின் தொடக்கத்திலேயே அவை பார்ப்பவர்களின் மனநிலையை மாற்றிவிடுவதால் அதன்பிறகு வரும் திகில் காட்சிகளோடு ஒன்ற இயலவில்லை. அவற்றை கத்தரித்துத் தூக்கியிருந்தாலும் படத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. நல்லவேளையாக அதன் பிறகு அதுபோன்ற காட்சிகளைப் படத்தில் இடம் பெறாமல் செய்த இயக்குநரைப் பாராட்டலாம்.

அலுவலகத்தில் இருக்கும் ஆவியால் எதையும் செய்யமுடிகிறது. அது லிப்டைக் கட்டுப்படுத்துகிறது, மின்சாரத்தை, செல்போன் சிக்னல்களைத் துண்டிக்கிறது, ஜெராக்ஸ் எடுக்கிறது. இவ்வளவு வலிமையிருக்கும் அதனால் ஏன் தன்னுடைய நோக்கத்தை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. தான் கொல்ல வேண்டியவர்கள் அலுவலகத்தில் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருக்க அப்பாவிகளான கவினையும், அம்ரிதாவையும் அது கொல்ல முயல வேண்டிய அவசியம் என்ன? ஆவியின் ப்ளாஷ்பேக் காட்சி, ஐடி நிறுவன ஊழியர்களின் மன அழுத்தம், நிம்மதியின்மை போன்ற விஷயங்களைப் பேசியிருப்பது எல்லாம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் அவை படத்தின் இறுதியில் மட்டுமே வருவதால் எடுபடாமல் போகிறது.

படத்தின் நல்ல தருணங்கள் ஆங்காங்கே மட்டும் வருவதாலும், திரைக்கதையில் ஏற்படும் தொய்வுகளாலும் படத்தின் இரண்டு முக்கியப் பாத்திரங்கள் படும் இன்னல்களும், க்ளைமாக்ஸ் காட்சியும் பார்வையாளர்களுக்கு எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

படத்தின் ஆரம்பக் காட்சிகளுக்கு கத்தரி போட்டு, திரைக்கதையின் சுவாரஸ்யத்தை இன்னும் கூட்டியிருந்தால் தமிழ் சினிமாவின் தலைசிறந்த திகில் படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் ‘லிப்ட்’.

FOLLOW US

WRITE A COMMENT

x