முதல் பார்வை - ஆகாஷவாணி


முதல் பார்வை - ஆகாஷவாணி

1980களில் அடர்ந்த காட்டுக்கு நடுவில் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் ஒரு மலைக்கிராமம். அங்கு மிக சொற்ப எண்ணிக்கையின் வாழும் பழங்குடியின மக்களை அடக்கி ஆண்டு வருகிறார் ஒரு ஜமீன்தார்.

அவரை அந்த மக்கள் ஒரு கடவுளாகவே பாவித்து வழிபட்டு வருகின்றனர். அவரும் அவரது ஆட்களும் என்ன அட்டூழியங்கள் செய்தாலும் அதை கடவுளின் செயல் என்று சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறனர். இப்படியான சூழலில் அந்த கிராமத்துக்குள் ஒரு பழைய ரேடியோ ஒன்று வந்து சேர்கிறது. ரிப்பேர் ஆகி அவ்வப்போது சப்தங்களை வெளிப்படுத்தும் அந்த ரேடியோவை கடவுள் என்று நினைத்து அந்த மக்கள் வழிபடத் தொடங்குகின்றனர். அதிலிருந்து வரும் அரைகுறை சிக்னல்களை கடவுளின் வார்த்தைகள் என்று கேட்கத் தொடங்கின்றனர். இத்தனை நாளும் தன்னுடைய பேச்சைக் கேட்டு வந்த மக்கள் இப்போது அந்த ரேடியோவின் பேச்சைக் கேட்பது ஜமீன்தாரின் ஈகோவை சீண்டுகிறது. இதன் பின்னர் என்னவானது என்பதற்கான பதிலே ‘ஆகாஷவாணி’.

படத்தின் தொடக்கத்தில் விண்வெளியிலிருந்து கிளம்பும் கேமரா அங்கிருந்து இறங்கி பூமிக்கு வந்து ஆந்திராவின் அடர்ந்த காடுகளுக்குள் பயணிக்கும்போதே படம் நம்மை திரைக்குள் இழுத்து விடுகிறது. முதல் 20 நிமிடத்திலேயே படம் இதை நோக்கித் தான் நகரப் போகிறது என்பதை எந்தவித இடைச் செருகலும் இல்லாமல் நேரடியாக சொல்லிவிடுகிறார் இயக்குநர். கிராமத்தில் ஒவ்வொரு மரணம் நிகழும்போதும் வானில் தோன்றும் ‘மரண நட்சத்திரம்’, ‘டிரான்ஸ்ஃபார்மர்’ தூண், பள்ளி ஆசியன சமுத்திரக்கனி காந்த சக்தி குறித்து விளக்கியதை கிளைமாக்ஸில் பயன்படுத்தியது உள்ளிட்ட காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

ஆரம்பத்தில் ஒரு சில நிமிடங்களே வரும் சமுத்திரக்கனி அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டாம் பாதியில்தான் மீண்டும் படத்தில் வருகிறார். எனினும் தான் வரும் காட்சிகளில் எந்தவித குறையும் சொல்லமுடியாத அளவுக்கு நடிப்பில் மிளிர்கிறார். வழக்கமாக பக்கம் பக்கமாக அறிவுரை கூறுகிறார் என்று சமுத்திரக்கனி பற்றி இணைய வெளியில் விமர்சகர்கள் குற்றச்சாட்டு வைப்பதுண்டு. இப்படத்தில் அதற்கான காட்சிகள் ஏராளம் இருந்தும் அதனை தவிர்த்திருக்கிறார். உதாரணமாக கிராம மக்களுக்கு வில்லனின் சுயரூபத்தை புரிய வைக்க ரேடியோவில் ஓடும் இரணியன் - பிரகலாதா கதையை பயன்படுத்துவது க்ளாஸ் ரகம்.

சமுத்திரக்கனிக்கு இணையாக பாராட்டப்படவேண்டிய இன்னொருவர் பிரபல மைம் கலைஞரான மைம் மது. படம் முழுக்க தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். படத்தில் நடித்திருப்பவர்களில் பெரும்பாலானோர் மேடை நாடகக் கலைஞர்கள் என்பதால் யாருடைய நடிப்பில் பெரிய குறை தெரியவில்லை. ஜமீன்தாராக வரும் வினய் வர்மா மற்றும் அவருடை அடியாளாக வருபவரும் நடிப்பில் மிரட்டியுள்ளனர்.

இசை கால பைரவா. பின்னணி இசையில் மனதை தொட்டு விடுகிறார். பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. ஆங்காங்கே தந்தை கீரவாணியின் சாயல் தெரிகிறது. சுரேஷ் ராகுடுவின் ஒளிப்பதிவில் காடுகளும், மலைகளும் கண்ணுக்கு விருந்தாகின்றன.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால் மைம் மதுவின் மகனாக வரும் சிறுவனுக்கும் ரேடியோவுக்கு இடையிலான பிணைப்பை காட்டுவதற்கு ஏன் இவ்வளவு காட்சிகள்? முதல் ஓரிரு காட்சிகளிலேயே பார்வையாளருக்கு இயக்குநர் சொல்லவருவது புரிந்துவிடும்போது அதை மீண்டும் மீண்டும் காட்டுவது சலிப்பூட்டுகிறது. கிட்டத்தட்ட படத்தின் மையக்கதையே இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி வந்தபிறகு தான் தொடங்குகிறது. அதற்கு முன்பு வரை இருக்கும் தேவையற்ற காட்சிகள் பலவற்றுக்கும் கத்திரி போட்டிருக்கலாம். அதே போல கிராம மக்கள் அந்த ரேடியோவை கடவுளாக ஏற்றுக் கொள்வதற்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். சரியாக கிராம மக்கள் பிரார்த்தனை செய்யும்போது ரேடியோவில் இருந்து அதற்கேற்ற வார்த்தைகள் வருவது லாஜிக் மீறல் என்றாலும் திரைக்கதை ஓட்டத்தில் அது ஒரு பெரிய குறையாக தெரியவில்லை.

ரேடியோவில் ஓடும் இரணியன் - பிரகலாதா கதையை க்ளைமாக்சில் காட்சியாக அமைத்திருப்பது ஒட்டவில்லை. அதுவரை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த திரைக்கதையில் சினிமாத்தனமே மேலிடுகிறது.

ஒட்டுமொத்தமாக மசாலா படங்களுக்குப் பேர் போன தெலுங்கு சினிமாவில் இத்தைகய ஒரு முயற்சியை மேற்கொண்ட புதுமுக இயக்குநர் அஸ்வின் கங்காராஜுவை மனதார பாராட்டலாம்.

FOLLOW US

WRITE A COMMENT

x