கதை 1940களில் தொடங்குகிறது. ஊரின் மிகப்பெரிய ஜமீன்தாரான வீர சேதுபதி (விஜய் சேதுபதி) தனது வருங்கால மனைவிக்காக ஒரு பிரம்மாண்ட அரண்மனையைக் கட்டுகிறார். அந்த அரண்மனையின் அழகில் மயங்கும் மற்றொரு ஜமீன்தார் (ஜெகபதிபாபு) அதேபோல ஒரு அரண்மனை தனக்கும் வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அடுத்த காட்சி 1970களில் விரிகிறது. ஜெகபதிபாபுவின் இரண்டாம் தலைமுறை உறவினர்களான மதுமிதா, சுப்பு பஞ்சு தம்பதியர் தங்கள் ஒரே மகளுடன் அந்த அரண்மனையில் வந்து தங்குகிறார்கள். அந்த அரண்மனையில் ஆவியாக அலையும் யோகி பாபு சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் மூவரும் இறந்து ஏற்கெனவே அங்கு ஆவியாக இருக்கும் சேத்தன், தேவதர்ஷினி, சுரேகாம் ஜார்ஜ் உள்ளிட்ட ஆவிகள் குழுவுடன் இணைகிறார்கள்.
நிகழ்காலத்தில் ராஜேந்திர பிரசாத், அவரது மனைவி ராதிகா, மகள் டாப்ஸி, மகன் சுனில் ஆகியோர் சின்ன சின்ன திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை ஓட்டுகின்றனர். இதற்கிடையே ஜெகபதி பாபுவின் பேரனான சுரேஷ் மேனனும், அவரது பேரனும் காவல் அதிகாரியுமான லிங்காவும் அரண்மனையைக் கைப்பற்றும் நோக்கோடு டாப்ஸி குடும்பத்தை அந்த அரண்மனைக்குள் அனுப்புகின்றனர். அவர்களது எண்ணம் நிறைவேறியதா? டாப்ஸி குடும்பம் பேய்களிடமிருந்து தப்பித்ததா என்பதே ‘அனபெல் சேதுபதி’ சொல்லும் கதை.
ஒரு பழங்கால அரண்மனை, அதற்குள் நடக்கும் மர்ம மரணங்கள், அரண்மனைக்குள் சென்று பேய்களிடம் சிக்கிக்கொள்ளும் திருடர்கள். படிக்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும் இந்தக் கதைக்களத்தை நம்பி படத்தைப் பார்க்க உட்கார்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. படம் தொடங்கி ஏறக்குறைய இடைவேளை வரை எந்தவொரு சுவாரஸ்யமோ, உற்சாகமோ இன்றி படம் நகர்கிறது. இடைவேளையின்போது நாம் நிமிர்ந்து உட்கார நினைக்கும்போது மீண்டும் பெட்டிப் பாம்பாய் சுருண்டு விடுகிறது. முதலில் இந்தக் கதையை எப்படி கோர்வையாய் சொல்லி விஜய் சேதுபதி, டாப்ஸி போன்ற நடிகர்களை நடிக்கவைக்க இயக்குநர் சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை.
1940களின் பின்னணியில் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் நடக்கின்றன. ஆனால், அப்போதும் விஜய் சேதுபதி விஜய் சேதுபதியாகவே வருகிறார். படத்தில் குறைவான காட்சிகள்தான் என்றாலுமே கூட நடிப்புக்காக எந்த ஒரு மெனக்கெடலும் அவரிடம் இல்லை. படத்தின் முழுக் கதையுமே டாப்ஸி தோளில்தான் சவாரி செய்கிறது. எனினும் அவரது நடிப்புக்கு வேலை கொடுக்கும் ஒரு காட்சியைக் கூட படத்தில் இயக்குநர் வைக்கவில்லை. ராதிகா, ராஜேந்திர பிரசாத், சேத்தன், தேவதர்ஷினி என நல்ல நடிகர்கள் அனைவரும் வீணடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முந்தைய படங்களில் ஜெகபதி பாபு என்ன செய்தாரோ அதையேதான் இந்தப் படத்திலும் செய்கிறார்.
இதை காமெடி பேய்ப் படம் என்று படக்குழு தொடர்ந்து விளம்பரப் படுத்தி வந்தது. படத்தில் திகிலும் இல்லை காமெடியும் இல்லை. யோகி பாபுவின் ஒன்றிரண்டு கவுன்ட்டர்களைத் தவிர படத்தில் எந்த இடத்தில் காமெடி கை கொடுக்கவில்லை. இப்படத்துக்கு எதற்கு வெண்ணிலா கிஷோர் என்ற மர்மம் மட்டும் படம் முடிந்தும் விலகவில்லை.
படம் தொடங்கியது முதல் இறுதி வரை கதாபாத்திரங்கள் காமெடி செய்ய முயல்வது சிரிக்க வைப்பதற்கு பதிலாக எரிச்சலை வரவைக்கிறது. அதை காமெடி என்று பார்ப்பவர்களை நம்பவைப்பதற்காக மட்டும் கிருஷ்ணா கிஷோரின் பின்னணி இசை பயன்பட்டுள்ளது. பாடல்களில் ‘வானில் போகும் மேகம்’ மற்றும் ‘அனங்கே’ பாடல்கள் காதுகளுக்கு இதம். பிரம்மாண்ட அரண்மனையைக் கண்களுக்கு விருந்தாக்கியதில் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் கௌதமின் உழைப்பு தெரிகிறது.
பிரம்மாண்ட அரண்மனை செட் எல்லாம் சரிதான். ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்தும் அரண்மனையின் உட்புறத்தில் ஒரு தூசி கூட படாமல் பளிச் என்று இருக்கும் மர்மம் என்ன? ஒருவேளை பேய்களே பொழுதுபோகாமல் அரண்மனையை தினமும் சுத்தம் செய்கிறதோ என்ற சந்தேகம் பார்ப்பவர்களுக்கு எழுகிறது.
முதல் பாதியோடு ஒப்பிடுகையில் இடைவேளைக்குப் பிறகு வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் போரடிக்காமல் செல்கின்றன. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. டாப்ஸிக்கு தீபா வெங்கட்டின் பின்னணிக் குரல் சுத்தமாகப் பொருந்தவில்லை. தொடர்ந்து நயன்தாராவுக்கே குரல் கொடுத்த வந்ததாலோ என்னவோ டாப்ஸி பேசும் காட்சிகள் அனைத்திலும் நம்மையே அறியாமல் நயன்தாரா நினைவுக்கு வந்துவிடுகிறார்.
காமெடி தொடங்கி காட்சியமைப்பு வரை அனைத்தும் 30, 40 வருடங்களுக்கு முந்தைய அரதப் பழைய டெக்னிக்குகளை இயக்குநர் பயன்படுத்தியுள்ளார். காட்சிக்கு காட்சி அமெச்சூர்தனமே வெளிப்படுகிறது. படத்தில் திகில் காட்சிகளே இல்லை என்ற குறையை படத்தின் இறுதிக் காட்சியில் இயக்குநர் தீர்த்து வைக்கிறார். ஆம். படத்துக்கு இரண்டாம் பாகம் வேறு வருகிறதாம்.
செய்வதற்குப் பயனுள்ள வேலைகள் எதுவும் இல்லை என்று நினைப்பவர்கள் தாராளமாக ஒருமுறை படத்தைப் பார்க்கலாம்.
WRITE A COMMENT