திரை விமர்சனம்: ஹோம்


திரை விமர்சனம்: ஹோம்

புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிப் பேசும் படமே ‘ஹோம்’.

தனது முதல் ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தின் கதையை முடிக்க முடியாமல் திணறுகிறார் ஆண்டனி (ஸ்ரீநாத் பாஸி). தயாரிப்பாளரின் வற்புறுத்தலால் ஊரில் இருக்கும் தனது வீட்டுக்குச் சென்று கதையை எழுத தீர்மானிக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து தனது மகன் ஊருக்கு வரவிருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறார் ஆலிவர் ட்விஸ்ட் (இந்திரன்ஸ்). ஆனால், ஒப்பந்தமாகியிருப்பது சூப்பர் ஸ்டாரின் படம் என்பதால் ஆண்டனிக்கு அழுத்தம் மேல் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் வீட்டில் இருக்கும் யாரிடம் அவரால் இயல்பாகப் பழக முடியவில்லை. செல்போனே கதி என்று கிடக்கிறார்.

இவர்களுக்கிடையே வீட்டில் நடக்கும் சிறு சிறு விஷயங்களைக் கூட சமூக வலைதளங்களில் பதிவு செய்து இணையமே உலகமாக வாழ்கிறார் ஆலிவரின் இளைய மகன் சார்லஸ் (நஸ்லென்). முன்பு நர்ஸாகப் பணிபுரிபுரிந்து விட்டு இப்போது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார் குட்டியம்மா (மஞ்சு பிள்ளை). நினைவுகள் அனைத்தையும் மறந்து சிறு குழந்தையாக வாழ்கிறார் ஆலிவரின் அப்பா. இவர்களைச் சுற்றி நிகழும் உறவுச் சிக்கல்களே படத்தின் மையக் கதை.

மகன்களுக்கும் தனக்கும் இடையே இருக்கும் தொழில்நுட்ப இடைவெளியை நிரப்ப எண்ணி புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்குகிறார் ஆலிவர். ஆனால், அதுவே அவர்களுக்கு இடையிலான அந்த இடைவெளியைப் பெரும் விரிசலாக மாற்றுகிறது. ஒரு கட்டத்தில் மகனின் சினிமா வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் நிலைக்குக் கொண்டுசென்று விடுகிறது. இதற்குப் பிறகு என்னவானது என்பதற்கான பதிலே ‘ஹோம்’.

ஆலிவராக முன்னணி நகைச்சுவை நடிகர் இந்திரன்ஸ். ஒல்லியான தேகம், யார் வம்புக்கும் போகாத முகம் என நடுத்தரக் குடும்பத்து அப்பாக்களைக் கண்முன் நிறுத்துகிறார். மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாகச் சுமந்து செல்கிறார். மகன் தன்னை அவமானப்படுத்தும் போது மனைவிக்குத் தெரியாமல் வீட்டுக்கு வெளியே சென்று அழும்போதும், தன்னுடைய அப்பாவித்தனத்தால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க திணறும்போதும் தான் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்து விடுகிறார். அவர் கலங்கும் காட்சிகளில் நம்மையும் அறியாமல் நம் கண்களும் கலங்கி விடுகின்றன. படம் முடிந்தாலும் ஆலிவர் பாத்திரம் நம் மனதை விட்டு அகல மறுக்கிறது.

‘கும்பலாங்கி நைட்ஸ்’, ‘வைரஸ்’, ‘கப்பேலா’ எனத் தொடர்ந்து தேர்ந்த நடிப்பை வழங்கி வரும் ஸ்ரீநாத் பாஸிக்கு இது மற்றொரு பேர் சொல்லும் படம். தனது கதாபாத்திரத்தின் கனமறிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மஞ்சு பிள்ளை, நஸ்லென் கபூர், ஆண்டனியின் மாமனாராக வரும் ஜோசப் லோபஸ், மனநல மருத்துவராக வரும் விஜய் பாபு, ஆலிவர் நண்பராக நடித்திருக்கும் ஜானி ஆண்டனி என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை எந்தக் குறையும் இன்றி நிறைவாகச் செய்துள்ளனர். ஒரே காட்சியில் வந்தாலும் நடிகர் அனூப் மேனன் மனதில் நின்று விடுகிறார்.

இயக்குநர் ரோஜின் தாமஸுக்கு இது மூன்றாவது படம். இப்படத்தின் சிறப்பே இப்படத்தில் எளிய கதை சொல்லல் முறைதான். படம் முழுவதும் எந்த ஒரு காட்சியிலும் மிகைப்படுத்தலோ, செயற்கைத்தனங்களோ இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். தலைமுறை இடைவெளியை முகத்தில் அறையும் விதத்தில் காட்சிப்படுத்தியது, மனநல மருத்துவரிடம் செல்வது வெட்கப்பட வேண்டிய விசயம் அல்ல என்று அழுத்திச் சொன்னது போன்ற பல முத்திரைகளைப் படத்தில் பதித்துள்ளார்.

படத்தின் நீளம் 2 மணி நேரம் 40 நிமிடம் என்றாலும் ஒரு காட்சியிலும் அலுப்பு தெரியவில்லை. இத்தனைக்கும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளன. ஒரு படத்தின் வெற்றிக்கும் பிரம்மாண்ட செட்களோ, அதிரவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளோ தேவையில்லை என்பதை மலையாள சினிமா மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது.

படத்தின் ஏதேனும் ஒரு காட்சியிலாவது பார்ப்பவர்கள் படத்தோடு தம்மையும் தொடர்புப்படுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். படத்தின் இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதையின் ஓட்டத்துக்குப் பெரும் பலம். படம் தொடங்கியது முதலே ஆங்காங்கே நம்மைக் கலங்க வைக்கும் சில காட்சிகள் இருந்தாலும் படத்தின் கடைசி 20 நிமிடங்கள் இதயத்தைப் பிழிகிறது. க்ளைமாக்ஸில் திரையில் இருப்பவர்கள் கண்ணில் வழியும் கண்ணீர் நமக்கும் வருவது தவிர்க்க முடியாததாகிறது.

குடும்பத்தோடு உணர்ச்சி பொங்க அழுது, சிரித்து, பார்க்கவேண்டிய மலையாள சினிமாவின் மற்றொரு மாஸ்டர் பீஸ் இந்த ‘ஹோம்’.

FOLLOW US

WRITE A COMMENT

x