அன்பே வெறுப்பின் அடிப்படை. அன்பைப் போதிக்கும் மதங்களின் பெயரால் பரவும் வெறுப்பு நமக்கு உணர்த்தும் சேதி இது. மதங்களின் மீதான அபரிமித பிடிப்பினால் உருவாகும் வெறுப்பும் அதனால் நிகழும் போர்களும் உயிர் பலிகளும் வரலாற்றுக்கும் புதிதல்ல; நமக்கும் புதிதல்ல. தமது இருப்பை உறுதி செய்யவும், தமது மேன்மையை நிலைநாட்டவும் மனிதனை மேம்படுத்தும் நோக்கில் உருவான மதங்கள் தொடர்ந்து வன்முறையையே தேர்ந்தெடுத்துள்ளன. எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.
மனிதர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் இந்த மதங்களின் வெறுப்பைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு யாரும் துணிவது இல்லை. விரும்புவதும் இல்லை. இந்த நிலையில், பவுத்த மதத்தின் பெயரால் எப்படி இலங்கையில் இரக்கமற்ற வன்முறைக்கு அடிகோலப்பட்டது என்பதை அரசியல் பின்னணியுடன் அண்மையில் காட்டியது 'மேதகு' திரைப்படம். அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் ‘குருதி’ எனும் மலையாளத் திரைப்படம் சமூகத்தின் சாமானிய மனிதர்கள் பார்வையில் இதை அணுகுகிறது. சமூகத்தின் மனசாட்சியை நோக்கி இந்தத் திரைப்படத்தில் அதன் இயக்குநர் மனு வாரியர் எழுப்பியிருக்கும் நியாயமான கேள்விகள் மதங்களின் தேவையையே கேள்விக்குள்ளாக்குகின்றன.
கதைக்களம்
கேரள மாநிலத்தில் உள்ள அழகிய மலையோர கிராமம் ஒன்றில் இந்தக் கதை நிகழ்கிறது. ஒரு நிலச்சரிவில் மனைவியையும் குழந்தையையும் இழந்த 30களில் இருக்கும் இப்ராஹிம் (ரோஷன் மேத்யூ) இந்தக் கதையின் நாயகன். இழப்பின் துயரிலிருந்து மீள்வதற்கு ஆன்மிகத்தைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கும் மென்மையான மனிதர் அவர். மகள் வாழ்வதாகத் தான் நம்பும் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்கிற வேட்கையுடன், ஒரு துறவியின் மனநிலையில் வாழ்ந்து வருகிறார்.
அவருடன் தந்தை மூஸா (மம்முகோயா), தம்பி ரசூல் (நஸ்லன் கபூர்) ஆகியோர் வாழ்கின்றனர். எந்நேரமும் சிறுநீர்ப்பையைச் சுமந்துகொண்டு வாழும் சூழ்நிலையில் இருப்பவர் மூஸா. தன்னுடைய சிறுபான்மைச் சமூகம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறது என்கிற எண்ணத்தின் உந்துதலால், சற்று உரசினால்கூட வெடித்துச் சிதறும் நிலையில், மதத்தின் மீது அபரிமிதப் பற்றுடன் வாழும் சிறுவன் ரசூல்.
அதே நிலச்சரிவில் மனைவியைப் பறிகொடுத்த பிரேமன் (மணிகண்ட ராஜன்) பக்கத்து வீட்டில் வாழ்கிறார். அவருடைய ஒரே தங்கை சுமதி (ஸ்ரீந்தா), இப்ராஹிம் மீது காதலுடன், அவர் குடும்பத்துக்காக அனைத்தும் செய்து தருகிறவர். சுமதியின் காதலை மனைவியின் நினைவலைகள், மதம், குடும்பம், சமூகம் சார்ந்த காரணங்களைக் கூறி மிகுந்த கண்ணியத்துடன் மறுக்கிறார். சுமதியும் அதே கண்ணியத்துடன் காதலைத் தொடர்கிறார்.
அந்தக் கோர நிலச்சரிவினால் நேர்ந்த உயிரிழப்பின் வலிகளை, ஒருவர் தோள் மீது மற்றவர் சாய்ந்து பயணிப்பதன் மூலமும், பரஸ்பர அன்பின் மூலமும் கடக்க இரு குடும்பத்தினரும் முயல்கிறார்கள். மத வேறுபாடுகளை மீறி அவர்களின் குடும்பங்களுக்கு இடையே நிலைத்திருக்கும் அந்த அன்னியோன்ய உறவையும் மனித நேயத்தையும் சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் ஆகியவற்றின் துணையுடன் மதங்களின் மீதான பிடிப்பு சிதைக்க முயன்றால் என்ன நிகழும் என்பதே இந்தத் திரைப்படம்.
கொப்பளிக்கும் வன்மம்
இப்ராஹிமின் வீட்டிற்குள் ஒரு காவல் அதிகாரி (முரளி கோபி) ஒரு கைதியுடன் (சாகர் சூர்யா) அத்துமீறி நுழையும் அந்த இரவில், இந்தத் திரைப்படம் தன்னுடைய களத்துக்குள் நுழைகிறது. முஸ்லிம் பெரியவர் ஒருவரைக் கொன்றதற்காக விஷ்ணு கைது செய்யப்பட்டு இருக்கிறார். சிறைக்குச் செல்லும் வழியில், கொல்லப்பட்டவரின் மகன் லயிக் (பிருத்விராஜ்) அவர்களைக் கொல்ல முயல்கிறார். தாக்குதலிருந்து தப்பிக்க அவர்கள் அடை புகும் வீடு இப்ராஹிம் வீடு. இஸ்லாமியர் வீடு. உணவு கொடுக்க வந்த சுமதியும் அங்கே அடைபடுகிறார்.
அங்கே வரும் லயிக், காவல் அதிகாரியைக் கொல்கிறார். மனிதநேயம் சார்ந்து விஷ்ணுவைக் காப்பாற்ற இப்ராஹிம் நினைக்கிறார். மதம் சார்ந்து விஷ்ணுவைக் கொல்ல நினைக்கிறார் அவருடைய தம்பி ரசூல். லயிக் தன்னுடைய தந்தைக்கு நேர்ந்த கொடுமை பற்றி அளிக்கும் தன்னிலை விளக்கமும், அங்கே எழும் சூழ்நிலைகளும் இப்ராஹிமின் மனித நேயத்தை அசைத்துப் பார்க்கின்றன. அந்தச் சூழலில், மதம் சார்ந்து விஷ்ணுவைக் காப்பாற்ற நினைக்கிறார் சுமதி. சமூகத்தின் சட்ட திட்டங்களும், சரி-தவறு என்கிற நியாய தர்மங்களும் அர்த்தம் இழக்கும் சூழலில், மனிதர்களிடம் வெளிப்படும் வெறுப்புக்கும் வன்மத்துக்கும் வன்முறைக்கும் மதங்களும் அவற்றின் மீதான வெறியும் எப்படித் தீனி போடுகின்றன என்பதே மீதிக்கதை.
உன்னதத் திரை அனுபவம்
இன்றைய சூழலில், மத அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அது தங்களுக்கு ஏராளம் உள்ளது என்பதை எழுத்தாளர் அனிஷும், இயக்குநர் மனு வாரியரும் இந்த படம் மூலம் உணர்த்தியுள்ளார்கள். கனமான கதை, அதற்குப் பொருத்தமான திரைக்கதை, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, உயர்தரமான தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் இயக்குநர் மனு வாரியர் நமக்கு ஓர் உன்னதத் திரை அனுபவத்தை அளித்திருக்கிறார். படம் முழுவதும் ஆக்கிரமிக்கும் இரவுக் காட்சிகளை அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கும் விதம் மலைப்பை ஏற்படுத்துகிறது. அகிலேஷ் மோகனின் கச்சிதமான எடிட்டிங், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் வழங்கியிருக்கும் திகில் கூட்டும் பின்னணி இசை போன்றவை இந்தப் படத்துக்குக் கூடுதல் வலு சேர்க்கின்றன.
வாழ்க்கைப் பாடம்
மத நம்பிக்கை, மதவெறியாகி, மதவெறுப்பாக உருவெடுக்கும் ஓர் அசாதாரண சூழ்நிலைக்குத் தள்ளப்படும் நம்மைப் போன்ற சாமானிய மனிதர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள்? மதவெறி தூண்டப்பட்ட அவர்கள் அதிலிருந்து மீள வழியுண்டா? மனிதம் நிலைக்குமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இன்று நம்முடைய சமூகத்தில் மதங்களின் பெயரால், அது சார்ந்த அரசியலின் விளைவால், எல்லை தாண்டி வரும் பயங்கரவாதத்தின் ஈர்ப்பால் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அவலங்களின் மூலமாகவே பதில் சொல்லியிருக்கும் விதம் நம்முடைய தேசத்தின் ஆன்மாவை உலுக்குகிறது. இனிவரும் நாட்களில் வரவிருக்கும் ஆபத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது.
முகலாய மன்னர் அவுரங்கசீப் செய்த தவறுகளைப் பட்டியலிட்டு, சிறுபான்மையினர் மீதான தன்னுடைய வெறுப்பு குறித்து விஷ்ணு விளக்கம் அளிக்க முயலும்போது, எங்களுக்கும் அவுரங்கசீப்புக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று இப்ராஹிமின் தந்தை கேட்கும் ஒற்றைக் கேள்விக்கான பதிலில் நம் நாட்டின் எதிர்காலம் அடங்கியுள்ளது. ’குருதி’ வெறும் படமல்ல; நம் அனைவருக்குமான பாடம்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
WRITE A COMMENT