Published : 27 Sep 2025 11:39 AM
Last Updated : 27 Sep 2025 11:39 AM
மரணத்தை தழுவும் தருவாயில் வாழ்வுக்கு சாவுக்கும் இடையில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த ஓரிரு நிமிடங்களில் திடீரென ஓர் மாய உலகத்துக்குள் நாம் நுழைந்து அங்கே கொடுக்கப்படும் ஆபத்தான விளையாட்டுக்களை ஆடி ஜெயித்தால் மட்டுமே மீண்டும் பழைய வாழ்க்கைக்கு, அல்லது தோற்றால் நிரந்தர மரணம் என்ற நிலை ஏற்பட்டால்? அதுதான் ‘அலைஸ் இன் பார்டர்லேண்ட்’ (Alice in Borderland) தொடரின் மையக்கரு.
நெட்ஃப்ளிக்ஸில் ஆபத்தான மரண விளையாட்டு என்ற கதைக்களத்துடன் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய ‘கல்ட்’ அந்தஸ்த்தை பெற்ற ‘ஸ்குவிட் கேம்’ தொடரை நாம் அறிவோம். ஆனால் அதற்கு முன்பாகவே அதே போன்ற கதைக்களத்துடன் வெளியான ஜப்பானிய தொடரான ‘அலைஸ் இன் பார்டர்லேண்ட்’ முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றாலும் ‘ஸ்குவிட் கேம்’ அளவுக்கு கொண்டாடப்படவில்லை.
ஆனாலும் ‘ஸ்குவிட் கேம்’ தொடருக்கு சற்றும் குறைவில்லாத வகையில் விறுவிறுப்பும், பதைபதைப்பும் கொண்ட தொடர் இது. முதல் இரண்டு சீசன்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் 3-வது சீசன் வெளியாகியுள்ளது.
முந்தைய சீசனின் இறுதியில் ஆபத்தான விளையாட்டுகளை ஆடி ஜெயித்துவிட்டு மீண்டும் நிஜ உலகத்துக்கு திரும்பும் அரிசு மற்றும் உசாகி இருவரும் தற்போது கணவன் மனைவியாக இருக்கின்றனர். வான்வெளியில் இருந்து எரிகல் விழும்போது மரணத்தின் விளிம்பில் பார்டர்லேண்டில் அவர்கள் ஆடிய அந்த விளையாட்டுகள் குறித்த எந்த ஞாபகமும் இருவருக்கும் இல்லை.
இன்னொரு புறம் மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கை குறித்த ஆராய்ச்சியில் இருக்கும் நடக்க இயலாத மாற்றுத் திறனாளி பேராசிரியர் ஒருவருக்கு பார்டர்லேண்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் மூலம் உசாகியும் அங்கு இழுத்துச் செல்லப்படுகிறார். இருவரும் கோமா நிலையில் இருப்பதை பார்க்கும் அரிசு, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கியிருக்கும் தன் மனைவியை மீட்க அவரும் பார்டர்லேண்டுக்குள் செல்கிறார். இதன் பிறகு மீண்டும் மரண விளையாட்டு தொடங்குகிறது.
முதல் சீசனில் இந்த கேமை நடத்துபவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? - இதுபோன்ற கேள்விகளுக்கு கடைசி வரையில் விடை இருக்காது. ஆனால் இரண்டாவது சீசனில் ஓரளவு அதற்கான விடைகளுடன் தொடரை முடித்திருந்தாலும், கடைசியில் ஒரு ஜோக்கர் கார்டை வைத்து பார்வையாளர்களின் குறுகுறுப்பை தூண்டி இருப்பார்கள். இந்த சீசனும் அதே ஆர்வத்துடன் தொடங்கி பரபரவென நகர்ந்து கொண்டே இருக்கிறது.
முந்தைய சீசன்களில் இருந்தது போலவே சுவாரஸ்யமான கேம்கள், பதைபதைக்க வைக்கும் காட்சிகள், உறவுச் சிக்கல், மனித மனங்களின் தன்மை என அனைத்து பட்டியலிலும் பாஸ் மார்க் வாங்குகிறது தொடர். ஆனாலும் தொடக்கத்தில் இருந்த இந்த சுவாரஸ்யம், இரண்டாவது கேமிலேயே சற்று மங்கி விடுவதும் உண்மை. காரணம், ஒரு வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் நடக்கும் கேமை ஆடியன்ஸுக்கு புரியவைக்கவே கிட்டத்தட்ட ஒரு முழு எபிசோடை எடுத்துக் கொள்கின்றனர். அப்படியும் அந்த ஜோம்பி ஹன்ட் கேம் கடைசி வரை சரியாக புரியவில்லை. குத்துமதிப்பாக நாம் ஒருவழியாக புரிந்து கொள்ளும் சூழலில் அந்த கேம் முடிந்தே போய் விடுகிறது.
எனினும் அடுத்தடுத்த கேம்கள் எதிர்பார்த்ததை விட சுவாரஸ்யமாகவே எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ரயிலில் விஷ வாயுவில் இருந்து தப்பிக்கும் கேம், இறுதிப் போட்டியாக ஒவ்வொரு அறையிலும் எதிர்காலத்தைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு போட்டியாளர்கள் முடிவெடுக்கும் காட்சிகள் எழுதப்பட்ட விதம் பார்ப்பவர்களை பதைபதைப்புக்குள்ளாக்கி விடுகிறது.
முந்தைய சீசன்களை விட இதில் உணர்வுபூர்வ காட்சிகள் குறைவு. காரணம் நாயகன், நாயகியை தவிர மற்ற எந்த கதாபாத்திரமும் நமக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்களுக்கான பின்னணியும் கூட நமக்கு கடைசியில் விரிவாக சொல்லப்படுகின்றன. இதுவே முந்தைய சீசன்களில் பிரதான கதாபாத்திரங்கள் தவிர்த்து கூட வரும் கேரக்டர்களின் மரணம் கூட பார்க்கும் நம்மை வெகுவாக பாதித்துவிடும். அது இந்த சீசனில் முற்றிலுமாக மிஸ்ஸிங் என்றே சொல்லவேண்டும்.
வழக்கம் போல தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு அபாரம். பரபரப்பான ஜப்பான் சாலைகளை கிராபிக்ஸ் என்றே சொல்லமுடியாத அளவுக்கு ஆள் அரவமற்றவையாக காட்டியது சிறப்பு. புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள், பரபரப்பான விளையாட்டுகள், கடைசி வரை விறுவிறுப்பு குறையான திரைக்கதை என மீண்டும் ஒருமுறை சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் ஷின்சுகே சாடோ.
மொத்தம் ஆறு எபிசோட்களைக் கொண்ட இந்த சீசன் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. வன்முறை, கோரக் காட்சிகள் மிக அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT