Last Updated : 29 Jul, 2025 05:04 PM

1  

Published : 29 Jul 2025 05:04 PM
Last Updated : 29 Jul 2025 05:04 PM

‘மெய்யழகன்’ முதல் ‘மெட்ராஸ் மேட்னி’ வரை: ஓடிடி ரிலீஸுக்குப் பின் மவுசு கூடிய அட்டகாச படைப்புகள்!

முன்பெல்லாம் சினிமாவை ‘ஏ’ சென்டர் ‘பி’, ‘சி’ சென்டர் என்று பிரிப்பதைப் போல இப்போது திரையரங்க ரசிகர்கள், ஓடிடி ரசிகர்கள் என்று இரண்டு வகையாக பிரித்து விடலாம். அந்த அளவுக்கு திரையரங்க ரசிகர்களுக்கு பிடிக்கும் சில படங்கள், ஓடிடி ரசிகர்களுக்கு பிடிக்காது. திரையரங்க வெளீயீட்டில் கண்டுகொள்ளப்படாமல் போகும் சில படங்கள் ஓடிடியில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும். வலுவான உள்ளடக்கத்துடன் வரும் ஒரு சில படங்கள் அரிதிலும் அரிதாக இரண்டு தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படுவதும் நடக்கும்.

அப்படி, சமீப காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும்போது எதிர்பார்த்த கவனத்தை பெறாமல் ஓடிடியில் வெளியாகி ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மெய்யழகன்: ‘96’ படம் பெற்ற பிரம்மாண்ட வரவேற்புக்குப் பிறகு பிரேம்குமார் இயக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பெரிய அளவிலான விளம்பரங்கள் செய்தும் திரையரங்கில் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை. ஆனால், அதற்கு நேரெதிராக படம் ஓடிடியில் வெளியான பிறகு தமிழ் ஆடியன்ஸ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாள ஆடியன்ஸும் கூட இப்படத்தை கொண்டாடியதை பார்க்க முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த சிறந்த படம் என்று குறிப்பிட்டு, மூத்த இந்தி நடிகர் அனுபம் கேர் இப்படத்தை புகழ்ந்து ட்வீட் செய்திருந்தார்.

சித்தா: ‘பண்ணையாரும் பத்மினியும்’,’ சேதுபத்’ படங்களை இயக்கிய அருண்குமாருக்கு புதிய அடையாளத்தை கொடுத்த படம் ‘சித்தா’. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை மிக ‘சென்சிடிவ்’ ஆக அணுகிய படம் இது. திரையரங்குகளில் வெளியானபோது ஓரளவு வரவேற்பை பெற்றாலும் ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு இப்படம் பரவலாக கவனத்தை ஈர்த்தது.

ஜமா: திரையரங்கில் வெளியானபோது கண்டுகொள்ளப்படாமல் போய் ஓடிடி வெளியீட்டில் சிலாகிக்கப்பட்ட மற்றொரு படம் இது. முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவுக்கு கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்தார் இயக்குநர் பபாரி இளவழகன். எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் கதைக்களத்துக்கு நேர்மையான இந்தப் படம், இன்னும் பேசபட்டிருக்க வேண்டியது. ஆனால், வெகுஜன சினிமா பார்வையாளர்களிடையே போதிய ‘புகழ்’ வெளிச்சத்தை இப்படம் பெறவில்லை. எனினும் ஓடிடியில் வெளியான பிறகு பலரும் இப்படத்தை மனதார பாராட்டினர்.

மகாராஜா: இந்தப் பட்டியலில் ‘மகாராஜா’ படத்தை ஒரு விதிவிலக்காக கருதலாம். காரணம், விஜய் சேதுபதியின் 50-வது படமான இது, திரையரங்குகிலேயே பெரும் வரவேற்பை பெற்ற படம்தான். சுமார் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்தது. ஆனால், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு இப்படம் பெற்ற வரவேற்பு மிக பிரம்மாண்டமானது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இப்படம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது ட்ரம்ப் தனது காதில் கட்டுடன் தோன்றிய புகைப்படத்தையும் ‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதியின் புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் வெளியான மீம், உலக அளவில் வைரலானது. அந்த அளவுக்கு இப்படம் ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

லெவன்: தமிழில் எப்போதுமே க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. ஆனால் ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமானது. அந்த வகையில் சமீபத்தில் க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம், திரையரங்க வெளியீட்டின்போது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பரவலாக இப்படம் பேசப்பட்டது.

மெட்ராஸ் மேட்னி: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிஞ்சிப் பூ போல சில படங்கள் தோன்றுவதுண்டு. அவை காலம் கடந்தும் தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் படங்களாக அமைந்து விடும். அப்படியான ஒரு படம்தான் இந்த ‘மெட்ராஸ் மேட்னி’. போதிய விளம்பரங்கள் செய்யப்படாததாலோ என்னவோ இப்படம் திரையரங்க வெளியீட்டின் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே பேசப்பட்டது. ஆனால், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு இதை பார்த்த அனைவருமே இப்படத்தை சமூக வலைதளங்களில் சிலாகித்தனர். மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்வியலை ஒரு தெளிந்த நீரோடை போல எந்தவித போலித்தனமும் இல்லாமல் காட்டியிருந்தது இப்படம். இந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டிய மற்ற படங்களை கருத்துப் பகுதியில் நீங்கள் பகிரலாமே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x