Last Updated : 14 Jul, 2025 09:57 AM

 

Published : 14 Jul 2025 09:57 AM
Last Updated : 14 Jul 2025 09:57 AM

Mad Unicorn: ரஜினி ஃபார்முலாவில் ஒரு தரமான சீரிஸ் | ஓடிடி திரை அலசல்

அடித்தட்டிலிருந்து மேலே வரும் ‘அண்டர்டாக்’ வகை படங்களுக்கு உலகம் முழுவதும் எப்போதுமே பெரும் வரவேற்பு இருந்து வந்திருக்கிறது. தமிழிலேயே கூட எம்ஜிஆர் தொடங்கி ரஜினி, தனுஷ் வரை அதிகம் நடித்த ஒரு ஜானர் இது. அப்படியான ஒரு கதைக்களத்தில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தாய்லாந்திலிருந்து உருவானதே இந்த ‘மேட் யுனிகார்ன்’ (Mad Unicorn).

கிராமத்தில் கடும் வறுமையில் உழலும் குடும்பச் சூழலில், மணல் குவாரியில் வேலை செய்யும் இளைஞன் சான்டி. இயல்பிலேயே புத்திசாலித்தனமும், தொழில் மூளையும் கொண்ட அவர், தன்னுடைய சமயோஜிதத்தால் நகரத்துக்கு வந்து கானின் என்ற மிகப் பெரிய தொழிலதிபருடன் அறிமுகம் ஆகிறார்.

இவர் கொடுக்கும் யோசனையின் அடிப்படையில் ஒரு டெலிவரி நிறுவனத்தை தொடங்கும் அந்த தொழிலதிபர், சான்டியை அந்த நிறுவனத்துக்கு சிஇஓ ஆக்குவதாக உறுதியளிக்கிறார். ஆனால், நிறுவனத்தின் துவக்க நாளில் அதுவரை முழு உழைப்பையும் கொட்டிய சான்டியை ஒதுக்கிவிட்டு தன்னுடைய மகனை சிஇஓ ஆக அறிவிக்கிறார். இது சான்டிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

விரைவில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி மேலே வந்து காட்டுகிறேன் என்று தொழிலதிபரிடம் சவால் விட்டுவிட்டு வெளியேறுகிறார். சொன்னபடி சவாலில் ஜெயித்தாரா என்பதே ‘மேட் யுனிகார்ன்’ தொடரின் மீதிக் கதை.

மொத்தம் 7 எபிசோட்களைக் கொண்ட இந்த லிமிடட் தொடரில் மேலே கதை அனைத்தும் 2 எபிசோட்களிலேயே வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தேவையற்ற இழுவைகள் எதுவும் இன்றி பக்கா கமர்ஷியல் பாணியில் ஒரு தரமான, விறுவிறுப்பான தொடரை தந்துள்ளார் கை நோட்டபோன்.

அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் எப்படி துரோகத்தால் வீழ்ந்து மீண்டும் மேலேறி வருகிறான் என்பதுதான் கதை என்றாலும் இன்னொரு பக்கம் உறவுகள், காதல், நட்பு என உணர்வுபூர்வமான காட்சிகளுக்கும் இடம் கொடுத்து திரைக்கதை எழுதப்பட்ட விதம் சிறப்பு. தொழிலதிபர் கானின் உடன் ஹீரோ அறிமுகமாகும் முதல் காட்சி, பிறகு நாயகியும் நாயகனும் அறிமுகமாகும் ‘லிப்ஸ்டிக்’ தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன.

குறிப்பாக மூன்று பிரதான கதாபாத்திரங்களும் வெறுப்பில் தொடங்கி நட்பாக மாறும் காட்சிகள், ஏற்கெனவே யூகிக்க முடிந்தாலும் ஹீரோ துரோகத்தால் வீழ்த்தப்படும் காட்சி எழுதப்பட்ட விதம் என ஏராளமான பாசிட்டிவ் அம்சங்கள். கிட்டத்தட்ட ஒரு தமிழ்ப் படம் பார்ப்பதை போன்ற உணர்வுதான் சீரிஸ் முழுவதுமே இருந்தது. தனுஷ் போன்ற ஒரு நடிகருக்கு 100 சதவீதம் பொருந்திப் போகும் கதை.

குறைகள் என்று பார்த்தால் தொடர் முழுக்க வரும் யூகிக்க முடியும் தருணங்கள்தான். என்னதான் உண்மைக் கதை என்றாலும் அனைத்தும் ஹீரோவுக்கு இலகுவாக கிடைத்து விடுவது போன்ற காட்சிகள் நம்பகத்தன்மையை குறைக்கின்றன. அவ்வளவு பெரிய தொழிலதிபருடன் சுலபமாக அறிமுகம் கிடைப்பது, நினைத்த நேரத்தில் சீனாவுக்கு விமானத்தில் செல்வது, தொடர் வெற்றிகள் போன்ற காட்சிகளை இன்னும் விரிவாக நம்பும்படி காட்டியிருக்கலாம்.

ஹீரோவாக நடித்திருக்கும் நடரா நோப்பரடயபோன் அந்த கதாபாத்திரத்துக்கு சிறப்பாக பொருந்தியிருக்கிறார். அவருடைய அப்பாவித்தனமான சிரிப்பும், இயல்பான நடிப்பும் கதைக்கு வலு சேர்க்கின்றன. தமிழில் நாம் பார்த்து ரசித்த ஒரு பக்கா ரஜினி பட ஃபார்முலாவில் விறுவிறு மினி வெப் தொடர் ஒன்றை பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக பார்க்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x