Published : 30 Jun 2025 10:29 AM
Last Updated : 30 Jun 2025 10:29 AM
தென்கொரியாவில் உருவாகி நெட்ஃப்ளிக்ஸ் தயவால் உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. இதன் முதல் சீசனுக்கு கிடைத்த அளப்பரிய ஆதரவால், 2-வது சீசனுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சில குறைகள் இருந்தாலும் 2-வது சீசனும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது 3-வது சீசன் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனின் இறுதியில் கேம் நடக்கும் இடம் முழுவதையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற சாங் கி-ஹூன் (Seong Gi-hun) முயற்சி தோல்வியில் முடிகிறது. தன்னை ஏன் அவர்கள் கொல்லவில்லை என்ற கேள்வியுடன் குழப்பத்தில் இருக்கும் அவர், மீண்டும் போட்டியாளர்களுடன் விடப்படுகிறார். கேம் தொடர்ந்து நடக்கிறது. பலரும் இறந்துவிடும் சூழலில் இறுதிப் போட்டி வரை செல்பவர்கள் யார்? இன்னொரு பக்கம், கேம் நடக்கும் தீவை விடாமுயற்சியுடன் தேடிக் கொண்டிருக்கும் போலீஸ் இளைஞர் வாங் ஜுன்-ஹோ மிஷன் என்ன ஆனது என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது ‘ஸ்குவிட் கேம் 3’.
‘ஸ்குவிட் கேம்’ முதல் சீசனின் வெற்றியே சிறுவயதில் பரிச்சயமான விளையாட்டுகளை எடுத்துக் கொண்டு, அதை வைத்து ஒரு திரைக்கதை எழுதி, அழுத்தமான கதாபாத்திரங்கள், ஆழமான வசனங்கள், வியக்க வைக்கும் மேக்கிங் போன்றவற்றை கொண்டு உருவாக்கி இருந்ததே. இரண்டாவது சீசனில் வலுவான ஒரு வில்லன் இல்லாதது, ஆங்காங்கே இருந்த தொய்வு என சற்றே பிசிறடித்தாலும் ஒரு முழுமையான சீசனாக அது இருந்தது.
ஆனால் இரண்டாவது சீசனிலேயே மொத்தமாக நிறைவு செய்திருக்க வேண்டிய தொடரை இன்னொரு தனி சீசனாக பிரித்து 3-வது சீசனை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். அதாவது கடந்த சீசனில் மொத்தம் 7 எபிசோடுகள். இன்னொரு 4 எபிசோடுகளை சேர்த்து அதே சீசனிலேயே தொடரை முடித்திருக்கலாம். ஆனால், 4 எபிசோடுகளை 6 எபிசோடுகளாக இழுத்து ஒரு தனி சீசனாக வெளியிட்டதுதான் குறைகளுக்கு வித்திட்டுள்ளது.
வழக்கம்போல கேம் நடக்கும் எபிசோடுகள் சிலிர்ப்பின் உச்சத்துக்கே கூட்டிச் செல்கின்றன. குறைவான கேம்களே இந்த சீசனில் இடம்பெற்றாலும் அவை எடுக்கப்பட்ட விதம் சிறப்பு. குறிப்பாக பாலத்தில் நின்று கொண்டு குதிக்கும் கேம், பூட்டப்பட்ட பல அறைகள் கொண்ட இடத்தில் நடக்கும் கேம் உள்ளிட்ட காட்சிகளில் நெகிழ்ச்சியான பல தருணங்கள் உண்டு.
திருநங்கை கதாபாத்திரம் தொடர்பான காட்சி, குழந்தையை தூக்கிக் கொண்டு பாலத்தின் மீது ஹீரோ குதிக்கும் காட்சி, தாய் - மகன் சென்டிமென்ட், கொடுத்த வாக்குறுதிக்காக குழந்தையை கடைசி வரை காப்பாற்ற போராடும் ஹீரோ என இந்த சீசனில் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட நெகிழ்ச்சி தருணங்கள் ஏராளமாக உண்டு.
இந்த சீசனின் மற்றொரு சிறப்பு அம்சம் அதன் க்ளைமாக்ஸ் கேம் படமாக்கப்பட்ட விதமும் அதன் முடிவும் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்து விடும். குழந்தையையும் ஒரு போட்டியாளராக கொண்டு வரும் காட்சி புத்திசாலித்தனமான ஐடியா.
குறைகளுக்கு வருவோம். போன சீசனில் தீவை தேடத் தொடங்கிய அந்த போலீஸ்கார இளைஞர் இந்த சீசனின் இறுதிவரை தேடிக் கொண்டே இருப்பதாக வைத்திருப்பது இந்த சீசனின் ஆகப் பெரிய பலவீனங்களில் ஒன்று. அவர் தீவை கண்டுபிடித்தும் எந்த பலனும் இல்லாமல் போவது அடுத்த குறை. பிறகு எதற்காக அந்தக் கதாபாத்திரமும், அது தொடர்பாக இத்தனை காட்சிகளும்?
இந்த கேமை பார்க்க வரும் பணக்காரர்கள், மெயின் வில்லனுக்கு கடைசி வரை எதுவுமே ஆகவில்லை என்பது மற்றொரு உறுத்தல். செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரே காட்சியில் அவர் கண்கலங்கி நல்லவராக ஆகிவிட்டதாக காட்டி அவரை நியாயப்படுத்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இது போன்ற குறைகளால் தொடர் முடியும்போது ஒரு முழுமையான உணர்வு கிடைக்கத் தவறுகிறது. என்னதான் தொடரை முடித்துவிட்டாலும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இதனை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்று ‘கறக்க’ முடிவு செய்துவிட்டதால் சீசன் முடியும்போது அதற்கான ஒரு குறிப்பையும் விட்டுச் சென்றுள்ளனர்.
மொத்தத்தில் முதல் இரண்டு சீசன்களை ஒப்பிடுகையில், இந்த சீசனில் குறைகள் அதிகம் தென்பட்டாலும், இதில் இடம்பெற்றுள்ள நெகிழ்ச்சியான தருணங்களும், சுவாரஸ்யமான கேம்களும் நம்மை இறுதிவரை ’பிங்கே -வாட்ச்’ செய்யும் அளவுக்கு கட்டிப்போட்டு விடுகின்றன. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT