Published : 28 Jun 2025 03:47 PM
Last Updated : 28 Jun 2025 03:47 PM
கரோனா காலக்கட்டத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘பஞ்சாயத்’ (Panchayat). ஆர்ப்பாட்டமில்லாத காட்சியமைப்பு, இயல்பான மனிதர்கள் என வட இந்திய கிராமங்களின் நிலையை அப்படியே கண்முன் நிறுத்திய இந்தத் தொடருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. தற்போது இந்தத் தொடரின் 4-வது சீசன் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனில் ஏற்பட்ட பெரும் சண்டையால் ஃபுளேரா கிராமத்தின் பஞ்சாயத்து செயலாளர் அபிஷேக் திரிபாதி (ஜிதேந்திர குமார்) மீது வழக்கு பதிவாகிறது. இதனால் தன்னுடைய அரசு வேலைக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்படுகிறது. தன் மீது புகார் கொடுத்த பூஷனிடம் சென்று மன்னிப்புக் கேட்டு புகாரை வாபஸ் வாங்க சொல்கிறார். ஆனால், பூஷன் பதிலுக்கு அபிஷேக்கிடம் வைக்கும் கோரிக்கையால் வேறு சில சிக்கல்கள் எழுகின்றன. இன்னொரு பக்கம் ஊரின் பஞ்சாயத்து தேர்தலுக்காக தீவிர பிரச்சாரமும் நடக்கிறது. இடையே எம்எல்ஏ சந்து சிங் உடனான பிரச்சினை, பஞ்சாயத்து ஆபீஸில் வேலை செய்யும் விகாஸின் நிலம் தொடர்பான பிரச்சினை என கிளைக் கதைகளும் விரிகின்றன.
நகரச் சூழலில் வளர்ந்த பட்டதாரி இளைஞன் ஒருவன் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு குக்கிராமத்தில் பஞ்சாயத்து செயலாளராகும் சூழலுக்கு தள்ளப்பட்டு, மெல்ல எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டு, அங்குள்ள மனிதர்களோடு இணக்கமாகிறான் என்பதே ‘பஞ்சாயத்’ தொடரின் கரு. வெகு இயல்பான காட்சியமைப்பு, அவல நகைச்சுவை, போகிற போக்கில் வட இந்திய கிராமங்களின் நிலையை பிரச்சார தொனியின்றி பதிய வைப்பது இதுதான் ‘பஞ்சாயத்’ தொடரின் சிறப்பம்சம்.
மேலே சொன்ன அனைத்து விஷயங்களும் இந்த சீசனிலும் வழக்கம் போல தவறாமல் இடம்பெற்றுள்ளன. சீசன் தொடங்கியது முதலே சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நம்மை திரைக்கதை உள்ளிழுத்துக் கொள்கிறது. கடந்த சீசனின் இறுதியில் சற்றே ஆக்ஷன் பாணிக்கு மாறிவிட்ட தொடர், இதில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் கூட ஒரு சின்ன பிசிறு கூட இல்லாமல் வெகு இயல்பான நடிப்பை வழங்குவதுதான் முதல் சீசனில் இருந்தே இத்தொடரின் பெரிய பலம். அது இந்த சீசனிலும் நீடிக்கிறது. லட்டு தொடர்பாக வைக்கப்பட்ட காட்சி, ஐடி ரெய்டு போன்ற காட்சிகள் எழுதப்பட்ட விதம் சிறப்பு.
இந்த சீசனின் பலவீனங்கள் என்று பார்த்தால் தொடக்கம் முதலே திரைக்கதையில் எட்டிப் பார்க்கும் ஒருவித தடுமாற்றம். பிரச்சாரம் தொடர்பான காட்சிகளில் எந்தவித சுரத்தையும் இன்றி காட்சிகள் ரிப்பீட் ஆவது போன்ற உணர்வை தவிர்க்க இயலவில்லை. நகைச்சுவைதான் இத்தொடரின் அடிநாதம். அது இந்த சீசனில் பெருமளவில் மிஸ் ஆகிறது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைப் போல ஒவ்வொரு சீசனில் ஏதோவொரு எமோஷனல் அம்சங்கள் தவறாமல் இடம்பெறும். இதிலும் அப்படியானதொரு விஷயத்தை படக்குழு முயற்சி செய்துள்ளது. ஆனால், அது வைக்கப்பட்ட சூழலும், அந்தக் காட்சியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
க்ளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்ட விதம் நிச்சயம் ‘பஞ்சாயத்’ ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தரும். பார்ப்போம், அடுத்த சீசனில் இதை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்று. கடந்த சீசன்களைப் போலவே சந்தன் குமாரின் ஒளிப்பதிவு, அனுராக் சைகியாவின் பின்னணி இசை ஆகியவை சிறப்பு.
ஒட்டுமொத்தமாக இந்த சீசன் தனது அடித்தளத்திலிருந்து விலகி, அரசியல் ரீதியாக செல்வதை எத்தனை பேர் ரசிப்பார்கள் என்று தெரியாது. குறைவான நகைச்சுவை, எதிர்பாராத க்ளைமாக்ஸ், உணர்வுபூர்வ காட்சிகள் இல்லாமை போன்ற குறைகள் இருந்தாலும் முந்தைய சீசன்களைப் போலவே எந்த தொய்வும் இல்லாமல் செல்வதால் தாராளமாக பார்க்கலாம். அமேசான் ப்ரைம் தளத்தில் காணக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT