Last Updated : 13 Jun, 2025 09:40 AM

 

Published : 13 Jun 2025 09:40 AM
Last Updated : 13 Jun 2025 09:40 AM

Straw: எதிர்பாராத ட்விஸ்ட், ஏழ்மையின் விலை, நெஞ்சை உலுக்கும் துயரம் | ஓடிடி திரை அலசல்

வாழ்வின் நெருக்கடியான கட்டத்துக்கு நடுவே அரிய வகை நோயால் அவதிப்படும் தன் பதின்பருவ மகளை காப்பாற்றி வருபவர் ஜனாயா (Taraji P Henson). வீட்டு வாடகை பாக்கி, தான் வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை நெருக்கடி என ஏற்கெனவே இக்கட்டில் இருக்கும் ஜனாயாவுக்கு, அவரது மகள் படிக்கும் பள்ளியில் மதிய உணவுக்கான சொற்ப தொகையை கூட கொடுக்க வழியில்லை.

அந்தப் பணத்தை புரட்ட செல்லும் அவருக்கு அடுத்தடுத்து தொடர் துரதிர்ஷ்டவசமான இன்னல்கள் ஏற்படுகின்றன. இவை பூதாகரமாக வெடித்து நாடே உற்றுநோக்கும் குற்றவாளியாக முத்திரை குத்தப்படுகிறார் ஜனாயா. தனது மோசமான சூழலில் இருந்து மீண்டாரா? அவரது மகளின் நிலை என்ன? இவற்றை மிகவும் ஆழமாகவும், உலுக்கும் வகையில் பேசுகிறது ‘ஸ்ட்ரா’ (Straw) திரைப்படம்.

பொருளாதாரத்தில் எவ்வளவு உயரத்துக்கு சென்றபோதிலும் அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான பார்வையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் பெரியளவில் மாறவில்லை என்பதை இயக்குநர் டைலர் பெர்ரி துல்லியமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இதுமட்டுமின்றி படம் ஒரு முக்கியமான கருத்தையும் முன்வைக்கிறது. படத்தில் வரும் “ஏழையாக இருப்பவர்கள் கொடுக்கும் விலையை பணம் படைத்தவர்கள் ஒருபோதும் அறிந்துகொள்வதில்லை” என்ற வசனம் வாழ்க்கையில் நிதர்சனத்தை முகத்தில் அறைகிறது.

பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டாராஜி பி ஹென்சன் நடிப்பில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறார். முதல் காட்சியிலிருந்து இறுதி வரை துயரம் தாங்கிய முகத்துடன் சமூகத்தின் மீதான விரக்தியை வெளிப்படுத்தி இதயத்தில் இடம்பிடிக்கிறார். அதேபோல போலீஸ் அதிகாரியாக வரும் டெயானா டைலர் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். வங்கி உள்ளே இருக்கும் ஜனாயா உடன் அவர் தொலைபேசியில் பேசும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. வங்கி ஊழியராக வரும் பெண் ஈர்க்கிறார். ஜனாயா கதாபாத்திரம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காட்சிப்படுத்திய விதம் நெஞ்சை உலுக்கி விடுகிறது.

படத்தின் பிரச்சினை என்னவென்றால் ஒரே நாளில் நடக்கும் கதையில், பிரதான கதாபாத்திரம் எதிர்கொள்ளும் அடுத்தடுத்த இடையூறுகளில் சில வலிந்து திணிக்கப்பட்டவையாக ஒரு கட்டத்தில் தோன்றி விடுகிறது. உதாரணமாக, மகளின் அறிவியல் ப்ராஜெக்ட்டை கையிலேயே சுமந்து கொண்டிருக்கும் ஜனாயா, அதை டைம் பாம் என நினைக்கும் வங்கி ஊழியர்கள் போன்ற காட்சிகளை சொல்லலாம். அதேபோல சாலையில் தன்னுடன் தகராறில் ஈடுபடும் போலீஸ்காரர் ‘உன்னை கொன்றுவிடுவேன்’ என்று சொன்ன வார்த்தைக்காக, போலீஸில் ஜனாயா சரணடைய மறுப்பதாக வரும் காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை. அதற்கு இன்னும் வலுவான காரணத்தை சொல்லி இருக்கலாம்.

படத்தின் இறுதியில் வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நிச்சயம் படம் முடிந்த சில மணி நேரங்களுக்கு அது நம்மை வேறு எதை பற்றியும் யோசிக்க விடாது.

சில படங்கள் அதன் சிறப்பான திரைக்கதை, மேக்கிங் உள்ளிட்ட அம்சங்களுக்காக திரும்ப திரும்ப பார்க்கத் தூண்டும். ஆனால் ‘ஸ்ட்ரா’ போன்ற படங்களை, அவை கொண்டிருக்கும் நெஞ்சை பதறவைக்கும் தருணங்களால் திரும்ப பார்ப்பது கடினம். எனினும் சில லாஜிக் ஓட்டைகள், நம்பகத்தன்மையற்ற காட்சிகள் இருந்தாலும் முகத்தில் அறையும் நிஜத்தை உரக்கச் சொன்ன இப்படம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x