Last Updated : 28 Apr, 2025 09:44 AM

 

Published : 28 Apr 2025 09:44 AM
Last Updated : 28 Apr 2025 09:44 AM

Superboys of Malegaon: ஓர் அட்டகாசமான உணர்வுபூர்வ பயோபிக் | ஓடிடி திரை அலசல்

2008ஆம் ஆண்டு ஃபாயிஸா அஹமது கான் இயக்கிய ‘சூப்பர் மேன் ஆஃப் மாலேகான்’ என்ற ஆவணப் படத்தை அடிப்படையாகக் கொண்டு ‘சூப்பர் பாய்ஸ் ஆஃப் மலேகாவ்’ (Superboys of Malegaon) படத்தை உருவாக்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள் ஸோயா அக்தரும், ஃபர்ஹான் அக்தரும். மாலேகாவின் உள்ளூர் சினிமா தயாரிப்பில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நசீர் ஷேக் மற்றும் அவரது நண்பர்களின் வாழ்க்கையை பேசுகிறது ‘சூப்பர்பாய்ஸ் ஆஃப் மலேகாவ்’.

மலேகாவில் தனது அண்ணனுடன் சேர்ந்து வீடியோ பார்லர் நடத்திக் கொண்டிருப்பவர் நசீர் ஷேக் (ஆதர்ஷ் கவுரவ்). சார்லி சாப்ளின், ப்ரூஸ் லீ, ஜாக்கி சான் படங்களில் வரும் முக்கியமான காட்சிகளை வெட்டி ஒட்டி ஒரே படமாக தனது பார்லரில் திரையிட்டு அதன் மூலம் சம்பாதித்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் செய்வது சட்டவிரோதம் என்பதால் போலீஸார் ஒருநாள் பார்லருக்குள் புகுந்து அடித்து விரட்டுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நசீருக்கு நாமே ஏன் சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது. கையில் இருக்கும் டிஜிட்டல் கேமராவைக் கொண்டு, பிழைப்புக்காக தினக்கூலி வேலை செய்யும் தன் நண்பர்களின் உதவியுடன் ‘ஷோலே’ படத்தின் ஸ்பூஃப் ஆக ‘மலேகாவின் ஷோலே’ என்ற படத்தை எடுக்கத் தொடங்குகிறார். அதை பார்லரில் திரையிட்ட உடன் பெரும் வரவேற்பை பெறுகிறது. இதன் பின்னர் நசீர் ஷேக் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் பல சிக்கல்கள் எழுகின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் திரைக்கதை.

அசாதாரண கனவுகளைக் கொண்ட சாதாரண மனிதர்களின் கதையை மிகவும் யதார்த்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ரீமா காக்டி. வாழ்க்கை என்பது வெற்றிகளால் மட்டுமே நிரம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும், தோல்வி கொடுக்கும் வாழ்க்கை பாடத்தையும் செவ்வனே காட்சிப்படுத்தியிருக்கிறார்.

நசீர் ஷேக் தான் இந்தக் கதையின் பிரதான முகம் என்றாலும், அவரைச் சுற்றி இருக்கும் ஃபரோக், ஷஃபீக், அக்ரம், ஷபீனா, த்ருப்தி என ஒவ்வொரு கதாபாத்திரம் அவ்வளவு கனமும் ஆழமும் பொருந்தியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதாபாத்திரங்கள் ஒன்றிணையும் புள்ளியில்தான் இப்படத்தின் ஆன்மா அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

ஃபரோக் - நசீர் மோதல், மனைவி ஷபீனாவுக்கும் நசீருக்கும் இடையிலான உறவு, ஷஃபீக் - த்ருப்தி என ஒவ்வொரு உறவும் ஓர் அழகான கதையை சொல்கிறது. இதனை தொடக்கம் முதல் இறுதி வரை ஆடியன்ஸுடன் உணர்வுபூர்வமாக ஒன்றச் செய்து சிரிக்க, கண்கலங்க, புன்னகைக்க செய்தது தான் இயக்குநரின் வெற்றி.

படத்தின் மிகப் பெரிய பலம் அதன் நடிகர்கள். ஆதர்ஷ் கவுரவ், ஃபரோக் ஆக வரும் வினீத் குமார் சிங், மஞ்சரி பூபாலா என அனைவரும் மெச்சத்தகுந்த நடிப்பை தந்திருக்கின்றனர்.

சச்சின் - ஜிகாரின் பின்னணி இசை காதுகளுக்கு இனிமை. குறைகள் என்று பார்த்தால் ஃப்ரோக் கதாபாத்திரத்துக்கு இன்னும் முக்கியத்துவம் தந்திருக்கலாம். நசீர் உடனான மோதலுடன் மட்டுமே அந்த கேரக்டர் முடிந்துவிட்டதாக தோன்றுகிறது. அதேபோல நசீரின் வாழ்வில் நடந்த ஏற்ற இறக்கங்களை கொஞ்சம் ஆழமாக காட்டியிருக்கலாம். மாறாக, போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றது பெரிதாக ஒட்டவில்லை. சின்ன சின்ன குறைகளை தாண்டி நிச்சயம் இப்படம் இந்தி சினிமாவில் இருந்து வரவேற்கத் தகுந்த முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை.

மலேகாவ் உள்ளூர் சினிமாவில் கொடிகட்டி பறந்த ஒருவரின் கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை நேர்த்தியாகவும் உணர்வுபூர்வமாகவும் சொன்ன வகையில் ‘சூப்பர்பாய்ஸ் ஆஃப் மாலேகான்’ படக்குழுவை மனதார பாராட்டலாம். அமேசான் ப்ரைமில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x