Published : 18 Apr 2025 10:36 AM
Last Updated : 18 Apr 2025 10:36 AM
மார்வெல் என்றாலே பலருக்கும் தெரிந்த சூப்பர் ஹீரோக்கள் என்ற அடிப்படையில் அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன் ஆகியோர்தான் உடனடியாக நினைவுக்கு வருவர். ஆனால் மார்வெல் காமிக்ஸில் இவர்களுக்கு இணையாக சக்திவாய்ந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் உண்டென்றால் அது டேர்டெவில்தான்.
பகலில் பார்வையற்ற வழக்கறிஞராகவும், இரவில் மக்களை காக்கும் ‘விஜிலான்டி’ ஆகவும் இருக்கும் கதாபாத்திரம். 2003ல் பென் அஃப்லெக் நடிப்பில் திரைப்படமாக வெளியாகி படுதோல்வி அடைந்து, அதன் பிறகு 2015 முதல் வெப் தொடராக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடைசியாக 2018ஆம் இதன் 3வது சீசன் வெளியாகியிருந்தது. இதனையடுத்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் தொடர்ச்சியாக ‘டேர்டெவில்: பார்ன் அகைன்’ என்ற தொடர் மார்வெல் சினிமாடிக் யுனிவர்சின் ஓர் அங்கமாக வெளியாகியுள்ளது.
தனது நெருங்கிய நண்பர் ஃபாகி கொல்லப்பட்ட பிறகு ஒரு வருடகாலமாக டேர்டெவில் ஆக மக்களை காப்பாற்றுவதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் மேட் மர்டாக் (சார்லி காக்ஸ்). இன்னொரு பக்கம் நியூயார்க்கின் மிகப்பெரிய மாஃபியா கும்பல் தலைவனான வில்சன் ஃபிஸ்க் / கிங்பின் நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
நகரத்தில் இருக்கும் விஜிலான்டிக்களை ஒழிப்பதே தலையாய கடமை என தீவிரமாக செயல்படுகிறார். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். அவருக்கு பெரும் தலைவலியாக ம்யூஸ் எனப்படும் சீரியல் கில்லர் தொடர் கொலைகளை அரங்கேற்றி வருகிறார். பரம எதிரிகளான வில்சன் ஃபிஸ்க்-க்கும் டேர்டெவிலும் மோதிக் கொண்டார்களா? இறுதியில் என்னவானது என்பதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யம் குறையாமலும் சொல்கிறது இந்தத் தொடர்.
பழைய டேர்டெவில் தொடரின் ரசிகர்களை தவிர வழக்கமான மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் ரசிகர்கள், இந்தத் தொடர் பற்றி அறிவிப்பு வந்த நாள் முதலே பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். காரணம் டேர்டெவில் கதாபாத்திரம் இதுவரை எந்த எம்சியு படங்களில் இடம்பெறவில்லை. இன்னொரு காரணம், ‘ஷீ- ஹல்க்’ வெப் தொடரில் சக்திவாய்ந்த டேர்டெவிலை மிகவும் மொக்கையாக, காமெடி பீஸாக காட்டியிருந்தனர்.
இதனால் பெரிய ஹைப் எதுவுமின்றி வெளியான இத்தொடர் 2வது எபிசோடில் இருந்தே சமூக வலைதளங்களில் மிகப் பெரிய கவனம் பெறத் தொடங்கி விட்டது. காரணம், வழக்கமான மார்வெலின் டிரேட்மார்க் ஆன கலர்ஃபுல் பாணி அல்லாமல் மிகவும் சீரியஸ் டோனில், அதே நேரம் ஆழமான காட்சியமைப்புகளுடன், விறுவிறுப்பான திரைக்கதையுடன் இத்தொடர் உருவாக்கப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட பெரும்பாலான எபிசோட்களில் நாயகன் மேட் மர்டாக் டேர்டெவில் காஸ்ட்யூம் போடுவதில்லை. ஆனாலும் எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குன்றாமல் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒயிட் டைகர் எனப்படும் ஒரு விஜிலான்டிக்காக மேட் மர்டாக் நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகள் ஓர் உதாரணம்.
இத்தொடரில் பாராட்டப்பட வேண்டிய மற்றொரு விஷயம், பழைய வெப் தொடரில் நடித்திருந்த அத்தனை நடிகர்களையும் மாற்றாமல் அப்படியே இதிலும் பயன்படுத்தி இருந்ததுதான். மேலே சொல்லப்பட்டிருப்பதுதான் மெயின் கதை என்றாலும், தொடர் முழுக்க வரும் ஏராளமான கிளைக் கதைகளும் அவற்றை இடம்பெற செய்த விதமும் சிறப்பு.
குறிப்பாக ஒயிட் டைகர், பாயிண்டெக்ஸ்டர், கிங்பின்னுக்கும், அவரது மனைவிக்கும் இடையிலான விரிசல், பனிஷர் கேமியோ என தொடர் முழுக்க கவனித்தக்க நுணுக்கங்களை இடம்பெறச் செய்துள்ளது தொடரின் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது.
டேர்டெவில் கதாபாத்திரத்தின் சிறப்பம்சமே அதன் புத்திகூர்மையும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும்தான். அவை இரண்டுமே இதில் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. டேர்டெவில், கிங்பின் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் மிக குறைவு என்றாலும், இருவரது தன்மைகளையும் ஒப்பிடும் விதமாக வைக்கப்பட்ட தருணங்கள் அபாரம். டேர்டெவில் கதாபாத்திரம் அதிகமாக திரையில் தோன்றாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். எனினும் திரைக்கதையாக அது எந்த சலிப்பையும் தரவில்லை.
பழைய டேர்டெவில் தொடரை பார்க்காதவர்கள் கூட யூடியூபில் சிறியளவில் முன்கதையை மட்டும் தெரிந்து கொண்டு இதனை பார்க்கலாம். ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லர் தொடரை பார்த்த அனுபவத்தை ‘டேர்டெவில்: பார்ன் அகைன்’ கொடுக்கும். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழிலும் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT